கணினி அறிவியல் பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணர் குழு

சென்னை,ஏப்.9- தமிழக பள்ளிக்கல்வியில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே தற்போது கணினி அறிவியல் தொடர்பான பாடங்கள் கற்றுத் தரப் படுகின்றன. இதர வகுப்புகளுக்கு கணினி பயிற்சி தொடர்பான எவ்வித வழிகாட்டுதலும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட்டது. தேர்தல் காரணமாக தாமதம் ஏற்பட்டுவந்த திட்டப்பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வரும் கல்வியாண்டில் (2021-2022) இருந்து 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கற்றுதரப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டம் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி பாடத்திட்டத்தை வடிவமைக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) தலைமையில் பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

எதிர்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத் திட்டத்தை தயாரிக்க முடிவாகியுள்ளது. இணையதள முறைகேடுகள் மற்றும் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு வழிமுறைகளும் பாடங்களில் இடம்பெறும். மே மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.

நூல் விலை மேலும் உயர்வு

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு

திருப்பூர்,ஏப்.9- தமிழக நூற்பாலைகள் கடந்த 7 மாதங்களாக, பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒசைரி நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் பாதிப்புகளை சந்தித்து வரும், திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, மார்ச் 15ஆம் தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தினர்.

கோவை தென்னிந்திய நூற்பாலைகள் சங்கமும்(சைமா), நூல் விலையை சீராக வைத்திருக்க கோரி, நூற்பாலைகளுக்கு கடிதம் அனுப்பியது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி, நூல் விலை பட்டியல் வெளியிடப்படும். வழக்கத்துக்கு மாறாக கடந்த 1ஆம் தேதி விலை பட்டியலை நூற்பாலைகள் வெளியிடவில்லை.

தற்போது சில நூற்பாலைகள், நூல் விலையை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளன. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் 10 , 34ஆம் நம்பர் நூல் கிலோவுக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. 40ஆம் நம்பர் ரூ.30,ரூ.50, 60ஆம் நம்பர் ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், ‘பஞ்சு விலை சீராக உள்ள போதும், நூல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரிய, சிறிய நூற்பாலைகள், போட்டி போட்டு விலை உயர்த்துகின்றன. இதுவரை, கிலோவுக்கு ரூ.92 உயர்ந்துள்ளது.

நூல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர், கரூர், ஈரோடு உட்பட தமிழக ஆடை உற்பத்தி துறையினரை ஒருங்கிணைத்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Comments