கரோனாவை வீழ்த்துவதில் வெற்றி பெற்றோமா?

கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவைப் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறது.

முதல் அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது என்ற மனப்பான்மையிலும், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட சூழ்நிலையிலும், கரோனாவுக்கு ஒரேயடியாக மூடு விழா நடத்தப்பட்டது என்ற எண்ணவோட்டத்தில் வெகு மக்கள் மிதக்க ஆரம்பித்து விட்டனர்.

அதே நேரத்தில் இரண்டாவது முறையாகத் தொற்றுத் தொடங்கும் என்ற ஒரு கருத்து அரசல் புரசலாக இருக்கத்தான் செய்தது என்றாலும் மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்திட மத்திய - மாநில அரசுகள் தவறி விட்டன என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இரண்டாவது அலை உலுக்கியது என்ற செய்தி வந்த நேரத்திலாவது இந்தியா விழித்துக் கொண்டு இருக்க வேண்டாமா? இதுபற்றிய புரிதலை மக்களுக்கு ஊட்டி இருக்க வேண்டாமா?

மத்திய பா... அரசும், பிரதமரும் பெரும் சாதனையைச் செய்து முடித்து விட்டனர் என்கிற தோரணையில் 'ஓகோ' என்று பிரச்சாரம் செய்யப்பட்டது நியாயம்தானா?

உலக நாடுகளின் பாராட்டுகளுக்காக காத்திருந்தது போல இந்தியா செயல்பட்டது - இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாகும். பொது மக்களில் போதிய அளவு பொறுப்புடன் நடக்கவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஓய்வு பெற்ற அய்..எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் கூறியதுபோல ஆச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர, விஞ்ஞான கண்ணோட்டத்துக்கும், சிந்தனைக்கும் இடம் கொடுக்கவில்லை. அந்தத் திசையில் இந்தப் பிரச்சினை  மக்களிடம் முன்னெடுத்துச் செல்லப்படவுமே இல்லை.

இந்தக் கால கட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளாக்களை நடத்திட அனுமதித்தது எப்படி?

"கும்பமேளா - நடந்தால் நூறு பக்தர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவர் என்றால் எதிர்ப்பு சக்தி ஏராளமாக மக்களுக்குக் கிடைக்கும்" என்று ஒரு மத்திய சுகாதார அமைச்சர் சொல்லுகிறார் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்ளுவது?

இப்பொழுது வந்துள்ள தகவல் என்ன தெரியுமா? அங்குக் கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது என்பதற்கு அவர் பொறுப்பை ஏற்பாரா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-A(h) என்ற பிரிவு என்ன சொல்லுகிறது? "மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை" என்று சொல்லப்பட்டுள்ளது என்பது - அமைச்சர்களுக்குப் பொருந்தாது போலும்! இந்த நிலை எவ்வளவுப் பெரிய தலைக்குனிவும் - பிற்போக்குத்தனமும் ஆனது!

பிரதமரே "விளக்கேற்றுங்கள் கை தட்டுங்கள் - கரோனா ஓடி விடும்" என்று சொல்லுகிறார் என்றால் மக்கள் மத்தியிலே அவை எத்தகைய சிந்தனையை ஏற்படுத்தும்?

கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும், இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு? 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனைக் கோடி? தேவையான தடுப்பூசிக்கு என்ன ஏற்பாடு என்ற கண்ணோட்டத்தில் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது மத்திய அரசின் மகத்தான நுட்பமான கடமையல்லவா!

இன்றைக்கு நிலை என்ன? தடுப்பூசி தட்டுப்பாடு என்பது பொறுப்பான பதிலா? தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினாலும், மற்றொரு கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரும் இந்தக் கால கட்டத்தில், தடுப்பூசிப் பற்றாக்குறை என்பது எதைக் காட்டுகிறது?

வெளிநாட்டுக்கே இந்தியா தடுப்பூசி ஏற்றுமதி என்று சொல்லி விளம்பர வெளிச்சத்தில் குளிக்க நினைப்பது எத்தகு விபரீதம்?

தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வசதி படைத்த நிறுவனங்களுக்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் - அதில் அரசியல் கண்ணோட்டம் - சந்தைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டனவே!

ரஷ்யாவிலிருந்து தடுப்பூசி வாங்கும் நிலை இப்பொழுது ஏற்பட்டு விட்டதே. உரிய காலத்தில் இந்த முடிவை எடுத்திருந்தால் தடுப்பூசி தட்டுப்பாடு இந்தியாவில் ஏற்பட்டு இருக்குமா?

சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேனாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம் போன்றோர் கூறுவது போல இப்பிரச்சினையில் மத்திய அரசு பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டு, மேலும் காலங் கடத்தாமல், பேரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் விஞ்ஞான மனப்பான்மையோடு மத்திய அரசும், துறைகளும் செயல்படட்டும்!

Comments