பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு

பெங்களூரு, ஏப்.9 கரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(10.4.2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சர் எடியூரப்பா  வெளியிட்டார்.

  நாட்டில் கரோனா 2ஆவது அலை வீசத் தொடங்கியுள்ளது. வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கரு நாடகத்திலும் கரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாநில முதல் அமைச் சர்களுடன் பிரதமர் மோடி நேற்று (8.4.2021)  டில்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

  இந்த கூட்டத்தில் கருநாடகத்தில் கரோனா பரவலை தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடியூரப்பா விவரித்தார். 

 கருநாடகத்தில் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை (10.4.2021) முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கருநாடகத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலபுரகி, பீதர், துமகூரு, உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 நகரங்களில் வருகிற 10ஆம் தேதி (நாளை) முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.

53 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கரோனா தடுப்பூசி வினியோக இயக் கம் வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. கண்காட்சி, திருவிழா, மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்குஅபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் படும். மாநிலம் முழுவதும் 6 ஆயிரம் மய்யங்களில் கரோனா தடுப்பூசி வினி யோகம் செய்யப்படுகிறது. கருநாடகத்தில் இதுவரை 53 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கருநாடகத்தில் 30 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள், 42 ஆயிரம் பொது படுக்கைகள், 3 ஆயிரம் தீவிர சிகிச்சை படுக்கைகள், 2,900 செயற்கை சுவாச கருவி இருக்கக்கூடிய படுக்கைகள் இருப்பு உள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள் வாங்க பிரதமர் கேர் நிதியில் இருந்து நிதி உதவி வழங்குமாறு கேட்டுள்ளேன். கரோனாபரவலை தடுக்க கருநாடக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

Comments