சாவு எண்ணிக்கையைக்கூட மறைப்பது அநாகரிக அரசியலே!

குஜராத்தில் ஏப்ரல் 14 அன்று ஒரே நாளில் 6,690 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், 67 பேர் இறந்ததாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவத் தொடங்கிய கடந்த ஓராண்டில் இந்தப் பாதிப்பு தான் மிகவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

"குவியல் குவியலாக இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுவதும், சாரை சாரையாக மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ்கள் படையெடுப்பதும் காண்கையில் சுகாதாரத் துறை அளித்திருக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் நம்பும் படியாக இல்லை" என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசு, தொலைக்காட்சி, இணையதள செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் சமூக ஊடகப் பதிவுகள் என அனைத்தும் அரசின் புள்ளி விவரங்கள் சரியானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன.

சூரத் நகரை விட்டு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு தலைதெறிக்க ஓடியதன் பின்னணியும் இந்தப் பதிவுகள் மூலம் புலப்படுகிறது.

ஏப்ரல் 12ஆம் தேதி அகமதாபாத் நகரில் 20 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள  ஒரே ஓர் அரசு மருத்துவமனையில் இருந்து மட்டும் 63 உடல்கள் கொண்டு செல்லப்பட்டதாக  ‘சந்தேஷ்எனும் குஜராத்தி மொழி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பத்திரிக்கையை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் அந்த மருத்துவமனையின் வெளியே 17 மணி நேரம் காத்திருந்து சேகரித்த செய்தியின் அடிப்படையில் இந்தத் தகவலை வெளியிட்டதாக அந்தப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

வெளியில் செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றையும் குறித்த தகவல்களை சேகரித்த அந்த செய்தியாளர், நகரின் இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் இத்தனை இறப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், நகரின் பிற மருத்துவமனைகள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய உயிரிழப்புகளை ஊகித்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்றும், உண்மையான புள்ளிவிவரத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணிகரோனா வைரஸ் தொற்று இறப்பு மட்டுமே  கரோனா இறப்பாகப் பதியப்படுவதாகவும், நோயாளிக்கு வேறு கோளாறுகள் இருந்து கரோனா தொற்றும் ஏற்பட்டால் அவை கரோனா இறப்புகளாக கணக்கிடப்படுவதில்லை என்றும், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வழங்கியுள்ள விதிகளைப் பின்பற்றியே புள்ளி விவரங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வழங்கியுள்ள நெறிமுறைகளில் கரோனா தொற்று சம்பந்தப்பட்ட அனைத்து இறப்புகளும் கரோனா தொற்று நோய் இறப்புகளாகவே பதியப்படவேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

இடுகாடு மற்றும் மருத்துவமனைகளின் வெளியே காத்திருக்கும் பத்திரிகையாளர்களோ அரசு தரும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களில் உண்மைத் தன்மை துளியும் இல்லை என்று கூறுகின்றனர்.

அதேபோல், இணையதள செய்தி நிறுவனமானகபர் குஜராத்’, "ஜாம் நகர் மாவட்டத்தில் செவ்வாயன்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இங்கு ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரே ஒருவர் உயிரிழந்ததாகவும் அறிவித்தது, ஆனால், ஏப்ரல் 10 முதல் 11ஆம் தேதி வரையான 48 மணி நேர  இடைவெளியில் 100 பேர் இறந்துள்ளனர்" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள குரு கோபிந்த் மருத்துவமனையில், இந்த மாவட்டத்தைத் தவிர மொர்பி, ராஜ்கோட், ஜூனாகாத் மற்றும் அம்ரேலி ஆகிய பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலான நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இங்கு ஏப்ரல் 13ஆம் தேதி மட்டும் 54 பேர் உயிரிழந்ததாக அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள இரண்டு இடுகாடுகளில் கரோனா விதிமுறைகளுடன் அடக்கம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்து விசாரித்த போது இந்த விவரங்கள் தெரியவந்ததாக  ‘கபர் குஜராத்செய்தியாளர் தெரிவித்தார்

சூரத் நகரின் நிலைமையோ இவ்விரு நகரங்களை விட மோசமானதாக, பதைபதைக்க வைப்பதாக உள்ளதுஇடுகாட்டிற்கு உடல்கள் வந்த வண்ணம் உள்ளதாக இங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு சராசரியாக 80 உடல்கள் வருவதாக ராம்நாத் கேளா மற்றும் குருக்ஷேத்ரா இடுகாட்டு ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். இங்குள்ள அஸ்வினி குமார் இடுகாட்டில் நாளொன்றுக்கு 100 உடல்கள் கொண்டு வரப்படுவதாக சொல்லப்படுகிறது. கரோனா இரண்டாம் அலைக்கு முன் ராம்நாத் கேளா மற்றும் குருக்ஷேத்ரா ஆகிய இடுகாடுகளில் நாளொன்றுக்கு 20 உடல்களும்அஸ்வினி குமார் இடுகாட்டில் நாளொன்றுக்கு 30 உடல்களும் வந்த நிலையில் இந்த திடீர் அதிகரிப்பால், ஊழியர்கள் திகைத்து நிற்கின்றனர்

இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்வதற்கு ஊர்திகள் கூட கிடைக்காமல், டெம்போக்களிலும்குப்பை லாரி மற்றும் கழுதைகள் இழுக்கும் சிறிய வண்டிகளிலும் உடல்களை ஏற்றிக் கொண்டு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இடுகாடுகளில் திறந்த வெளியில் சடலங்களை ஆங்காங்கே போட்டு எரியூட்டும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

உண்மைகள் இவ்வாறு இருக்க, பா... அரசு சாவில்கூட அரசியல் செய்யும் கேவலத்தை என்ன சொல்ல! நெருப்பைப் பஞ்சால் மறைக்கப் பார்த்தால் அதன் விளைவு என்னவாகும்

Comments