தொழில்துறைகளை ஊக்கப்படுத்த அமீரகத்தில் 3 ஆயிரம் கோடி திர்ஹாம் நிதி வழங்கும் திட்டம்

துபாய், ஏப்.6 அமீரகத்தில் தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமீரக வளர்ச்சி வங்கி மூலம் 3 ஆயிரம் கோடி திர்ஹாம் நிதி வழங்கும் திட்டத்தை துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.

வங்கி மூலம் நிதி வழங்கும் திட்டம்

அமீரகத்தில் தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமீரக வளர்ச்சி வங்கி மூலம் 3 ஆயிரம் கோடி திர்ஹாம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட் டத்தை 5.4.2021 அன்று அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமீரக அரசின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அடுத்த 5 ஆண்டுகளில் தொழில் துறைகளின் அளவுகளை இரட்டிப்பாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அமீரக வளர்ச்சி வங்கி மூலம் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள் உருவாகும்

குறிப்பாக தேசிய அளவில் சிறு மற்றும் மத்திய தர நிறுவனங்களுக்கு இந்த நிதியானது பெரும் ஆதரவாக இருக்கும். இந்த நிதி ஆபரேசன் 300 பில்லியன் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் இருக்கும்.

சிறு தொழில்துறைகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் அந்த துறை மேம்படுவது மட்டுமல்லாமல் தேசிய அளவில் பொருளாதார வளர்ச் சிக்கும் பயனுள்ளதாக இருக்கும். தேசிய பொருளாதார மேம்பாடு அமீரக அரசின் அடுத்த கட்ட முக்கிய நோக்கமாக உள்ளது.இந்த வளர்ச்சி நிதியின் மூலம் அமீரகத்தில் புதிதாக 13 ஆயிரத்து 500 நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் மொத்தம் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் அமீரகத்தில் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments