கோவையில் உணவு விடுதிக்குள் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குவதா?

காக்கிச் சட்டை குடிமக்களின் நண்பனே!

அத்துமீறிய ஆசாமிமீது கடுமையான நடவடிக்கை தேவை!

கோவை பேருந்து நிலையம் அருகில் உணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பயணிகளை உணவு விடுதிக்குள்ளே புகுந்து காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கியது கண்டனத்திற்குரியது. காவல்துறை குடிமக்களின் நண்பன் என்பதை மறந்துவிட்டு, மனித உரிமைக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்மீது கடுமையான நடவடிக்கை தேவை என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கோவை மாநகரத்தில் நேற்று முன்தினம் (11.4.2021) இரவு 10.30 மணிக்கு, மாநகர பேருந்து நிலையம் அருகே உள்ள ஓர் உணவு விடுதியில், சாப்பிட்டுக் கொண்டிருந்த பேருந்து பயணிகள் மற்றும் பசியாறுவோரை, அந்த உணவு விடுதிக்குள் புகுந்து, முத்து என்கிற காவல் நிலைய உதவி ஆய்வாளர் - பணியாளர்கள் உள்பட சாப்பிட்டவர்கள் பலரையும் தனது லத்தியால் அடித்து விரட்டி வெளியேற்றினார்; இந்த சம்பவம், எல்லா தொலைக்காட்சி, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளிவந்து உள்ளது!

கோவையில் காவல்துறையின் அத்துமீறல்!

கோவை மாநகர காவல்துறைக்கு மட்டுமல்ல - பொதுவாக காவல்துறைக்கே தலைக்குனிவையும், அவமானத்தையும், துடைக்க முடியாத களங்கத்தையும் ஏற்படுத்தும் அத்துமீறல் இது!

இரவு 11 மணிவரை உணவு விடுதிகள் இயங்க அரசு அனுமதித்திருந்தும், இந்த ‘‘வீராதி வீரர் சூராதி சூரர்கள்'' தனது அதிகாரத்தைக் காட்ட இப்படி சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள் உள்பட பலருக்கும் காயம் ஏற்படும்படி அடித்தது எவ்வகையில் நியாயம் - சட்டபூர்வமானது?

சராசரி மனிதத்தன்மைகூட காவல்துறையில் பணி புரிவோருக்கு இருக்கவேண்டாமா? ஒட்டுமொத்தக் காவல்துறையையும் நாம் குற்றம் சுமத்த விரும்பவில்லை; கடமையாற்றும் மனிதத் தன்மை உடையோர் அங்கும் இருக்கிறார்கள்; ஆனால், அது எண்ணிக்கையில் அத்திபூத்ததுபோலத்தான். காக்கி உடை காவல் உடை என்பதை மறந்துவிட்டு, வீண் ஜபர்தஸ்தும், பல அதிகாரிகள், விண்ணப்பதாரர்கள் கொடுக்கும் மரியாதையை பலவீனம் என்று எண்ணி அவர்களிடம் அதிகாரம் காட்டுவதும், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த ஓர் அணுவைக் கண்டும்சல்யூட்' அடிப்பதும் தேவையற்றது.

நேர்மையும், கடமை உணர்வும் உள்ள துறையாகவும், மக்களுக்கு உற்ற நண்பனாகவும் இருக்கவேண்டிய - துறை அல்லவா அத்துறை?

காவல்துறையினருக்குத் தேவை உளவியல் பயிற்சி

இரவு - பகல் பாராமல் கடமையாற்றும் அவர்களில் பலர் மன அழுத்தத்திற்கு (Stress- Depression) ஆளா வதும், சிலர்ஜபர்தஸ்து' காட்டினால்தான் தங்களை மற்ற பொதுமக்கள் மதிப்பார்கள் என்று தவறாகக் கருதி, ஆணவத்தின் நுனிக் கொம்பில் ஏறி ஆடுவதும், வன்முறைக்கு வாரிசுகளாக தங்களை வார்த்தெடுத்துக் கொள்வதும் விரும்பத்தக்கதல்ல.

காவல்துறையினருக்கு வெறும்யோகா' பய னளிக்காது; அவர்களது மன அழுத்தம் போக்கிட, அவ்வப்போது உளவியல் வல்லுனர்களால் - பயிற்சி வகுப்பு நடத்தப்படல் வேண்டும்.

தவறு செய்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் வெறும் இடம் மாற்றம் போன்ற கண் துடைப்பு ‘‘தண்டனை''களைத் தராமல் - பதவி நீக்கம் செய்து வழக்குப் போட்டு - துறை சார்ந்த கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அவர்களில்காட்டுமிராண்டித்தனமாக' நடக்கும் அதிகாரிகள் - முன்பு திருப்பூரில் ஒரு காவல்துறை அதிகாரி  ஒரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்த காட்சி ‘‘வைரலாகி''யதே அது காவல்துறைக்குக் கண்ணியத்தைத் தரும் நிகழ்வா?

 சாத்தான் குளத்திற்குப் பிறகுமா?

சாத்தான்குளம் சம்பவங்களுக்குப் பிறகும் கோவை அதிகாரிகள் போன்ற சிலர் ஏனோ பாடம் கற்க - பக்குவப்பட மறுக்கிறார்கள்?

காவல்துறையில் இத்தகைய அத்துமீறல்களை - காட்டுமிருகச் செயல்களை - பாலின வன்கொடுமைக்கு அப்பாவிகளை ஆளாக்குபவர்களை விசாரித்துத் தண்டிக்கத் தனிப் பிரிவையும் - தனி விசாரணை அமைப்பையும், புதிய அரசு தனிச் சட்டத்தின்மூலம் அமைத்துகளையெடுத்தால்தான்' - உண்மையான காவல்துறைக் கடமையாளர்களின் மதிப்பும், மரியா தையும் உயரும்.

உங்கள் நண்பனாக' இருக்கவேண்டிய ஒரு முக்கிய காவல்துறை - மக்களை மண் புழுக்களாக மதித்து - வன்முறைகளில் திளைக்கக் கூடாது!

மனித உரிமை ஆணையத்தில் கோவை சம்பவம் ஒலிக்கட்டும்!

அரசு அதிகாரிகள் காவல்துறையினர் உள்பட மக்கள் சேவகர்கள்; மக்கள்தான் தங்களுக்கு சம்பளம் வழங்கும் எஜமானர்கள் - அவர்கள் நலன் காக்கும் வேலியே தாங்கள் என்ற உணர்வோடு கடமையாற்றிப் புதிய திருப்பத்தை ஏற்படுத்தட்டும்!

மாமூல்' பழக்கத்தை ஒழித்தாலே நல்ல பெயர் ஏற்படும். ஊதியம் சிறப்பாகத் தந்து, லஞ்ச லாவண் யத்திற்கு இடமின்றிச் செய்தல் அத்துறைக்கு மிகமிக அவசியம் ஆகும்.

கோவை சம்பவம் - ஓர் எச்சரிக்கை -

மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்குமுன், உரிய நடவடிக்கை எடுக்கட்டும் காவல்துறை.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.4.2021

Comments