மற்ற வழக்குரைஞர்களுக்கும் - நம்முடைய வழக்குரைஞர்களுக்கும் வேறுபாடு உண்டு

நாம் கைமாறு கருதாதவர்கள் - உண்மையின் பக்கம் நிற்கக்கூடியவர்கள் - கொள்கையில் சமரசமற்றவர்கள்!

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை


சென்னை, ஏப். 27-  மற்ற வழக்குரைஞர்களுக்கும், நம்முடைய வழக்குரைஞர்களுக்கும் வேறுபாடு உண்டு. நாம் கைமாறு கருதாதவர்கள்; உண்மையின் பக்கம் நிற்கக்கூடியவர்கள்; துணிச்சலில் யாருக்கும் பின்வாங் காதவர்கள் நாம்; கொள்கையில் சமரசமற்றவர்கள் நாம் என்ற தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பலமும், உங்களைத் தேடி வரக்கூடிய பதவிகளும் தானே வந்து சேரும். பதவிகள் நமக்கு சாஸ்வதம் அல்ல - ஆனால், பெருமையும், உழைப்பும், அறிவும், சமூக நன்னோக்கமும் மிகமிக முக்கியமான தாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல்

கடந்த 24.4.2021 அன்று முற்பகல் 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், காணொலிமூலம் திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு

திராவிடர் கழக வழக்குரைஞரணிக்கு தனி அடையாளம் தேவை!

இயக்கத் தோழர்களுக்கு, இயக்க வழக்குரைஞர்க ளுக்கு ஓர் அடையாளம் இருக்கவேண்டும். திராவிடர் கழகத்திற்கென்று ஒரு தனி கொடி இருந்தாலும், திராவி டர் கழக வழக்குரைஞரணி என்பதற்கு தனி அடையா ளம் என்னவென்று கலந்தாலோசித்து அதன்படி செயல் படலாம்.

அதற்கடுத்ததாக, கருத்தரங்கங்கள் நடத்தவேண்டும் என்று இங்கே சொன்னார்கள். நீதிக்கட்சியினுடைய அடிப்படை கொள்கைகளை, இங்கே நம்முடைய குமாரதேவன், நம்முடைய கழக துணைத் தலைவர், மற்ற தோழர்களும் சொன்னார்கள்.

இன்றைக்குத் தி.மு.. ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு முன்பே, பார்ப்பனர்கள் திட்ட மிடுகிறார்கள். பார்ப்பனக் கொள்ளைக்கு வழிவகுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திடம் இருந்த இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையை தனியாரிடம் உத்தரகாண்ட் பா... ஆட்சியில் கொடுத்துவிட்டார்கள் எப்படி அரசாங்கத்தின் பொதுத் துறையை, தனியார் துறையாக்கி, தனியார் கொள்ளையடிப்பதற்காக வாய்ப்பு களை உருவாக்குகிறார்களோ, அதனுடைய இன்னொரு அம்சம்தான் இது.

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை என்பது! தனியாரிடமிருந்துதான், நீதிக்கட்சி ஆட்சியின்போது, அரசாங்கத் துறையாக மாற்றினார்கள்.

நம்பி ஆரூரான் எழுதிய ''தமிழ் மறுமலர்ச்சியும், திராவிட தேசியமும்!''

அதைப்பற்றி நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினுடைய வரலாற்றைப்பற்றி - நீதிக்கட்சியின் பனகல் அரசர் கொண்டு வந்த மிகப்பெரிய சட்டம் - அந்த சட்டத்தைப்பற்றி ஆங்கிலத்தில், மறைந்த நம்பி ஆரூரான் அவர்கள் (இவர் மறைமலையடிகளாருடைய பேரன்) ''Tamil Renaissance & Dravidian Nationalism'' என்ற தலைப்பில் பிஎச்.டி., ஆய்வு செய்தார் - லண்டன் பல்கலைக் கழகத்தில். அது புத்தகமாக வெளி வந்தது. அவருடைய துணைவியார்தான் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள்.

