கரோனா ஒருநாள் பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் இந்தியா

 புதுடில்லி, ஏப்.7 இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உள்ளது.

இந்தியாவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் உயருகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. 

இதன்மூலம் கரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3ஆவது இடத்தில் நீடிக்கிறது.

ஆனால், ஒருநாள் கரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை இந்தியா விஞ்சியுள்ளது. உலக அளவிலான கரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம்- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

பிரேசிலில் 82 ஆயிரத்து 869- பேருக்கும், அமெரிக்காவில் 62,283-  பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொறுத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,211- பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும் இந்தியாவில் 631- பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டில்லி, குஜராத்தில் 

இரவு ஊரடங்கு அமல்

காந்திநகர், ஏப்.7 கரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு டெல்லி, குஜராத்தில் வருகிற 30ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

குஜராத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,24,878 ஆக உள்ளது.  17,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  4,598 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு குஜராத்தின் 20 நகரங்களில் வருகிற 30ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை இன்றில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளது.  இதனை முதல் அமைச்சர் விஜய் ரூபானி அறிவித்து உள்ளார்.  இதுபற்றி அதிகாரிகளுடன் அவர் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதற்கு பின்னர் ரூபானி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திருமண விழாக்களில் 100 பேர் அனுமதிக்கப்படுவர்.  பெரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 30ஆம் தேதி வரை தள்ளி போடவும்.  இதேபோன்று சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.

வார ஊரடங்கு பற்றி முடிவு எடுக்கும்படி வைக்கப்பட வேண்டும். குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு ஏற்ப அரசு இந்த முடிவை அறிவித்து உள்ளது.  அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

கரோனா பாதிப்புகளை முன்னிட்டு டில்லியிலும் வருகிற 30ஆம் தேதி வரை இதேபோன்று, இரவு ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Comments