எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!

 திருவள்ளுவர் சிலை வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, ஏப்.10  எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல், வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டு வாழ - இந்த சிலைகள் - அது தருகின்ற சீலம் உலகத்தைத் தொடட்டும் - உலகத் தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருவள்ளுவர் சிலை வழங்கல்

நேற்று (9.4.2021) சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர். அரங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, வட அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ்ச் சங்கங்களுக்கு 60 திருவள்ளுவர் சிலைகளை வழங்கும் விழாவிற்கு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

கொடை வள்ளலோடு சேர்ந்து

சிலை வள்ளலாகவும்...

வரலாற்று பெருமைமிகுந்த, உலக மக் களுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்துள்ள - இந்தக் கரோனா தொற்று காலத்தில்கூட - மற்றவர்கள் எல்லாம் அஞ்சவேண்டியதற்கு அஞ்சி உள்ளே இருக்கக் கூடிய நிலையில், நாம் அதையும் துணிந்து தாண்டி, வள்ளுவரை உலகெங்கும் அனுப்பு வதுதான் முதற்பணி என்ற அந்த சிறப்பான நோக்கத்தோடு, உலகத் தமிழ்ச் சங்கத்தை மிக அருமையாக நடத்தி, நல்ல அளவிற்கு ‘‘ஈதல் இசைபட வாழ்தல்'' என்ற பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நம்முடைய சிறந்த தொழிலதிபரும், தலைசிறந்த பண் பாளரும், எல்லோரும் கொடை வள்ளல் என்று சொல்லுவார்கள் - கொடை வள்ளலோடு  சேர்ந்து சிலை வள்ளலாகவும் இவர் மாறிக் கொண்டிருக்கிறார் என்ற பெருமைக்குரிய ஓர் இடத்தில் இருக்கக்கூடியநம்முடைய அண்ணாச்சி' என்று எல்லோராலும் அன்போடு, பாசத்தோடு அழைக்கப்படக்கூடிய அய்யா டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களே,

அதேபோல, தமிழ் இலக்கிய உலகத்தில், எவரும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத ஓர் உயரத்தில், எம் இனத்துத் தமிழர் உயர்ந்தார் என்ற பெருமைக்கு என்றைக்கும் உரியவராக இருக்கக்கூடிய அருமை சகோதரர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே,

இந்நிகழ்ச்சியில், அருமையான ஒரு வாய்ப்பை நமக்கெல்லாம் அளித்து நம்மை வரவேற்ற, விஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அருமைச் சகோதரர் விஜிபி ரவிதாஸ் அவர்களே,

பகுத்தறிவு சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்த அருமைச் சகோதரர் கால்டுவெல் வேள்நம்பி

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏற்புரையாற்றிய, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் மிக சிறப்பான முறையில் தொண்டாற்றக்கூடிய நிறுவனமாகும் - பல நேரங்களில், சிகாகோவை தலைநகரமாக வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற  தமிழ்ச்சங்கத்தின் சார்பாக, இந்த சிக்கலான நேரத்தில்கூட, நேரில் வந்து பெறவேண்டும் என்பதற்காக, பல தடைகளை யெல்லாம் தாண்டி இங்கே வந்து, 60 திருவள்ளுவர் சிலைகளைப் பெற்று, வட அமெரிக்கா உள்பட பல நிறுவனங்களில்  நிறுவக்கூடிய ஒரு அற்புதமான தொண்டறத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, இங்கே வந்திருக்கக்கூடிய பாரம்பரியமிக்க பகுத்தறிவு சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்த அருமைச் சகோதரர் மானமிகு கால்டுவெல் வேள்நம்பி அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பான வகையில் பங்கேற்கக் கூடிய அருமைச் சான்றோர் பெருமக்கள் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களே, இயக்குநரும், நடிகரு மான பாண்டியராஜன் அவர்களே,

நீதியரசர் அய்யா வள்ளிநாயகம் அவர்களே, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்  கோ.விசயராகவன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் மல்லை சத்யா அவர்களே,

பெருங்கவிக்கோ வா.மு.சே. அவர்களே, டி.கே.எஸ்.கலைவாணன் அவர்களே, பேராசிரியர் உலக நாயகி பழனி அவர்களே, கழகப் பொருளாளர் கும ரேசன் அவர்களே, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் வில்வநாதன் அவர்களே,

ஜானகி எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனத்தை சிறப்பாக நடத்தக்கூடிய தாளாளர் அருமைத் தோழர் லதா அம்மையார் அவர்களே,

இந்நிகழ்விற்கு சிறப்பாக வந்திருக்கின்ற சான்றோர் பெருமக்களே,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கும்

வள்ளுவரை சேர்த்திருக்கிறார்

‘‘வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'' என்ற பாரதியாரின் வரியை அடிக்கடி எல்லோரும் பாடிக் கொண்டிருக் கிறார்கள்.

