“சாஷ்டாங்க நமஸ்காரம் மு.க. ஸ்டாலின்ஜி!”

மின்சாரம்

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர் களே! நீங்கள் முதல் அமைச்சர் ஆகப் போவது திண்ணம் என்று அறிந்ததால் முன் கூட்டியே “மாண்புமிகு” என்று அழைக்கிறோம். கால் கை (காக்கா) பிடிப்பதுதான் எங்களின்  பரம்பரைக்  குணம் என்பது தங்களுக்குத் தான் ‘பேஷா’ தெரியுமே!

சென்ட்ரலிலும், ஸ்டேட்டிலும் முறையே எங்களவா ஆட்சியும், அதற்கு அடிமைப்பட்ட ஆட்சியும் இருந்ததால் நாங்கள் ஏதோ ‘தத்துப் பித்து’ன்னு உளறியிருப்போம்.

பெரிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதையெல்லாம் மனஸில வச்சிக்காதீங்கோ!

‘ஸ்ரீவீரமணியிடமிருந்து விலகி இருங்கோ’ என்று சொல்லிப் பாத்தோம் நீங்கள் கேக்கலை - இப்படியெல்லாம் ‘மித்திரபேதம்‘ செய்வதெல்லாம் எங்கள வாள் ரத்தத்திலேயே பிறந்தது- அதை யெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கோ!

நாயக்கர் சிலைக்கு எங்களவாள் தூண்டுதலால் ஆங்காங்கே விஷமங்கள் நடந்தது வாஸ்தவம்தான். இனிமே அதெல்லாம் நடக்காதுன்னு எங்களுக்கு நன்னாதெரியும்.

ஈ.வெ.ரா. சாலை என்னும் பெரியார் பெயரை மாத்தியிருக்கா - அதெல்லாம் பிசகு.

இதற்காக ‘டுவிட்டரில்’ தாங்கள் எழு திய வாசகத்தில் உஷ்ணம் அதிகமாயிருந் ததை நாங்கள் புரிந்துகொண்டோம் - இனிமேல் நாங்கள் ‘உஷாரா’ இருப் போம்!


‘விஜயபாரதம்', 16.4.2021 - பக்கம் 34
இந்தக் கார்ட்டூனுக்குப் பதிலடி தான் நமது கட்டுரையும் கார்ட்டூனும்!

அனைத்து ஜாதியினரையும் ஹிந்துக் கோயில்களில் வேக வேகமாக அர்ச்ச கராக நியமிப்பேள். அது எங்கள் அஸ் திவாரத்தில் கை வைக்கும் வேலைதான். ஆனாலும் நாங்கள் என்ன செய்யட்டும் - எங்களையும் கொஞ்சம் கவனிச்சிக் கிங்கோ!

ஜெயலலிதாதான் எங்களவாளில் கடைசி சீஃப் மினிஸ்டர்.  அதைத் தெரிஞ்சுதான் எங்கள் ஜெகத் குருவை   ‘அரஸ்ட்’ செய்து ஜெயிலில் தள்ளியபோதுகூட, உணர்ச்சி வயப்படாமல், மிகவும் புத்தி சாலித்தனமாக (இதை உங்களவா எங்க ளிடம் கத்துக் கொள்ள வேண்டிய விஷ யம்) ஜாக்கிரதையாக ஜெயலலிதாவை விழுந்து விழுந்து ஆதரிச்சோம்!

எதிர் காலத்திலே உங்களவாள்தான் ஆட்சிப் பீடத்திலே இருப்பா - உங்களை தாஜா பண்ணிதான் எங்கக் காலத்தை வோட்டணும்.

சிறுபிள்ளைத்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது குத்துக் கல்லாட் டம் (காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந் திர சரஸ்வதி கூறுவது) நான் உட்கார்ந் திருந்தது தப்புதான்! தமிழ் என்பது எங்கள் கண்ணோட்டத்தில் நீஷப் பாஷை. திருக்குறள் மனு தர்மத்தின் சாரம் என்று சொல்லுவது - நம்புவ தெல்லாம் எங்களுக்கே உரித்தானவை தான்!

திடீர்’னு இவற்றையெல்லாம் மாத்திக் கிறது என்பது பஷ்டமான கஷ்டம்! எங்க நிலையைப் புரிஞ்சிக்கிங்கோ!

எங்களவாளில் சில அதிகப் பிரசங்கி அபிஷ்டு ராஜாக்கள் இருக்கா - அவங்களாலே எங்களுக்கு எப்போதும் ரோதனைதான்!

வீரமா பேசுவா - அடுத்த நிமிஷமே மன்னிச்சிடுங்கோ என்று காலைப் பிடிப்பா, அவங்களை வச்சு தயவு செய்து எங்களையும் அந்த லிஸ்டில்  சேர்த் திடாதீங்கோ!

ஆர்.எஸ்.எஸ். மெகசினான ‘விஜய பாரத’த்துக்கு எப்பொழுதும் கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகம்.

அதுல ஒரு கார்ட்டூன் போட்டிருக்கா! நீங்க நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், வீரமணியும், சுப.வீர பாண்டியனும் உங்க (மு.க.ஸ்டாலின்) காலைப் பிடிச்சிக் கெஞ்சுவது போலவும் போட்டிருக்கா.!

அதெல்லாம் முட்டாள்தனம் - வீண் வம்பை விலைக்கு வாங்கும் விஷமம் . 

அனுகூல சத்ரு என்ற ஒன்று உண்டு. அதுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்கள் - அதன் வார இதழ்தான் ‘விஜயபாரதம்‘  அதையெல்லாம் காலைப்பிடிச்சிக்  கேட்கிறோம், அலட் சியப்படுத்துங்கள்.

1946இல் சேலத்தில் நடைபெற்ற பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர் களுக்கு நல்ல புத்தியைக் காட்டும் வகையில் சர். சி.பி. ராமசாமி அய்யர் சொன்னதை யெல்லாம் மறந்த காரணத் தால் நாதியில்லாமல் நடு ரோட்டில் நிக்கிறோம்.

‘பிராமணர்களே!

இடஒதுக்கீட்டை கிண்டல் செய்யா தீர்கள் - எதிர்க்காதீர்கள்’ என்றார். ‘பிராமணரல்லாதாரை ஏளனம் செய் தால் சீரழிந்து வேரறுந்து போவீர்கள்’ என்று தொலைநோக்கோடு சொன்னார் சர். சி.பி. அய்யர். முட்டாள்தனமாகக் அவற்றை யோசிக்க மறுத்தோம். ‘விஜய பாரதம்‘ அப்படித்தான் வீரமணியையும், சுப.வீ.யையும் ஏளனம் செய்து கார்ட்டூன் போட்டுள்ளது.

உங்கள் பாதார விந்தத்துக்குக் கோடிக் கோடி நமஸ்காரம்! எங்களைப் பெரிய மனசு வைத்து மன்னித்து விடுங் கள். உங்கள் வம்புக்கு இனி ஒருக்காலும் வர மாட்டோம், வரவே மாட்டோம்.

இப்படிக்கு

கு. மூர்த்தி

விஜயேந்திர சரஸ்வதி

குறிப்பு: எங்கள் தலைவர்களை இழிவு படுத்தினால் சங்கராச்சாரியார்களின்  ‘தி(தெ)ருவிளையாடல்கள்’  - அனுராதா ரமணனின் பேட்டிகள் என்று வண்டி வண்டியாக வெளிவரும் - எச்சரிக்கை!

Comments