அந்த புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு - ''தமிழ் மறுமலர்ச்சியும், திராவிட தேசியமும்'' என்ற தலைப்பில் வெளிவந்தது.

ஆங்கிலத்திலும் அந்தப் புத்தகம் இருக்கிறது - தமிழிலும் அந்தப் புத்தகம் இருக்கிறது. அதனை வாங்கி நீங்கள் படிக்கவேண்டும். அந்த புத்தகத்தில், நாம் தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக் கின்றன.

ஏன் அந்த சட்டம் தேவைப்பட்டது - எப்படி கொள் ளையடித்தார்கள் பார்ப்பனர்கள் என்ற தகவல்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன.

இங்கே நண்பர்கள் சொன்னதுபோன்று, கோவை கிழார் என்ற சி.எம்.இராமச்சந்திர செட்டியார் அவர்கள் அறநிலையப் பாதுகாப்புத் துறையில் தலைவராக இருந்தார். ''கோவில் பூனைகள்'' என்ற தலைப்பில் வெளிவந்த நூல், தினமணிக்கதிர் அதனை வெளியிட்டது - பி.எஸ்.சொக்கலிங்கம் வெளியிட்டார். பிறகு அதனை அப்படியே மறைத்துவிட்டார்கள். அதனை நாம் பிறகு வெளியிட்டோம்.

நீதிபதிகள், சட்ட நிபுணர்களையெல்லாம் அழைத்து கருத்தரங்கம் நடத்தவேண்டும்!

இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், வடநாட்டில் உத்தரகாண்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை வைத்துக்கொண்டு, இங்கே யும் நீண்ட காலத்திற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது - தயானந்த சரசுவதி (மஞ்சக்குடி நடராஜ அய்யர்தான் தயானந்த சரசுவதி) என்பவர்மூலமாக ஒரு வழக்கைப் போட்டு, சுப்பிர மணியசாமி, எச்.ராஜா போன்றவர்களை ஒரு குழுவாகப் செயல்பட்டு, அந்தக் குழுவில் அண்மையில் சேர்ந்தவர் தான் ஈஷா சாமியார் - விவசாயிகளுடைய நிலங்கள், காடுகளை எல்லாம் பறித்துக்கொண்டு, கொள்ளை யடித்து, ஆசிரமம் அமைத்திருக்கிறார். காட்டிலிருக்கும் யானைகள் போன்ற விலங்குகள் வீட்டிற்கு வருகிற தென்றால் அதற்கு என்ன காரணம்? அந்தக் கொள்ளை களையெல்லாம் எதிர்த்து தமிழ்நாட்டிலும் ஒரு இயக்கம் தோன்றியிருக்கிறது. எனவே, அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவேண்டிய பொறுப்பும் - அதற்கு சட்ட உதவிகளை நாங்கள் செய்வோம் என்று திராவிடர் கழகம் முன்வருவதற்கும் - உடனடியாக அதற்காக ஒரு கருத்தரங்கத்தை நாம் நடத்தவேண்டும். அந்தக் கருத்த ரங்கத்திற்கு நம்முடைய நீதிபதிகள், சட்ட நிபுணர்களை யெல்லாம் அழைத்து - அந்தக் கருத்தரங்கத்தை காணொலி வாயிலாக உடனடியாக நடத்தவேண்டும்.

இங்கே நிறைய தோழர்கள் தனித்தனியாக சொன்னா லும், அழகாக ஒவ்வொரு கருத்தையும், சுருக்கமாக சொன்னாலும், மிக அழகாகச் சொன்னார்கள்.

திடீரென்று ஒரு நாள், சட்டப்பூர்வமில்லாது, அதிகாரப் பூர்வமில்லாது தலைவர்கள் சிலைகளை வைத்திருந் தால், அவற்றை அகற்றவேண்டும் என்று ஒரு வழக்கு.

