டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர் விடைத்தாள் நகல் பெறலாம் இணையதளம் மூலம் பெற புதிய வசதி அறிமுகம்

சென்னை,ஏப்.24- டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பு: தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். இதனை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு, அதே பதவிகளுக்கான 12.7.2019, 13.7.2019, 14.7.2019 ஆகிய தினங்களில் நடைபெற்ற முதன்மை தேர்வுக்கான விடைத்தாள்கள் 21ஆம் தேதி(நேற்று) தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் தேர்வர்களின் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். எனவே, இவ்வாய்ப்பினை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இத்தேர்வினை எழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் ஓடிஆர் கணக்கு மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி அவரவர் விடைத்தாள்களை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குரூப் 1  பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் அவர்களுடைய புகைப்படங்களுடன் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது விண்ணப்பதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பல்கலை, கல்லூரிகள் ஆன்லைனில் தேர்வு - அரசாணை வெளியீடு

சென்னை,ஏப்.24- தமிழகத்தில் மீண்டும் கரோனோ தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அரசு 18ஆம் தேதி மீண்டும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளது. இதை யடுத்து, பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் இணையம் மூலம் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயர்கல்வித்துறை மேற்கண்ட அரசு அறிவிப்பை பின்பற்றி அரசாணை வெளியிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் கரோனா பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி, பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணி யாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும். தேர்வுகளை பொறுத்தவரையில்  அரசு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைத்து கல்வித் தொடர்பான பயிற்சி நிறுவனங்களும் அரசு மற்றும் தனியாராக இருந்தாலும் பயிற்சி வகுப்புகளை இணையம் மூலம் தான் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

கருநாடகத்தில் உருமாற்றம் அடைந்தபுதிய கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு  

பெங்களூரு, ஏப்.24 கருநாடகத்தில் 2ஆவது அலையில் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார். மேலும் பெங்களூருவில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருநாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் 22.4.2021 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கருநாடகத்தில் கரோனா 2ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த கரோனா 2ஆவது அலையில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. இது எப்படி வந்தது, எந்த வடிவத்தில் உள்ளது, எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த கரோனா 2ஆவது அலையில் இது உருமாற்றம் அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. உருமாற்றம் அடைந்த வைரஸ் பரவும் நிலை இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் அபாயகரமானது. இரட்டை உருமாற்றம் அடைந்த வைரசை தடுக்கவே நாம் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறோம்.

பொதுமக்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படும். பெங்களூருவுக்கு 40 டன் ஆக்சிஜன் வந்துள்ளது. 40 ஆயிரத்து 500 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்களும் வந்துள்ளன.

 இவ்வாறு சுதாகர் கூறினார்.

Comments