பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்; மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.28 கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்காக பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர், வழக்குரைஞர் காளிமுத்து மயிலவன். இவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மனு விவரம் வருமாறு:

கரோனா பரவலை தடுக்க 2020 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காலத்தில், தினக் கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்பட வில்லை. அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு என பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது 2 ஆவது அலை பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட் டுள்ளன. இது ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிசெய்யவில்லை. எனவே, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் விதமாக, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கு உயர்மட்டக் குழுவை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித் தனர்.

பின்னர் நீதிபதிகள், மனுதாரர் கோருவதைப்போல, உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட முடியாது. அதேநேரம், இது சம்பந்தமாக மனுதாரர் கோரிக்கை மனுவை அரசுக்கு அளித்துள்ளார். அந்த மனுவை மத்திய, மாநில அரசுகள் 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர்.

Comments