எல்லோரும் பாடினோம், ஆடினோம், சுவைத் தோம். ஆனால், வள்ளுவன் தன்னை உலகினிற்கே தரக்கூடிய, தந்துகொண்டிருக்கின்ற பணியை நம்முடைய விஜிபி சந்தோசம் அய்யா அவர்கள் சிறப்பாக செய்து வந்து உலகெங்கும் வள்ளுவரை சேர்த்திருக்கிறார்.

வள்ளுவரைப் படித்தால் மட்டும் போதாது; வள்ளு வருக்குப் பெருமை சேர்க்கவேண்டும்; வள்ளுவம் என்பது மனித குலத்திற்குத் தேவையான ஒரு மாமருந்து. அதுவும் இந்தக் காலகட்டத்தில் மிகமிக முக்கியமானது.

உங்களுக்குத் தெரியும், இங்கே நாம் எல்லோரும் முகக்கவசத்தோடு இருக்கிறோம்; அது மிகமிக அவசியம். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத விஷக் கிருமிகள் - எப்படியெல்லாம் உள்ளே நுழை யும், எப்பொழுது நுழையும் என்று யாராலும் சொல்ல முடியாது என்ற வேதனையில், உடனடியாகத் தடுப்ப தற்கு முகக்கவசம். நிரந்தரமாக அல்லது பெருமள விற்குத் தடுப்பதற்கு தடுப்பூசி. அந்தத் தடுப்பூசி  போடுவதுதான் - அந்த விஷக் கிருமிகளையெல்லாம் ஒடுக்குவது என்று நாம் இன்றைக்கு அறிவியல் ரீதியாகப் பார்ப்பதைப்போல, மதவெறி, ஜாதிவெறி, குறுகிய எண்ணங்கள், சமுதாயத்தில் ‘‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கக் கூடிய தன்மை'' இவற்றை யெல்லாம் போக்கி, மனிதம் என்று சொன்னால், மற்றவர்களை மதிப்பது - அறிவுக்கு முன்னுரிமை கொடுப்பது. அதுபோல், மானத்திற்கு முன்னுரிமை கொடுப்பது - எல்லாருக்கும் எல்லாமும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறப்பாக வாழ்வது - ஒத்த அறிவோடு வாழ்வது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து - வருகிற நோய்க்கெல்லாம் பரிகாரம் தேடக்கூடிய ஒரே தடுப்பூசி வள்ளுவம்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற பல நோய்களுக்குச் சரியான தடுப்பூசி வள்ளுவம்!

எனவேதான், இன்றைய மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற பல நோய்களுக்கு சரியான தடுப்பூசி வள்ளுவம். அந்த வள்ளுவத்தை நாம் பயன்படுத்தவேண்டும்.

வள்ளுவம் என்பது மாமனிதம். இது இந்த மதத்துக்குச் சொந்தம்; இன்ன ஜாதிக்குச் சொந்தம்; இந்த நாட்டுக்குச் சொந்தம் என்று சொல்ல முடியாத அளவிற்கு - உலக தத்துவ ரீதியாக இருக்கக் கூடியது.

1948 இல் சென்னையில்

திருக்குறள் மாநாடு

திருவள்ளுவருடைய திருக்குறள்தான் நம்முடைய வாழ்க்கை நெறியாக இருக்க வேண்டும் என்ற அளவில், எந்த மண்ணிலே வள்ளுவம் தோன்றியதோ, அந்த மண் ணிலேகூட ஓர் இலக்கிய நூலாக - புலவர் வீட்டு புத்தக அலமாரியில் மட்டுமே இருந்த வள்ளுவத்தை, வள்ளுவருடைய திருக்குறளை, பொதுமக்கள் அரங்குக்குக் கொண்டு வந்த பெருமை - 1948 இல் சென்னையில் திருக்குறள் மாநாடு கூட்டி, தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா  போன்றவர்கள், புலவர் களையெல்லாம் அழைத்து, அறிஞர்களை யெல்லாம் அழைத்து இரண்டு நாள்கள் மாநாடு நடத்தியது பழைய வரலாறு.

