புரட்சிக் கவிஞர் என்ற போராயுதம்!

இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின்

57 ஆவது நினைவு நாள்! (21.4.1964).

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்; மற்றபடி மறப்பதில்லை யாம்என்றும்.

தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கப் போராயுதமாம்

புரட்சிக் கவிஞரின் நினைவு நாள் இன்று!

அவர்தம் கவிதைகள் - வெறும் எழுத்துக் குவியல் அல்ல!

கருத்துப் பேழைகள் -

பகுத்தறிவு வெடிகள் -

பழைமையும், சனாதனமும்

கலகலத்துப் போக

கடைசிவரை, தன் புகழ்நோக்கா

வான்புகழ் வரிகளை வரைந்தவர்

'நான்தான் திராவிடன்' என்பதில்

தேன்தான் எந்நாவெல்லாம்

என்று நவின்ற நாயக முரசாளர்!

மற்ற கவிஞர்கள் தேசிய சுவர்களுக்குள்

அடைபட்டுக் கிடந்த காலகட்டத்தில்

உலக மானுடப் பரப்பை மனதால் அளந்து

உணர்வில் கவிதையாய் வடித்து

உயர்வாய் மனிதா என்று ஆணையிட்ட

எம் அருங்கவிச்செல்வம் புரட்சிக்கவிஞர்!

திராவிட இயக்கம் இனியும் என்றும்

பெற முடியாத

எங்கள் ஈடற்ற செல்வம்!

நீக்கமற நிறைந்துள்ளாய் வாழி! வாழி!!

 

கிவீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

21-4-2021

Comments