உலகப் புத்தக நாளில் உன்னத அன்புத் தொண்டு! பரப்புவீர் பாரெங்கும் பகுத்தறிவு நூல்களை!!

தமிழர் தலைவர் வேண்டுகோள் அறிக்கை

உலகப் புத்தக நாளில் (23.4.2021) உன்னத அன்புத் தொண்டு - ‘‘பரப்புவீர் பாரெங்கும் பகுத்தறிவு நூல்களை'' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே,

கழகக் கொள்கைக் குடும்பத்து உறவுகளே,

பகுத்தறிவு, இனஉணர்வு கொண்ட எம்அருமை இளை ஞர்களான சிங்கங்காள்!

ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளையொட்டிய நம் வாழ்த்து கள் அனைவருக்கும்!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் காலத்திலிருந்து புத்தகங்கள் மூலம் புத்தறிவை - பகுத்தறிவை, அறிவியல் மனப்பாங்கை வளர்க்கும் பணி நமது வாழ்நாள் பணி அல்லவா?

ஏராளமான புதுவெளியீடுகளும், பழைய வெளியீடு களும் அச்சில் மீண்டும் வந்து வாசகர்களின் கையில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வகை யில் பல வெளியீடுகளும் இவ்வாண்டு நல்ல கலவையாக - வழக்கம் போன்றே 50 விழுக்காடு தள்ளுபடி சலுகையாக - (சரிபாதி - தள்ளுபடி) வாசகர்களுக்கு உலகப் புத்தக நாளில் வழங்கி, புதியதோர் உலகு செய்ய புத்தகமே புத்தாக்க அறிவாயுதங்கள் என்பதால், அதை கரோனா கொடுந்தொற்று மிரட்டும் இக்கொடூர வேளையில், கோடையிலே இளைப் பாற்றிக் கொள்ளக் கிடைத்த குளிர்தருவாகவும், தருநிழலாக வும், நிழல் கனிந்த கனியாக புத்தகங்கள் பெரிதும் பயன்பட, அனைத்துத் தரப்பு மக்களும் அதுவும் கரோனா காலத்து பொருளாதார நெருக்கடியை எல்லாம் மனதிற் கொண்டே, இவ்வாண்டு ரூபாய் நூறு, இருநூறு, முன்னூறு, அய்நூறு, என்ற தொகைக்கு அறிவு விருந்து படைக்க அமுத நூல்கள் உங்களை வந்து அடைய தக்க ஏற்பாடுகளைச் செய்துள் ளோம்!

இது வணிகம் அல்ல - வாழ்வியலை உயர்த்த வழிகாட்டும் பாதை

இந்த வாய்ப்பு பொன்னான வாய்ப்பு! இது வணிகம் அல்ல - வாழ்வியலை உயர்த்த வழிகாட்டும் பாதை என்பதை மனதிற் கொண்டு முந்துங்கள்!

இப்போதே நிறையஆர்டர்'கள் வந்துவிட்டன என்று பொறுப்பாளர்கள்எம்மிடம் கூறுகின்றனர்'.

சென்னை, திருச்சி போன்ற சில ஊர்களில் நேரிலும் பெறலாம் - அதன்மூலம் அஞ்சல் செலவும் மிச்சமாகும். நாமும் சில ஏற்பாடுகளைக் கேட்போருக்கு உதவிட யோசித்துக் கொண்டுள்ளோம்!

திருமணங்கள் - பிறந்த நாள் விழாக்களுக்குரிய பரிசுகள் - பாராட்டுரையாகப் புத்தகப் பரிசுகள் முதலிய பலவற்றை - இன்று 50 விழுக்காடு தள்ளுபடி, நூல்களை வாங்கி வைத்து ஆண்டு முழுவதும் நண்பர்களுக்கு அனுப்பிப் பரப்பலாமே!

அறிவை விரிவு செய்ய, அகண்டமாக்க, விசாலப் பார்வையால் உலகத்தை விழுங்க, இந்தக் குளிகைகளான (Capsules போன்ற) புத்தகங்களைப் பெற்று, உங்கள் வீட்டு நூலகத்தையும் அமைக்கலாம். ஏற்கெனவே இருந்தால் பெருக்கலாம் அல்லவா!

பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்!

நண்பர்களுக்கு பரிசு அளிப்பீர்!

இடையில் சில நாட்களே!

 

(கி.வீரமணி)

தலைவர்,

திராவிடர் கழகம்

19.4.2021

Comments