கரோனா நோய் தொற்றுக்கான புதிய அறிகுறிகள்

அய்தராபாத், ஏப். 11  நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தற்போது கரோனாவின் 2ஆவது அலை பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.. இந்த நிலையில்,  தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக மிரட்டி வரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பேரிழப்பு காரணமாக,  பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்பபடுத்தப்பட்டன.

இதன் காரணமாக தொற்றுப் பரவலும் கட்டுக்குள் வந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு தொடங்கியது முதல் உருமாறிய நிலையில் புதிய  கரோனா தொற்று பரவல் தொடங்கியது. தற்போது கரோனாவின் 2ஆவது அலை பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனாவின் 2ஆவது அலை பிப்ரவரி மாதம் முதல் பரவி வருகிறது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த புதிய கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. வேகமாக பரவும் இந்த தொற்றின் பாதிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என எச்சரித்துள்ளனர். 

தொற்றுப் பரவலை எதிர்கொள்ள பொதுமக்கள்  முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சுத்தமாகப் பேணுதல் போன்ற பழக்கவழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் மெத்தனம் காரணமாக, கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு விடைகொடுத்து விட்டதால் தொற்றுப் பாதிப்பு மீண்டும் உச்சம் பெற்றுள்ளதாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோர் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா தொற்று அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி,

1. பின் கழுத்து வலி

2. கண்கள் எரிச்சல் சிவக்கும் தன்மை

3. தொண்டை வறட்சி

4. வயிற்றுப்போக்கு

5. விரல்கள் நகங்களின் நிறம் மாறுதல்

6.தீவிர தலைவலி

7. தோல்களில் அரிப்பு

போன்றவை தென்படுபவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று கரோனா சோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

முன்பு பரவிய கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு

1. காய்ச்சல், 2. மூச்சு விடுவதில் சிரமம், 3. வரட்டு இருமல்

4. வாசனை சுவை இல்லாமல் போவது போன்ற அறிகுறிகள் மட்டுமே தென்பட்ட நிலையில், தற்போது பரவி வரும் கரோனாவின் அறிகுறிகள் வித்தியாசமாக உள்ளது.

சென்னையில் கரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு

மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை,ஏப்.11- சென்னையில் கரோனா தொற்றை கட்டுப் படுத்த மாற்றியமைக்கப்பட்ட கள அலுவலர்கள் குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் 9.4.2021 அன்று நடந்தது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 200-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து அடுத்த 45 நாட்களில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு, அதன்பிறகு குறைந்து தற்போது 1,300 முதல் 2 ஆயிரம் வரையிலான தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

ஒரு மாதத்துக்கு முன்பு வரை சராசரியாக 150 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு 1,500 என உயர்ந்துள்ளது. அதன் படி 10 மடங்கு கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது வீட்டு தனிமையில் அதிகமானோர் இருக்கின்றனர்.

 கரோனா தடுப்பூசி

சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற் பட்டவர்கள் இன்னும் 12 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

கிட்டத்தட்ட 3 தெருவுக்கு ஒரு தடுப்பூசி மய்யம் உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் விளைவுகள் ஏதும் இல்லை. கரோனா மய்யத்தை பொறுத்தவரை சென்னையில் 5 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.

இதையடுத்து கூடுதலாக 10 கல்லூரிகளில் கரோனா மய்யங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மய்யங்கள் செயல்பாட்டுக்கு வந்து விடும். அந்தவகையில் கூடுதலாக 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு விடும். தேர்தலினால் மட்டுமே கரோனா தொற்று பரவியது என கூறமுடியாது. 80 லட்சம் பேர் இருக்கக்கூடிய நகரத்தில் தொற்று பரவ 80 லட்சம் வழிகள் உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப் பதை கடுமையாக்கப்பட்டால் தான் பாதிப்பை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments