திராவிடர் கழக வழக்குரைஞரணி தோழர்கள் ஒவ்வொருவரும் எல்லா இடங்களிலும் முத்திரைப் பதிக்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும்!

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துரை

சென்னை, ஏப்.26 திராவிடர் கழக வழக்குரைஞ ரணியைச் சேர்ந்த ஒவ்வொரு தோழரும், குறிப்பிடத் தகுந்த அளவிற்கு, மக்களால் மதிக்கப்படக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும். எல்லா இடங்களிலும் முத்திரைப் பதிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல்

கடந்த 24.4.2021 முற்பகல் 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், காணொலிமூலம் திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கழகத் துணைத் தலைவர் அவர்களே, கழகப் பொருளாளர் அவர்களே, கழகப்  பிரச்சார செயலாளர் அவர்களே, கழக வழக்குரைஞர் அணியின் தலைவர் மானமிகு வழக்குரைஞர் வீரசேகரன் அவர்களே, வழக்குரை ஞரணி செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களே, அருமை வழக்குரைஞர்களான பல்வேறு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நீண்ட நேர உரை தேவையில்லை. ஏராளமான கருத்துகளை இங்கே எல்லோரும் எடுத்துரைத்து வைத்திருக்கிறார்கள். சிறப்பான கருத்துகள். நான் எல்லாவற்றையும் குறித்து வைத்திருக்கிறேன்.

உங்களுடைய அறிவை விசாலப்படுத்திக் கொள்ளுங்கள்!

அருமை நண்பர்களே, இந்தக் கரோனா கால கட்டத்தில் கிடைத்திருக்கின்ற வாய்ப்பைப் பயன் படுத்தி, உங்களை சிறப்பாக நீங்கள் மேம்படுத்திக் கொள் ளுங்கள். உங்களுடைய அறிவை விசாலப் படுத்திக் கொள்ளுங்கள். நிறைய புத்தகங்களைப் படிக்கவேண் டும்; நிறைய ஆவணங்களைத் தயாரிக்கவேண்டும்.

குறிப்பாக, இங்கே நம்முடைய கழகப் பொருளாளர் அவர்களும், கழகத் துணைத் தலைவர் அவர்களும் இரண்டு கருத்துகளைச் சொன்னார்கள்.

உதாரணமாக, நேற்றைய (23.4.2021) 'விடுதலை'யில் அறிக்கை வந்திருக்கிறது; அதைத்தான் தீர்மானமாக இங்கே நிறைவேற்றியிருக்கிறோம். உங்களில் எத்தனை பேர் அந்த அறிக்கையைப் படித்தீர்கள், கை தூக்குங்கள் என்று பொதுக்கூட்டமாக இருந்தால் சொல்லி, எண்ணியிருப்பேன். காணொலி கூட்டத்தில் அதுபோன்று இல்லை.

ஆகவே, நீங்கள் எல்லோரும் 'விடுதலை'யை முதலில் தெளிவாகப் படிக்கவேண்டும். அவ்வப்போது நமக்குப் பல பிரச்சினைகள் வருகின்ற நேரத்தில், கழகத்தினுடைய கருத்து என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், 'விடுதலை' யினுடைய அறிக் கைகள்தான் அதற்கு வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியவை.

 'விடுதலை'யினுடைய  பிடிஎஃப்  வடிவத்தை நீதிபதிகளுக்கு அனுப்புங்கள்!

நீங்கள் எல்லோரும் கழகத்தோடு தொடர்பில் இருக்கவேண்டும். நீங்கள் 'விடுதலை'யினுடைய பிடிஎஃப்  வடி வத்தை நீதிபதிகளுக்கெல்லாம் அனுப்ப வேண்டும். அறிக்கைகளை அனுப்ப வேண்டும்; அறிக்கையினுடைய முக்கிய பகுதிகளை அனுப்ப வேண்டும்.

அவர் சொன்னதுபோல, மாவட்ட கீழமை நீதிபதி கள், மாவட்ட நீதிபதிகள், வழக்குரைஞர் அமைப்புகள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் பணியை முதன்மை அமைப்பாக எடுத்திருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகும். இன்றைக்குக்கூட 'முரசொலி'யில், 'தீக்கதிர்', 'தினத்தந்தி' ஆகிய நாளேடு களில் 'விடுதலை'யின் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

எத்தனைத் தோழர்கள், வழக்குரைஞர்கள் அதனைப் படிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. 'விடுதலை'யில் படித்தால்தான், அதிகாரப்பூர்வமானதாகும். ஏனென்றால், மற்ற பத்திரிகைகளில் சுருக்கமாக எடுத்து வெளியிடுவார்கள். 'முரசொலி'யில் முழு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

57 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

பரிந்துரைகளைத் திருப்பி அனுப்புகிறார்கள்!

மத்தியில் ஏழு ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பா... ஆட்சியில் இதற்கு தீர்வில்லை. இவையெல்லாம் ஓரிரு வாரங்களில் தீர்க்கவேண்டிய பிரச்சினையாகும். ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் கொலிஜியம் இருக்கிறது - பரிந்துரை கொடுக்கிறார்கள்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஆர்.எஸ்.எஸ். கார்டு ஹோல்டர்கள் அல்லது தங்களுக்கு வேண்டிய ஆட்கள் இல்லை என்பதினால் அந்தப் பரிந்துரைகளைத் திருப்பி அனுப்புகிறார்கள்.

நல்ல வாய்ப்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நேற்றுதான் ஓய்வு பெற்று போனார். அவருடைய இஷ்டத்திற்குப் பேசினார், ஆர்.எஸ்.எஸ்.காரர் அவர்.

எத்தனை கருத்துகளை அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்; அதையெல்லாம் விட்டுவிட்டு, சமஸ்கிரு தத்தைப்பற்றி சொன்னதை சொல்கிறார்கள். அதை யெல்லாம் அலட்சியப்படுத்தி விடுங்கள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பிரதி பலிக்கக் கூடிய ஒருவர், சட்டப் பல்கலைக் கழகத்திற்கு வந்ததும் அதுபற்றிதான் அவரும் பேசினார்.

மக்களால் மதிக்கப்படக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும்!

அவர்கள் எங்கே இருந்தாலும், அவர்களுடைய கருத்துகளைச் சொல்கிறார்கள். நம்முடைய தோழர் கள் இதையெல்லாம் மனதில் பதிய வைத்துக்கொண்டு, வழக்குரைஞரணி என்பது, இங்கே துணைத் தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டியதுபோன்று, ஒவ்வொரு தோழரும், குறிப்பிடத்தகுந்த அளவிற்கு, மக்களால் மதிக்கப்படக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும். வழக் குரைஞர் திருப்பூர் பாண்டியன் அவர்கள், நம்பியூர் சென்னியப்பனைப்பற்றி இங்கே சொன்னார். அதே போன்று கும்பகோணத்தில் உள்ள நம்முடைய வழக்குரைஞர் நிம்மதி போன்றவர்கள். இதுபோன்று எல்லா இடங்களிலும் முத்திரைப் பதிக்கக்கூடியவர்களாக திராவிடர் கழக வழக்கு ரைஞர்கள் இருக்கவேண்டும்.

மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுக்க வேண்டும். ஆழமான கருத்துள்ளவர்களாக இருக்கவேண் டும். நல்ல அளவிற்கு நம்முடைய அமைப்பைக் கட்டமைக்கவேண்டும்.

இந்தக் கட்டமைப்பு இருந்தால், கரும்பு கட்டோடு இருந்தால், எறும்புதானே வரும் என்று சொல்வது போன்று புதிய தோழர்கள் தானே வருவர்.

நம்முடைய வேலை பதவி வாங்கிக் கொடுப்பது இல்லை; அதற்குத் தகுதியாக நம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும்!

