வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட மத்திய அரசு உத்தரவு

 புதுடில்லி,ஏப்.16- வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மே 15ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 739 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சத்து 74 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் ஆயிரத்து 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங் காட்சியகங்களை மே 15ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா பரவல் அதிரிப்பைத் தொடர்ந்து தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங் காட்சியகங்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூடுவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விலை சரிவால் சாலையில் தக்காளியை வீசிய விவசாயிகள்

தருமபுரி,ஏப்.16- தருமபுரியில் தக்காளி வரத்து அதிகரிப்பால், கடும் விலை சரிவை சந்தித்துள்ளதால் சாலைகளில் விவசாயிகள் தக்காளியை கொட்டிச் சென்றுள்ளனர்.

தக்காளிக்கு பெயர் பெற்ற தருமபுரியில் இருந்து கருநாடகம், கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. தருமபுரியில் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டுள்ளனர்.

இங்கு தற்போது தக்காளி விளைச்சல் மற்றும் வரத்து அதிகமானது. இதனால் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனையானது. இதனால் உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனையில் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளியை சாலைகளில் கொட்டியும், கால்நடைகளுக்கு உணவாகவும் வழங்கி சென்றனர்.

அனுமார் பிறந்த மாநிலம் ஆந்திராவாகருநாடகாவாஅடித்துக் கொள்ளும் சாமியார்கள்

அமராவதி,ஏப்.16- கற்பனை கடவுளர் அனுமார் பிறந்தது ஆந்திரா மாநிலத்தில்தான் என்று திருமலை திருப்பதி தேவஸ் தானம் கூறியது, சாமியார்கள் இடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கருநாடகா மாநிலத்தின் ஹம்பி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என்பது மற்றவர்களின் வாதம். இதற்கு புராண தகவல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் உள்ளிட்ட வடிவங்களில் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறதாம். கருநாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஆனக்குந்தி எனும் இடத்துக்கு அருகில் உள்ள கிஷ்கிந்தா தான் ராமாயணத்தில் வரும் வனப் பகுதி.இங்கு இருக்கும் அஞ்சனாத்ரியில்தான் அனுமன் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வெளியிடவுள்ள புத்தகத்தில், ஆந்திராவின் சேசாசல மலைத் தொடரிலுள்ள அஞ்சனாத்திரியில்தான் அனுமன் பிறந்ததாக கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுக் கல்வியாளர்கள் அளித்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இதனை தாங்கள்கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள திருப்பதி தேவஸ்தானம், அனுமார் பிறப்பிடம் தொடர்பான ஆதாரங்களை ஏப்ரல் 21 அன்று வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதையொட்டி, சாமியார்களிடையே பெருத்த சர்ச்சை வெடித் துள்ளது. சேசாசலம் மலைத் தொடரில் உள்ள அஞ்சனாத்திரி, அனுமனின் தாயார் தவம் செய்த இடம்தான். அனுமன் பிறந்த இடம்அல்ல என்று அவர்கள் வாதிட்டு வருகின்றனர்.

அழகப்பா பல்கலைக் கழக இணையதள கற்றல் தளம் அறிமுகம்

சென்னை, ஏப்.16- தமிழகத்தின் முன்னணிப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றான காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இணையதள கற்றல் இணையதளமான www.auedu.in   அய் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது,

பல்வேறு வகையான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளை வழங்க இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள தாக அறிவித்துள்ளது அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இணையதளம் வழியே பாடங்களை நடத்துகின்றனர்.

www.auedu.in   இணையதளத்தின் மூலம் மாணவர்கள் எங்கிருந்தும் தொலைதூரத் தேர்வுகளில் கலந்துகொள்ள முடியும்.  இதில் வழங்கப்படும் கல்வி, சிறந்த தரமான பாடநெறி உள்ள டக்கம், ஆய்வு வழிகாட்டிகள், பயிற்சி சோதனைகள், கலந்துரை யாடல் மன்றங்கள், பதிவு செய்யப்பட்ட பயிற்சிகள் மற்றும் போட்டித்தேர்வுகள் ஆகியவற்றுடன் கூடுதலாக நேரடிக் கற்றலின் கலவையாக இருக்கும் என்று அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் என்.ராஜேந்திரன் தெரிவித் துள்ளார்.

இப்பல்கலைக்கழகம், பொதுமேலாண்மை, நிதிமேலாண்மை, மனிதவளமேலாண்மை, தளவாட மேலாண்மை மற்றும் சுற்றுலா மேலாண்மை ஆகிய பாடத்திட்டங்களில் எம்.பி.. பட்டங்களை வழங்குகிறது.  இணையதளத்தில் வழங்கப்படும் பிற முதுகலை பட்டங்களில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல், ஆங்கிலம், வணிகவியல் ஆகிய முதுகலைப் பட்டங்களும் அடங்கும்.

Comments