தமிழகத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, ஏப்.8 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,986 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 3,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,11,110 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (7.4.2021) மேலும் 17 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,821 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 1,459 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,851 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 1,824 பேர் கரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,70,546 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 27,743 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 144(1) உத்தரவு

பெங்களூரு, ஏப்.8 பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 144 (1) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பன்ட் நேற்று (7.4.2021) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் கடந்த சில நாள்களாக தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நீச்சல் குளம், கேளிக்கை விடுதி, விருந்து நிகழ்ச்சி நடத்தும் இடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி உள்ளிட்டவை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் புதன்கிழமை (நேற்று) முதல் குற்றவியல் நடைமுறை சட்டம் 144 (1)ம் பிரிவின்படி நீச்சல் குளங்கள் முற்றிலுமாக மூடப்படுகின்றன. உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள், மதுபானக் கடைகள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கையுடன் இயங்க அனு மதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

144 (1) உத்தரவு, தடை உத்தரவு இல்லை என்ற போதிலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே காவல்துறையினர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.

Comments