கரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள் என்னென்ன?

கொல்கத்தா,ஏப்.16- கரோனா வைரசின் புதிய அறிகுறிகளை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். இதுதொடர்பாக கொல்கத் தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது:

முதல் அலையின்போது இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. தற்போது 2 ஆவது அலையில் உடல்சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை புதிய அறிகுறிகளாக உள்ளன.

முதல் அலையைவிட தற்போது கரோனா வைரஸ் அதிவேக மாகப் பரவுகிறது. ஆனால், உயிரிழப்பு குறைவாக உள்ளது. கடந்த முறை 60 வயதுக்கு மேற்பட்டோர் வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இளைஞர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களிடம் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் அதிகம் தென்படுவது இல்லை. வயதானவர்களுக்கு மட்டுமே வைரஸ் அறிகுறிகள் அதிகமாக உள்ளன. கடந்த முறை காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் கரோனா வைரசை எளிதில் கண்டறிய முடிந்தது. இந்த முறை இளைஞர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாததால் வைரஸ் நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் எழுகிறது.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தல்

திருப்போரூர், ஏப்.16 நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் லிங்கன் தலைமையில் நேற்று (15.4.2021) நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள், சங்க நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் 26 ஆம் தேதி மனு வழங்க முடிவு செய்யப்பட்டது.

கடவுள் சக்தி எங்கேகோயிலில் தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த அவலம்

பொன்னேரி,ஏப்.16- பொன்னேரி அருகே கோயிலில் தீபம் ஏற்றியபோது, சேலையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருவாயர்பாடி, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் வனதாட்சி யம்மாள் (வயது 85). இவர், கடந்த 10 ஆம் தேதி திருவாயர்பாடியில் உள்ள கரிகிருஷ்ணபெருமாள் கோயிலுக்கு சென்றார். அப்போது, வனதாட்சியம்மாள், கோயிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் தீபம் ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. அருகில் இருந்த சக பக்தர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் பலத்த தீக்காயமடைந்த வனதாட்சியம்மாள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த வனதாட்சியம்மாள், 14.4.2021 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து,பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Comments