அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கான பொன்னாரம்!

இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் (1891). இவ்வாண்டு அவரின் பிறந்தநாளுக்கு ஒரு கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

1956 அக்டோபர் 14ஆம் நாள் பல இலட்சம் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு பவுத்தம் தழுவினார் அண்ணல் அம்பேத்கர்.

எப்படி எப்படியெல்லாம் கரித்துக் கொட்டினார்கள்; வசவு நெருப்பு மழையை அவர்மீது பொழிந்தார்கள்!

அதுவும் அவர் பவுத்தம் தழுவிய போது ஏதோ ஒரு வரியைச் சொல்லி விட்டுச் சென்றவர் இல்லை. காரணக் காரியங்களை எடுத்துச் சொல்லித்தான், பிறப்பு முதல் தம்மை எல்லா வகைகளிலும் இழிவுப்படுத்தி இறுக்கிய சங்கிலிகளை எல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் 22 அரிய அறிவு மொழிகளை உறுதியாக ஏற்றுதான் பாழ்படுத்தும் பார்ப்பனீயத்தின் இந்து மதத்தை உதறித்தள்ளி மனிதநேய - பஞ்ச சீல பவுத்தத்திற்குள் தடம் பதித்தார்.

அந்த உறுதி மொழிகள் ஆரிய புரத்தாரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. எல்லாதரப்புகளிலும் இருந்த பார்ப்பனர்கள் சிகரத்தின் உச்சிக்கே சென்று சீறினார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் தமது "திராவிட நாடு" இதழில் கட்டுரை (21.10.1956) ஒன்றைத் தீட்டினார்.

"அந்த மதமாற்றச் செய்தியை சித்தரித்துள்ள ஒரு நிருபர் 'உலகில் வேறு எங்கும் நடைபெறாச் சம்பவம் இது" என்று குறிப்பிட்டு இருந்ததை அண்ணா அவர்கள் எடுத்துக் காட்டினார்.

அக்கட்டுரையில் அண்ணா அவர்கள் கூறிய தகவல் முக்கியமானது.

"இந்தியத் துணைக் கண்டத்தில் மதமாற்றத்திற்காக வெளிநாட்டினர் ஒன்பது கோடி ரூபாயைக் கொடுத்திருக்கின்றனர் என்று காஞ்சி காமகோடி பீடத்தார் "இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டினர் இவ்வளவுப் பெருந் தொகையைச் செலவிட்டுள்ளனரே!' என்று பேசும் பேச்சு மதமாற்றத்திற்கான விடையாகாது."

"தனது மதிப்புக்கும், வருவாய்க்கும் இந்து மதத்தை மட்டுமே நம்பி உயிர் வாழ்ந்து உயர்நிலையில் வீற்றிருப்பவராவார் சங்கராச்சாரியார். எப்பொழுதும் போல் சரிந்து வரும் தனது மதிப்பையும், குறைந்து வரும் தனது வருவாயையும் இருக்கும் நிலையிலாவது பாதுகாத்துக் கொள்ளும் போக்குள்ளதாகத்தான் சங்கராச்சாரியாரின் இப்பொழு தைய செயல்திறம் அமைந்திருக்கிறதேயல்லாது, இந்து மதத்தை மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இல்லையானாலும், இருக்கிறவர் களாவது தாங்கள் இருக்கிற வரை அதிலேயே ஒட்டிக் கொண்டு இருக்கும் வகையில், அதைப் புனிதமுடையதாக ஆக்கும் விருப்பம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை" என்று அண்ணா அவர்கள் அவருக்கே உரிய பாணியில் கருத்து நயத்தோடு பதிவு செய்தார்.

அது 1956இல் நடந்தது - 65 ஆண்டுகளுக்கு முன்; அதற்குப் பிறகாவது இந்து மதம் தன் போக்கில் உருப்படியான மாற்றத்தை நோக்கிப் பயணித்ததுண்டா?

தீண்டாமைப் பற்றி இந்து மதத்தின் குரு பீடமான சங்கராச்சாரியார் களின் கருத்து என்ன?

"தீண்டாமை க்ஷேமகரமானது" என்று கூறியவர்தானே மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. இவர்தான் சங்கராச்சாரியார்களிலேயே அசாதாரணமானவர் என்று குருமூர்த்தி கும்பல் கூறுவது வழக்கம். அத்தகையவரின் யோக்கியதையே மனித வெறுப்பின் உச்சம் இப்படிக் கொழுந்து விட்டு எரிகிறது என்றால் மற்றவர்களைப் பற்றிப் பேசுவானேன்?

"உலகத்திலேயே உயர்ந்தவகை சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி னாலும், ஆடை அணி மணிகளால் அலங்கரித்தாலும் பிறவியில் அவர்கள் மீது படிந்த தீண்டாமை என்னும் அழுக்கை போக்கவே முடியாது" என்று சொன்னவர்தானே சிருங்கேரி சங்கராச்சாரியார்.

இன்றும் கூட பார்ப்பனர்கள் தவிர, கோயில் கருவறைக்குள்  பார்ப்பனர் அல்லாதார் சென்று அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடும்; ஒரு படி மேலே சென்று சாமி செத்து விடும் என்று சொல்லுவது  பார்ப்பனர்கள்தானே.

இத்தகு ஒரு மதத்திலிருந்து சுயமரியாதை கருதி மக்கள் விலகுவது, - மாறுவது என்பதை எப்படிக் குற்றமாகக் கருத முடியும்?

இழிவுபடுத்துவோம் - ஆனாலும் இந்து மதத்தை விட்டு விலகக் கூடாது என்றும் கூறும் ஆணவத்தை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? மானமும் - அறிவும் தானே மனிதனுக்கு அழகாகவும் இருக்க முடியும்!

இன்றைக்கு என்ன செய்கின்றன பா...வும் - சங் பரிவார்களும்? ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் கிடைத்து விட்டது என்ற ஒரே காரணத்துக்காக மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளதே - பல மாநிலங்களிலும். இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைத்தது போலத்தான் உச்சநீதிமன்றம் அண்மையிலே ஓர் அரிய தீர்ப்பினை ஆணித்தரமாக வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாயா என்பவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

"ஒருவரிடம் நயவஞ்சகமாக நம்பும்படிப் பேசி மதமாற்றம் செய்வதைத் தடுக்க, மத்திய மாநில அரசுகள் தவறி விட்டன. இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க போதிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்" என்பதுதான் அந்த மனுவில் கூறப்பட்டிருந்த கோரிக்கை.

இந்த மனுவை நீதிபதி ஆர்.எப்.நாரிமன், பி.ஆர்.காவாய்,  ஹரிஷி கேஷ்ராய் ஆகியோர் விசாரித்தனர். நீதிபதிகள் அப்பொழுது

தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை.

"இந்த மனுவை எந்த அடிப்படையில்  தாக்கல் செய்துள்ளீர்கள் எனத் தெரிவில்லை. நாட்டில் 18 வயது நிரம்பிய ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றவும் உரிமை உள்ளது.

எனவே மனுமீது தொடர்ந்து வாதாட விரும்பினால், கடும் அபராதம் விதிக்கும் நிலை ஏற்படும்" என்று முத்திரைப் பதித்த தீர்ப்பை வழங்கினர்.

இதனால் மனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறிய வழக்குரைஞர், தங்கள் கோரிக்கைக் குறித்து மத்திய அரசு மற்றும் சட்ட ஆணையத்தில் முறையிட அனுமதி கோரினார். கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தார். ('தினமலர்', 10.4.2021)

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த இப்பொன் னாளில் அவருக்குச் சூட்டப்பட்ட புகழ் பொன்னாரம் தானே இது!

வாழ்க அண்ணல் அம்பேத்கர்!

Comments