சட்டப்பூர்வமில்லாத சிலைகளை அகற்றவேண்டும் என்றால், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் வரும். அதைப் பற்றி அந்த ஆணையைப் போடுகின்றவர்களுக்குக் கவலை இல்லை. எங்கேயோ அமர்ந்துகொண்டு அந்த ஆணையைப் போடுகிறார்கள்.

சரி, உயர்நீதிமன்றத்திற்கு, நம்முடைய வழக்குரைஞ ரணி சார்பாகவும், திராவிடர் கழகம் சார்பாகவும் ஒரு மனு கொடுக்கவேண்டும்.

அது என்னவென்றால், ''அனுமதியில்லாமல் வைக் கப்பட்ட சிலைகளை அகற்றவேண்டும் என்பது உச்ச, உயர்நீதிமன்றங்களுடைய அண்மைக்கால உத்தரவு - அதனை நாம் செயல்படுத்தவேண்டும் என்றால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும். தலைவர்களுடைய சிலைகளினால் போக்குவரத்திற்கு இடையூறுகள் இல்லை.

ஆனால், நடைபாதைக் கோவில்களினால் போக்கு வரத்திற்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. உச்சநீதிமன்றத் திலும், திருச்சி நீதிமன்றத்திலும் நிறைய முறை எடுத்துச் சொல்லி, சில நடைபாதைக் கோவில்களை அகற்றியிருக்கிறார்கள். பல இடங்களில் நடைபாதைக் கோவில் கள் அகற்றப்படவில்லை.

உங்களுக்கும் அதன்மூலம் பெருமை ஏற்படும்!

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன், அந்த கோரிக் கையை வலியுறுத்தவேண்டும். நாம் கொள்கை ரீதியா கப் போராட்டம் நடத்தவேண்டிய நேரத்தில், போராட் டம் நடத்துகிறோம். அதற்கு நம்முடைய வழக்குரைஞ ரணி பெரிய துணையாக நிற்கவேண்டும். திராவிடர் கழகம் அதனைச் செய்யும் - எனவே, நம்முடைய வழக் குரைஞரணி என்பது பெரிய பலமாக இருக்கவேண்டும். போராட்டம் நடைபெறும் இடங்களில், நான்கு வழக்கு ரைஞர்கள் சென்று நிற்கவேண்டும் - ''நான் வழக்கு ரைஞர், இவர்கள் போராட்டம் செய்வதில் நியாயம் இருக்கிறது - சட்டப்படிதான் இவர்கள் போராடுகிறார் கள்'' என்று சொன்னால், காவல்துறையினரும் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கும் அதன்மூலம் பெருமை ஏற்படும்.

இவர்கள் எல்லாம் சட்ட ஞானம் உள்ளவர்கள் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

அறிக்கைகள் எழுதும்பொழுது, ஆதாரத்துடன் அரசமைப்புச் சட்டத்தில் இத்தனையாவது பிரிவில் உள்ளது என்று நாம் எதற்காக எழுதுகிறோம். அரசமைப்புச் சட்டத்தை நாம் படித்த அளவிற்கு, மற்றவர்கள் படிக்கவில்லை.

அதேபோன்று, நீதிமன்றத் தீர்ப்புகளை நாம் ஆராய்ந்த அளவிற்கு மற்றவர்கள் ஆராயவில்லை.

தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டு போடுவது என்பது அவர்களை அவமானப்படுத்துவதாகும்!

இது எவ்வளவு பெரிய முரண்பாடு பாருங்கள். அனுமதியற்ற தலைவர்கள் சிலை இப்பொழுது வைத் தது. ஆனால், நடைபாதைக் கோவில்கள் எவ்வளவு காலத்திற்கு இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரையில் சென்றாகிவிட்டது. திரும்பத் திரும்பச் சொல்கிறோம் - ஆனால், அதனை அப்புறப்படுத்துவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகளைச் செய்யவில்லை. ஆனால், தலைவர்களின் சிலைகளுக்குக் கூண்டு போடுவதற்குப் பதில், லைட் வைக்கவேண்டியதுதானே? வெளிச்சம் இருந்தால், யார் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்து விடுமே!