தோழர்கள் சிலர் இங்கே சொன்னார்கள், தி.மு.. ஆட்சிக்கு வந்ததும், நம்மாட்களுக்கு அரசு பதவி வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று. நம்முடைய வேலை பதவி வாங்கிக் கொடுப்பது இல்லை. அதற்குத் தகுதியாக நம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும்.

கட்சிக்காரர்களுக்கு வேலை கொடுத்தார்கள், ஆனால், அவர்களுக்கு சட்டம் தெரியவில்லை என்று சொல்லக்கூடிய ஒரு கேவலமான நிலையை, முன்பு பிரச்சாரமாக்கினார்கள். தி.மு.. ஆட்சியின்போது செய்தார்கள்.

அதற்குக் காரணம் என்னவென்றால், பல பேருக்குப் பதவி கொடுத்தார்களே தவிர, பதவிக்குரிய அளவிற்கு அவர்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ளவில்லை.

நம்முடைய வழக்குரைஞர்கள், வழக்குகளில், சட்ட ஞானத்தில், தொழில் நடத்தையில், நாணயத்தில் எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கவேண்டும். அது தான் மிகவும் முக்கியம்.

அதற்குப் பிறகு, அந்த வழக்குரைஞர்களை நீதிபதிகள் அழைப்பார்கள், அரசே அழைக்கும். இவ் வளவு சட்ட ஞானம் உள்ளவர்களை நாம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்று.

உங்களை உயர்த்திக்கொண்டால்பதவிகள் தானே வரும்!

அந்த அளவிற்கு உங்களுடைய அறிவு, உங் களுடைய ஆளுமை, உங்களுடைய சட்ட ஞானம் இவை அத்தனையையும் உயர்த்திக் கொண்டால், பதவிகள் தானே வரும்.

பதவிக்காக நாம் அலையவேண்டிய அவசியம் இருக்காது. அந்த நேரத்தில் என்ன செய்யவேண்டுமோ, கழகம் அதனை செய்யும்.

ஆகவே, ஆசைப்படுவதற்குமுன், நம்மை நாம் அதற்குத் தகுதியாக்கிக் கொள்ளவேண்டும். மற்றவர் களுக்குத் தகுதியில்லை, எனக்குத் தகுதி இருக்கிறது என்றுகூட சொல்லவேண்டிய அவசியமில்லை. நம் முடைய தகுதியை உயர்த்திக் கொண்டோமேயானால், நிச்சயமாக அந்த வாய்ப்பு வரும்.

அடையாள அட்டைகையேடு தயார் செய்யவேண்டும்!

அதற்கு முதற்கட்டமாக, இது ஒரு சக்தியுள்ள, பலம் வாய்ந்த அமைப்பு என்பதை உயர்நீதிமன் றத்திற்கும், அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெளி வாக உணர்த்த முதல் வழி என்னவென்றால், ஒவ் வொரு பார் கவுன்சிலிலும், ஒவ்வொரு வழக்குரைஞர் கள் சங்கம் - சென்னையில் தொடங்கி, மதுரையில் தொடங்கி, உயர்நீதிமன்றம் மட்டுமல்ல, மாவட்டம், கீழமை நீதிமன்றங்கள், சப் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங் கள் உள்பட எல்லா இடங்களிலும் திராவிடர் கழக வழக்குரைஞரணி என்ற அந்த முத்திரையோடு, இப்பொழுது அட்வகேட் கார்டு கொடுக்கிறார்களே, பார்கவுன்சில் கார்டு கொடுக்கிறார்களே அதே போன்று, வழக்குரைஞர் பொறுப்பாளர்கள் கவனத் தில் கொள்ளவேண்டும் - இந்தப் பணியை உடன டியாகச் செய்யவேண்டும்; உடனடியாக அதுபோன்ற கார்டைத் தயார் செய்யவேண்டும். அந்தக் கார்டில் ஒளிப்படம், எந்த ஆண்டிலிருந்து, எந்த ஆண்டுவரை இருக்கிறார்கள் என்கிற தகவல்கள் இடம்பெறவேண் டும். அதற்காக ஆகின்ற செலவுத் தொகையைக் கொடுக்கவேண்டும். அதனைப் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்புகளை தோழர் வீர சேகரன், மற்ற பொறுப்பாளர்கள் கலந்து பேசி, மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு என்று பிரித்து செய்து - இது கரோனா காலகட்டம் என்பதால், நேரிடையாக செல்வதற்கு வாய்ப்பில்லாததால், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, விவரங்களைக் கேட்டு வாங்கி, தொகுத்து ஒரு கையேட்டினைத் தயார் செய்ய வேண்டும். இது ஆக்க ரீதியான பணியாகும்.

இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்பற்றி உங்களுக்குத் தெளிவாகவே தெரியும். அதனை உங்களுக்கு விளக்கவேண்டிய அவசியமில்லை.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பதிவாளரை நியமிக்கவேண்டும்!

வழக்குரைஞரணி என்றால், ஒரு முத்திரை இருக்கவேண்டும். அடையாள அட்டை, தலைமை நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். அதற்காக ஒரு தனி பதிவாளர் இருக்கவேண்டும்; அவர் வழக்கு ரைஞராகவும் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு சென்னையில் குமாரதேவன் போன்றவர்கள்; மதுரை யில் ஒரு தோழர்; அதேபோன்று மற்ற மற்ற இடங் களில் ஒரு பொறுப்பாளரை நியமிக்கவேண்டும்.

எங்கெங்கே நீதிமன்றங்கள் இருக்கின்றனவோ - அங்கெல்லாம் சென்று, நம்முடைய வழக்குரை ஞர்கள் யார்? யார்? இருக்கிறார்கள் - அவர்களிடம் விவரங்களை சேகரித்து, அவரை திராவிடர் கழக வழக்குரைஞரணியின் உறுப்பினராக்கி, அவருக்கு அடையாள அட்டை கொடுக்கவேண்டும்.

வருமான வரி கட்டக்கூடிய அளவிற்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று  சொல்லக்கூடிய அள விற்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில், வருமானம் ஒன்றையே மய்யப்படுத்தி இருக்கக் கூடாது. உதவ வேண்டியவர்களுக்கு தாராளமாக உதவவேண்டும்.

திராவிடர் கழக வழக்குரைஞர் என்றால்....

திராவிடர் கழக வழக்குரைஞர் என்றால், அவர்கள் நீதிமன்றத்தில் எழுந்து நின்றவுடன், நீதிபதிகள் அவர்களை மதிக்கவேண்டும். அவர்கள் நாணயமாக வும், நேர்மையாக இருப்பார்கள்; தவறான வழக்கு களை எடுக்கமாட்டார்கள்; அவர்கள் அடாவடித்தன மாக நடக்கமாட்டார்கள். அவர்கள் ஒரு வழக்கை எடுத்தால், அதற்குப் பின் ஒரு நியாயம் இருக்கும்; அவர்கள் சொன்னால், நாணயம் இருக்கும் என்று ஒவ்வொருவரும் நினைக்கும் வண்ணம், உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ளவேண்டும்.

உங்களை உயர்த்துவதன்மூலம், உங்களுக்கும் பெருமை - நீங்கள் சார்ந்திருக்கின்ற கொள்கைக்கும் பெருமை - இயக்கத்திற்கும் பெருமையாகும்.

ஆகவே, அதனை நன்றாக, தெளிவாக செயல் படுத்துங்கள்.

கட்டமைப்பு என்று சொல்வது இதுதான். கட்ட மைப்பு என்பது வெறும் தலைவர், செயலாளர் போன் றவர்களை நியமித்துவிட்டோம் என்பது கட்டமைப்பல்ல.

அரசுப் பதவிக்கோ, மற்றவற்றிற்கோ ஒருவரைப் பரிந்துரைப்பதற்கு முன்பு, அவருக்குத் தனித் தகுதியும், ஆற்றலும் இருக்கிறது என்பதை வெளிப் படுத்தினால், யாரும் கேள்விக் கேட்க முடியாத அளவிற்கு ஒரு நிலைமை வரும். ஆகவே, அந்த அளவிற்கு நம்மை நாம் உயர்த்திக் கொண்டால், சில பல பதவிகள் தானே வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

பல பேர், நீதிபதி பதவி வந்தபொழுதுகூட, அதனை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால், நீதிபதிகளாக இருப்பதைவிட, வழக்கு ரைஞராக இருந்தால், சுதந்திரமாக இருக்கலாம்; அதிகமாக சம்பாதிக்கலாம்; நம்முடைய பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று நினைத்த காரணத்தினால்தான்.

ஆகவே, முதலாவதாக, நம்முடைய தோழர்கள் கட்டமைப்பை பலப்படுத்தவேண்டும்.

பார்ப்பனர்களின் தந்திரங்களில் இதுவும் ஒன்று!

இரண்டாவது, இங்கே அடிப்படை பிரச்சினைகளைப்பற்றி சொன்னார்கள்.  நமக்கு ஒரு நல்ல ஆவணப் பகுதி - சட்ட ரீதியாக வரவேண்டும். நல்ல தீர்ப்புகள் முன்பு கொடுக்கப்பட்டு இருக்கும்; அதனை தேடினால் சில நேரங்களில் கிடைக்காது. பார்ப்பனர்கள்தான் லா ஜெர்னல் போடுவது - அவர்கள் முக்கியமான தீர்ப்பு கொடுக்கப்பட்டால், அதனை ரிப்போர்ட் செய்யமாட்டார்கள்.

உதாரணத்திற்கு, 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு பொருளாதார அடிப்படையில் வந்த தீர்ப்பு தனியாக இருந்ததே தவிர, பதிவாகவில்லை. பார்ப்பனர்களுடைய தந்திரம் அது. எது முக்கியமோ, அதனை ரிப்போர்ட் செய்யாமல் விட்டுவிட்டால், பிறகு அது தேடினாலும் கிடைக்காது. அவர்களுடைய பல தந்திரங்களில், இதுவும் ஒன்று. இதனை நம் முடைய தோழர்கள் உணரவேண்டும்.

ஆகவே, அந்தத் தீர்ப்புகள் நம்முடைய நூலகத் தில், வழக்குரைஞர் பிரிவு ஆவணம் - நீதித்துறை  ஆவணம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆவணப் பிரிவை உருவாக்குவோம். உயர்நீதிமன்றத்தில் எப்படி பதிவாளர் இருக்கிறாரோ - அதேபோன்று, கவுரவப் பதிவாளர் என்ற அளவிற்கு, நம்முடைய தோழர்களில் ஒருவரோ, மகளிரணியில் ஒருவரோ அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும். இது ஓர் ஆக்க ரீதியான பணியாகும்.

எப்படி நாம் அடையாள அட்டை கொடுக்கி றோமோ - எப்படி வழக்குரைஞர்கள் தலைமைக் கழகத்தில் பதிவு செய்கிறோமோ - நம்முடைய வழக் குரைஞர்கள் தலைமைக் கழகத்திற்கு வரவேண்டும்; அவர்களுக்கென்று தனி இடம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் கரோனா தொற்று இருக்கலாம்; இதே நிலை எப்பொழுதும் இருக்காது. நிலைமை இயல்பு நிலைக்கு வந்துதானே தீர வேண்டும். ஆகவே, நல்லதையே எதிர்பார்ப்போம். நாம் எங்கிருந்தாலும் பணி செய்யலாம், அதுதான் மிகவும் முக்கியம்.

(தொடரும்)

Comments