லாலுவுக்கு பிணை: மூன்றரை ஆண்டுகளுக்கு பின் விடுதலையாகிறார்

புதுடில்லி, ஏப்.18 கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜார்கண்டின் ராஞ்சி உயர் நீதிமன்றம் மூன்றாவது வழக்கிலும் பிணை வழங்கியுள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் இருப்பவருக்கு வெளியில் வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 சிபிஅய்யால் விசாரணை செய்யப்பட்ட இவ்வழக்கில் லாலுவிற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இதனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஜார்க்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் லாலு. இதில் சில மாதங்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக லாலு டில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் மீதான முக்கிய மூன்று வழக்குகளில் இரண்டில் மட்டுமே லாலுவிற்கு பிணை கிடைத்திருந்தது.

இதன் காரணமாக, சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல் இருந்த லாலுவிற்கு இன்று மூன்றாவது வழக்கிலும் பிணை கிடைத்துள்ளது. இது சட்டவிரோதமாக தும்காவின் கரூவூலத்தில் லாலு பணம் பெற்றதன் வழக்கு ஆகும்.

லாலுவின் உடல்நிலையை அவரது குடும்பத்தார் சுட்டிக் காட்டி பிணை கேட்டு வந்தனர். தொடர்ந்து பலமுறையாக நிராகரிக்கப்பட்ட லாலுவின் பிணை அவரது தண்டனைக் காலத்தில் பாதியை சிறையில் கழித்த பின் கிடைத்துள்ளது.

இவரது பிணை நிபந்தனைகளின்படி, லாலு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பிணை பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். அவரது தண்டனையில் விதித்திருந்த ரூ.10 லட்சத்தையும் லாலு செலுத்த வேண்டும். பீகாரில் அவர் தங்கும் குடியிருப்புடன், லாலுவின் அலை பேசி எண்ணையும் மாற்றக் கூடாது. இந்த பிணையில் வெளி நாடுகளுக்கு செல்லவும் லாலுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments