அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து: இஸ்ரேல் சைபர் தாக்குதலே காரணம்: ஈரான் குற்றச்சாட்டு


 தெஹ்ரான், ஏப். 13- அமெரிக்கா உள் ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரா னுக்கும் இடையே 2015இல் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட் டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக  டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ள தாகக் கூறி அதிலிருந்து விலகினார்.

மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் தெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில், 2015இல் நிறுத்தப் பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக ஈரான் - அமெ ரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இந்த நிலையில் ஜோ பிடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் ஈரானின் இஸ்ப கான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை கட்டி வருகிறது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இருப்பினும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்பு களுக்கு கட்டுப்படாமல்  யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதி கரித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட அய்.ஆர்.6 ரக மய்ய விலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்தது‌. இந்த நிலையில் 11.4.2021 அன்று நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக ஆலை யின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடை பட்டது.இருப்பினும், இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர் களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல் வெண்டி கூறியுள்ளார்.

மேலும் ஆலையில் பெரிய அள வில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள் ளதாக பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே ஆஸ்திரியா தலை நகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த நிலையில், நாதன்ஸ் விபத்துக்கு இஸ்ரேல் சைபர் தாக்குதலே காரணம் எனவும், இது அணு பயங்கரவாத நடவடிக்கை என வும் ஈரான் பகிரங்கமாக குற்றச் சாட்டை முன்வைத்துள்ளது.

 

Comments