அதற்குப் பிறகு வள்ளுவம் எல்லோருடைய கைகளிலும் தவழ ஆரம்பித்தது. உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருக்கும், எதிலும் சிக்கனமாக இருக்கும் தந்தை பெரியார், நாலணாவிற்கு திருவள்ளுவருடைய திருக்குறளை அச்சிட்டு, 1948 இல் எல்லா மக்கள் மத்தியிலும் பரப்பினார்கள். அப்படி பரப்பியது மட்டுமல்ல, எல்லோரும் வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாகக் கொள்ளவேண்டும். அப்படி வாழ்க்கை நெறியாகக் கொண்டால், பல்வேறு சிக்கல்கள் தானாகத் தீரும் என்ற அளவில், மிக அருமையான கருத்தை சொல்லுகிறபொழுது, அந்தக் கருத்தை வேகமாகப் பரப்பினார்கள்.

கருத்து மாறுபாடுகளுக்கு இடமில்லை; சிறந்த அறிஞர் பெருமக்கள்; தெ.பொ.மீ. போன்றவர்கள், சக்கரவர்த்தி நாயனார் போன்றவர்கள், பல மறைந்த பெரியவர்களை, நாவலர் சோமசுந்தர பாரதியார்  போன்றவர்களையெல்லாம் அழைத்து திருக்குறள் மாநாட்டினை இரண்டு நாள்கள் நடத்தினார். அண்ணா அவர்கள், அந்த மாநாட்டில் நாடகம் கூட நடத்தினார்கள்.

திருக்குறள் புலவர்களுடைய ஆராய்ச்சிக்குரியது என்ற நிலை மாற்றப்பட்டது!

அப்படிப்பட்ட அந்தத் திருக்குறள் மாநாட் டிற்குப் பிறகு, தமிழ்நாடு முழுக்க திருக்குறள், பாமர மக்கள் கைகளில் சென்றது. படித்தவர் களுடைய பொருள் அல்லது புலவர்களுடைய ஆராய்ச்சிக்குரியது என்ற நிலை மாற்றப்பட்டது.

அதற்குப் பிறகு,  குறளை உள்ளபடியே உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்கின்றபொழுது, வள்ளுவருடைய பெருமை மேம்பட்டபொழுது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பணியாற்றி இருக்கிறார்கள்.

அந்த வகையில், அய்யா டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்து சிறப்பாக எல்லோருடனும் தொடர்பு கொண்டு, வெறும் பெயரளவில் உலகத் தமிழ்ச் சங்கமாக இதனை ஆக்காமல், நடைமுறையிலேயே உலகத்தோடு தொடர்புடையவர்கள் என்ற அளவில் கொண்டு வந்து, பற்பல நாடுகளிலும் இதனை வழங்கினார்கள். சில இடங்களில் நாங்களேகூட சென்றிருக்கின்றோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில்  திருவள்ளுவர் சிலையைத் திறக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றபொழுது, நாங்கள் எல்லாம் அந்த நிகழ்வில் பங்குபெறக்கூடிய ஓர்  அரிய வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடைத்தது.

 உழைப்பால் உயர்ந்துள்ள குடும்பம்

வி.ஜி.பி. குடும்பம்

அதை அவர் சலிப்பில்லாமல், தொய்வில் லாமல், எந்தவிதமான லாப நோக்கமோ, வியாபார நோக்கமோ இல்லாமல், தொண்டறம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அருமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பணி நம் அனைவருடைய நன்றிக்குரியது - பாராட்டுக் குரியது. அவர்கள் எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்க் கையில்.  உழைப்பால் உயர்ந்துள்ள குடும்பம் வி.ஜி.பி. குடும்பம். அவர்கள் பல பணிகளைச் செய்திருக்கிறார்கள்; பல துறைகளில் முத்தி ரைகளைப் பதித்திருக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் மகுடம் - எல்லாவற்றிற்கும் சிகரம் என்று சொல்லக்கூடிய ஒன்று இருக் கிறதென்றால், அது உலகெங்கும் வள்ளுவரைக் கொண்டுபோய் சிலையாக அமைத்து, பல இடங்களிலும், பல நாடுகளிலும் கொடுத்தார்கள் என்பதுதான் மிக முக்கியமானது.

அந்த வகையில், மிக முக்கியமாக அந்த சிலையை, வள்ளுவருடைய சிலையாக அதைப் பார்க்கக் கூடாது; உருவத்தில் அது சிலை - கொடுக்கப்படுவது - அனுப்பப்படுவது சிலை. ஆனால், அது சீலம் - அந்த சீலம் உலகம் முழுவதும் பரவினால், குறுகிய நோக்கம் கிடையாது. மனிதர்களுக்குள்ளே பிரிவினை இருக் காது; மனிதர்களுக்குள்ளே வேற்றுமை இருக்காது; ஆண் - பெண் என்ற உறவிலேகூட பேதமில்லா பெருவாழ்வு இருக்கக்கூடிய அளவிற்கு இருக்கும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிகழ்ச்சிகள் இருந்தால், உலகத்தில் போராட்டங்களுக்கே இடம் கிடையாது. அதைத்தான் வள்ளுவம் சிறப்பாக நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி எத்தனையோ கோணங்களில் ஒவ்வொருவரும் விமர்சிப்பார்கள்.

ஆனால், வள்ளுவருடைய பணியை, பெரியார் அவர்கள் எந்தக் காலத்தில் சொன்னார் என்பதற்கு ஒரு சின்ன ஆதாரத்தைச் சொல்லி நான் என்னுரையை முடிக்கின்றேன்.

என்னை ஏன் அழைத்தார்கள்? எனக்கு என்ன உரிமை இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க? இதை உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். வெறும் நட்புரிமைக்கு மட்டுமல்ல - அதைவிட வள்ளுவருக்கு எவ்வளவு நெருக்கம் - வள்ளுவரைப் பரப்பியதில் எவ்வளவு பெரிய பங்காற்றக்கூடிய ஓர் இயக்கத்தைச் சார்ந்த ஒரு தொண்டன் என்ற முறையில், ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

விடுதலை'யில் வெளிவந்த

 ஒரு செய்தியைச் சொல்கிறேன்

என்னை அறிமுகப்படுத்திய நம்முடைய பேராசிரியர் அவர்கள், ‘விடுதலை' பத்திரிகையினுடைய ஆசிரியர் என்று சொன்னார்.  அந்த வகையில், ‘விடுதலை'யில் இருந்தே ஒரு செய்தியைச் சொல்கிறேன்.

3.4.1949 - பலர் பிறந்திருக்கமாட்டார்கள் இந்த அரங்கத்தில், சில மூத்தவர்கள் இளம் வயதினராக இருந்திருப்பார்கள்.

விருதுநகரில், பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த விருதுநகரில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. 1948 இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டவுடன் - நாடு முழுவதும் ஆங்காங்கே திருக்குறள் மாநாடுகள் நடைபெற்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு செய்தி.

இந்த அவை அறிவார்ந்த மக்கள் கூடியிருக்கின்ற அவை. நான் இங்கே இருப்பவர்களுக்காக மட்டும் பேசவில்லை - உலகம் முழுவதும் இந்த நிகழ்வினைப் பார்த்துக் கொண்டும், உரையைக் கேட்டுக்கொண்டும் இருக்கக்கூடிய அத்தனை  பேருக்கும் வரலாற்றுப் பதிவாக இது இருக்கவேண்டும் என்பதற்காக இதனைச் சொல்கிறோம்.

சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகு, அடுத்த மாநாட்டினை 3.4.1949 இல் விருதுநகரில் நடத்தினார்கள். தென்மாவட்டங்களில் நடத்தவேண்டும் என்று.

விருதுநகர் குறள் மாநாட்டுத் தீர்மானங்கள்

அந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் - ‘‘விருதுநகர் குறள் மாநாட்டுத் தீர்மானங்கள்'' என்பதாகும்.

இன்றைக்கும் அது தேவை - நாளைக்கும் அது தேவை.

இது அறிவார்ந்த மக்கள் இருக்கின்ற அவை - ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தொண்டாற்றக் கூடியவர்கள் - குறள் தொண்டாற்றக்கூடிய அமைப்புகள் - அமைப்பைச் சார்ந்த பெருமக்கள் - ஆன்றோர் பெருமக்கள் இங்கே இருக்கின்றீர்கள். அவர்கள் இதனை முன்னெடுக்கவேண்டும்.

1. ‘‘இப்பொழுதுள்ள கல்வித் திட்டத்தில், முதல் உயர்நிலை வகுப்பு பஸ்ட் பார்ம் தொடங்கி இளங்கலை பி.. வகுப்பு முடிய திருக்குறள் முழுவதும் படித்து முடிக்கும் வகையிலும், படிப்படியாக பாடத் திட்டம் வகுக்குமாறும், அதற்கென தனித்தாள்ஷேக்ஸ்பியர்' போல ஏற்படுத்துமாறு கல்வித் துறை அதிகாரிகளையும், பல்கலைக் கழங்களையும் இம்மாநாடு வேண்டுகிறது.''

2. ‘‘ஆட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக வருவோருக்கும், கல்விக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் தலைவராக வருவோருக்குரிய தகுதிகளில் திருக்குறள் புலமையும் ஒன்றாக வற்புறுத்துமாறு ஆட்சியாளரை வேண்டுகிறது.''

3. ‘‘திருவள்ளுவர் விழாவுக்கென ஒரு நாளைக் குறிப்பிட்டு அரசு விடுமுறை நாளாக்கி - அந்நாளை நாடெங்கும் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.''

(இந்தத் தீர்மானம்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது செய்த அரிய சாதனை).

4. ‘‘திருக்குறள் பற்றிய விழாக்கள், மாநாடுகள் முதலியவற்றின் நிகழ்ச்சிகளை அறிவிக்குமாறு, ஒலிபரப்புமாறு திருச்சி வானொலி நிலையத்தாரைக் கேட்டுக்கொள்கிறது.''

அந்தக் காலத்தில், வானொலியில் வள்ளுவர் நுழைய முடியாத காலம். யார் யாரோ நுழைந்தார்கள். ஆனால், வள்ளுவர் நுழைய முடியவில்லை. இதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றினார்கள் என்றால், அது சாதாரணமானதா? இன்றைக்குச் சட்டமன்றம் தொடங்கும்பொழுதுகூட, முதலில் ஒரு திருக்குறளைப் படிக்கின்ற ஒரு வாய்ப்பை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, ஆதித்தனார் அவர்கள் சபாநாயகராக இருந்த காலத்திலிருந்து ஆரம்பித்தார்கள்.

திருக்குறள் கருத்துகள் எங்கும் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!

எனவேதான், ‘‘எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள்'' என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல், வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டு வாழ - இந்த சிலைகள் - அவை தருகின்ற சீலம் உலகத்தைத் தொடட்டும் - உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும் என்று கூறி,

 போரற்ற புத்துலகை உருவாக்குவதற்கு வள்ளுவம் என்றைக்கும் நமக்குப் பேராயுதம்

வாய்ப்பளித்த உங்களுக்கும், இதனைப் பெறுவதற்காக வந்திருக்கின்ற நம்முடைய கால்டுவெல் வேள்நம்பி அவர்களுக்கும், அய்யா அவர்களுடைய அறத்தன்மை இன்னும் மேலும் வளரவேண்டும்; அவர்கள் பல்லாண்டு காலம் நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும்; உலகத்தில், எஞ்சியுள்ள நாடுகளுக்கெல்லாம் வள்ளுவரை அனுப்பவேண்டும்; வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து, இவர்களும் நீண்ட நாள் வாழ்ந்து - வள்ளுவர் கண்ட ஒரு புதிய மறுமலர்ச்சி சமுதாயத்தை - ஜாதியற்ற - பேதமற்ற - மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட - கட்சிகளுக்கு  அப்பாற்பட்ட - மனிதநேயத்தோடு இருக்கக்கூடிய மானுட சிந்தனையையும், மானுட நேயத்தை உருவாக்கக்கூடிய ஒரு புத்துலகை - போரற்ற புத்துலகை உருவாக்குவதற்கு வள்ளுவம் என்றைக்கும் நமக்குப் பேராயுதம் - ஒரு சிறந்த ஆயுதம் என்பதைக் கூறி,

அந்த வள்ளுவரின் சிலையை நாம் ஏற்றுமதி செய்வதன்மூலம், தமிழகம் பெருமைப்படுகிறது -  உங்களால் தமிழ்நாடு எல்லா நாடுகளிலும் வள்ளுவர்மூலமாகப் பெருமைப்படுகிறது.

நாங்கள் தலைவணங்கி நன்றி செலுத்துகிறோம்.

வாழ்க! வளர்க! பரவுக வள்ளுவம்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments