அத்திவெட்டி ஜோதி அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

பட்டுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டியைச் சேர்ந்த மானமிகு தோழர் ஜோதி (வயது 57) ஒரு நல்ல பக்குவப்பட்ட பெரியார் பெருந்தொண்டர். கொள்கை வீரர். அடக்கமும், ஆழமான லட்சியப் பற்றும் கொண்டு உழைத்தவர்.

சிங்கப்பூரில் பல ஆண்டு காலம் வாழ்ந்து பணியாற்றியவர். நம்மிடமும், நமது குடும்பத்தாரிடமும் மிகுந்த அன்பு செலுத்திய பண்பாளர்.

சில காலமாகவே அவர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ஒரு பெரும் அறுவை சிகிச்சைக்கு ஆளாகி, சில மாதங்கள் படுக்கையில் இருந்தவர் அத்திவெட்டியில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம்.

சிங்கப்பூரில் அவர் வாழ்ந்தபோது அந்நாட்டுப் பெரியார் பற்றாளர்களிடம், "பெரியார் சமூக சேவை மன்றம்" போன்ற ஒரு சமூகத் தொண்டு இயக்கம் தந்தை பெரியார் பெயரால் அமைய வேண்டும் என்ற கருவை உருவாக்குவதில் ஒரு முக்கியப் பங்காளர்.

அவரது இழப்பு நமக்கு சொந்த முறையில் பெரும் இழப்பு. இயக்க நண்பர்கள், சிங்கப்பூர் தோழர்கள் அனைவருக்குமே பேரிழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கொள்கை நண்பர்களுக்கும் நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும்.

அவருக்கு நமது வீர வணக்கம். 

 

               தலைவர்,

3-4-2021              திராவிடர் கழகம்   

Comments