தலைவர்களுக்குச் சிலை வைப்பது அவர்களை கவுரவப்படுத்துவதற்காக - கூண்டு போடுவது என்பது அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

ஆகவே, இந்தப் பிரச்சினைகளைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு கழக வழக்குரைஞரணிக்கு உண்டு. அதோடு, நிறைய அளவிற்கு நம்முடைய தோழர்கள் படிக்கவேண்டும். புதிய புதிய தீர்ப்புகள் - உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புகளைப் படிக்க வேண்டும்.

எங்களைப் போன்றவர்கள் போராட்டங்களை நடத் தினாலும்கூட, உங்களைப் போன்ற வழக்குரைஞர்கள் துணையாக இருக்கக்கூடிய அளவிற்கு, உங்களுக்கு சட்ட ஞானமும், சட்ட விதிகளும் தெரிந்திருக்கவேண்டும்.

எனவே, கருத்தரங்கங்களை நடத்தவேண்டும் -

போராட்டம் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல வேண்டும் - உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளோடு தொடர்பில் இருக்கவேண்டும்.

மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுக்கவேண்டும்.

எல்லாக் கட்சித் தலைவர்களோடும் பண்போடு பழகவேண்டும். அதேநேரத்தில், நம் முத்திரைகளைப் பதிக்கவேண்டும்.

நாம் இதுவரையில் பெற்ற சமூகநீதிக்கான உரிமை களைப் பாழ்படுத்தக் கூடிய அளவிற்கு நிலைமைகள் வருகின்றன - அதை விளக்கி கருத்தரங்கங்களை நடத்த வேண்டும். புதிய தீர்ப்பு வெளிவந்தால், அந்தத் தீர்ப்பைப்பற்றி விளக்கிச் சொல்லவேண்டும்.

நீதிபதி டாக்டர் .கே.ராஜன் எழுதிய நூல்கள்!

உதாரணமாக, நான் வருத்தத்தோடு சொல்கிறேன். நீதிபதி டாக்டர் .கே.ராஜன் அவர்கள், 'நீட்' தேர்வைப் பற்றி அருமையான நூலை எழுதியிருக்கிறார். எத்தனை வழக்குரைஞர்கள் அதனைப் படித்திருக்கிறீர்கள்? நம்முடைய இயக்கத் தோழர்களிடமும் கேட்கிறேன். அதேபோன்று வேளாண்மைச் சட்டங்கள்பற்றியும் நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் உள்ள தகவல் களை நன்றாகப் படித்து உள்வாங்கவேண்டும்.

ஒரு பிரச்சினையைப் பேசுவதற்கு முன்பாக, அந்தப் பிரச்சினையைப்பற்றிப் படிக்கவேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் அது எத்தனையாவது பிரிவில் சொல்லப்பட்டு இருக்கிறது? அதனுடைய நோக்கம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் படித்து, கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள்ளே விவாதிக்கவேண்டும்; இளம் வழக்குரைஞர்கள் எல்லாம் நன்றாக வளரவேண்டும் என்றால், இப்படித்தான் செய்யவேண்டும்.

திரும்பத் திரும்பப் படித்தால்தான்புதிய புதிய கருத்துகள் உங்களுக்குத் தோன்றும்

இன்றைக்கு சட்ட ஞானம் நிறைய உள்ள வழக்குரை ஞர்கள் எல்லாம் எப்படி அந்த நிலைக்கு வந்தார்கள்? பிறக்கும்பொழுதே அவர்கள் சட்ட ஞானத்தோடு பிறக்கவில்லை. சட்டம் என்பதைத் திரும்பத் திரும்பப் படித்தால்தான், புதிய புதிய கருத்துகள் உங்களுக்குத் தோன்றும்.

மாநில உரிமைகள் அன்றாடம் பறிபோகின்றன; உயர் நீதிமன்ற உரிமைகளே இன்றைக்குப் பறி போகின்றன.

ஒரு வழக்குப் போடுகிறார்கள் - பசுமைத் தீர்ப்பா யத்திற்கு உறுப்பினராக ஓய்வு பெற்ற அய்..எஸ். பார்ப் பன அம்மையாரை நியமிக்கிறார்கள்; அவர்களுக்கு அனுபவம் கிடையாது. முதல் நாள் வழக்கு விசாரணை யில், அவருக்கு அனுபவம் இல்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டு, அடுத்த நாள் அந்த அம்மையாரை நியமித்தது செல்லுபடியாகும் என்று வருகிறது.

இதற்கு என்ன அர்த்தம்?

இந்தத் தகவல்களையெல்லாம் குறைந்த பட்சம் ஆங்காங்கே நம்முடைய வழக்குரைஞர்கள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்.

நீதிமன்றத்தையெல்லாம் விட சக்தி வாய்ந்த மன்றம் ஒன்று உண்டு. அந்த மன்றம்தான், மக்கள் மன்றம். அந்த மக்கள் மன்றம் எடுக்கின்ற தீர்ப்புதான் இறுதித் தீர்ப் பாகும். ஜனநாயகத் தீர்ப்பு என்பது அதுதான்.

ஆளுங்கட்சியினர் தேர்தலின்போது தண்ணீர் போன்று பணத்தை செலவழித்தார்கள். அதையெல்லாம் தாண்டி, தி.மு..விற்குத்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று வெளிப்படையாக எல்லோரும் சொல்கிறார்கள்.

தந்தை பெரியாருடைய பெயரே ஒரு போராயுதம்தான்

மோடி வந்தால், ஓட்டு வரும் என்பது வடநாட்டில். பிரதமர் மோடி வந்தால், ஓட்டு விழாது என்பது தமிழ் நாட்டில். அப்படியென்றால், இந்தத் தமிழ் மண் எப்படி பக்குவப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

பெரியார் என்பது ஒரு பேராயுதம் - தந்தை பெரியாருடைய பெயரே ஒரு போராயுதம்தான்.

இன்றைய இளைஞர்கள் பெரியாரைப் பார்த்திராத ஒரு சமுதாயத்தினர்தான். உங்களில்கூட ஒரு சிலர் பெரியாரைப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

பெரியாரைப் படிக்கவேண்டும் - பெரியாரை வாசித் தால் மட்டும் போதாது - பெரியாரை சுவாசிக்கவேண்டும்.

நிறைய படியுங்கள் - படித்ததை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் - குறிப்பெடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றால், அதனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

''Dravidian Model''

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன், அண்மை யில்''Dravidian Model''என்ற தலைப்பில் ஓர் ஆய்வு வெளிவந்திருக்கிறது. அதைப்பற்றி 'விடுதலை'யில் செய்தி வரும்.

குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று சொன்னார்கள் - அது பொய்யான செய்தி என்று வெட்ட வெளிச்சமாகி யது. கடந்த 25 ஆண்டுகாலத்தில் ஒரு புதிய அரசு மருத்துவமனைகூட கட்டப்படவில்லை; மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை என்று அங்கே உள்ள ஒரு தலைவர் சொல்லியிருக்கிறார். அதை பா...வினர் மறுக்கவில்லையே!

மார்புப் பகுதியை ஸ்கேன் செய்வதற்கு ஸ்கேன் இயந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள்.

ஆகவேதான், நண்பர்களே இவற்றையெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஒரு பெரிய வாய்ப்பு நமக்கு - ஆகவே, வழக்குரை ஞர்களான நாம் சட்டத்தை நுணுகி ஆராயக்கூடிய நுண்ணறிவு, சட்ட அறிவு, பெரியாருடைய பட்டறிவு, துணிச்சல், தெளிவு இவை அத்தனையும் உடையவர் கள்தான் திராவிடர் கழக வழக்குரைஞர்கள்.

தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

மற்ற வழக்குரைஞர்களுக்கும், நம்முடைய வழக்கு ரைஞர்களுக்கும் வேறுபாடு உண்டு.

நாம் கைமாறு கருதாதவர்கள்

உண்மையின் பக்கம் நிற்கக்கூடியவர்கள்

துணிச்சலில் யாருக்கும் பின்வாங்காதவர்கள் நாம்

கொள்கையில் சமரசமற்றவர்கள் நாம் என்ற தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் பலமும், உங்களைத் தேடி வரக்கூடிய பதவிகளும் தானே வந்து சேரும்.

பதவிகள் நமக்கு சாஸ்வதம் அல்ல - ஆனால், பெருமையும், உழைப்பும், அறிவும், சமூக நன்னோக்கமும் மிகமிக முக்கியமான தாகும். ஆகவே, ஒவ்வொருவரும் அதனை அருள்கூர்ந்து மனதில் பதிய வைக்கவேண்டும்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை கலந்துரையாடல் கூட்டம்!

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு இவ்வளவு வழக்குரைஞர்கள் பங்கேற்றிருப்பது சிறப்பானது, மகிழ்ச்சிதரக்கூடியதாகும்.

இனிமேல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திராவிடர் கழக வழக்குரைஞரணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு ஊரிலும், கலந்துரையாடல், கருத்தரங்கம் நடைபெறும்.

இந்த அமைப்பு என்பது, அரசாங்கம் உற்றுநோக்கக் கூடிய ஓர் அமைப்பு - எதிர்க்கட்சிகள் யோசிக்கவேண்டிய ஓர் அமைப்பு - நம்மை உயர்த்திக் கொள்ளக்கூடிய ஒரு படிக்கட்டு. நம்முடைய அறிவை, வளர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு பெரிய வாய்ப்பு என்றாக்கி,

இங்கே சொன்ன கருத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

பதிவாளர் உருவாக்கப்படவேண்டும், சட்ட ஆவணக் காப்பகம் உருவாக்கப்படவேண்டும், குறிப்புகள் பாதுகாக்கப்படவேண்டும்.

ஒரு பெரிய அளவிற்கு இந்தக் கூட்டம் ஒரு திருப்பத்தை உருவாக்கும் என்று சொல்லி, இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.

கரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு உதவி செய்யுங்கள்!

இந்தக் கரோனா காலகட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை - முகக்கவசம் அளிப்பதிலிருந்து எல்லாம் உதவிகள்தான். என்னென்ன மாதிரியான உதவிகளை, எங்கெங்கே செய்ய முடியுமோ, அதை செய்யக்கூடிய வாய்ப்பை நாம் பெறவேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி,

நீண்ட நேரம் கலந்துரையாடலில் பங்கேற்ற உங்கள் அனை வருக்கும் நன்றி சொல்லி, சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி கூறி,

மூன்று மாதங்கள் என்று சொன்னால், இந்த மாதம் ஏப்ரல், அடுத்து ஜூலை மாதத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.

இந்த மூன்று மாதத்திற்குள்ளாக நாம் இங்கே சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.

விவரங்களைவிடுதலை'க்கு அனுப்புங்கள்!

முதல் பணியாக அடையாள அட்டைப் பணியைத் தொடங்க வேண்டும். அதற்கென குழுக்களை அமைத்து,  அமைப்பாளர்களை நான்கைந்து திசைகளில் அனுப்பவேண்டும். அது தொடர்பான விவரங்களை 'விடுதலை'யில் வெளியிடவேண்டும் என்று கேட்டு என்னுரையை முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வருக சமூகநீதி!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments