கரோனாவின் 2ஆவது அலைக்கு காரணம் என்ன?

மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

புதுடில்லி, ஏப்.8 இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் ஒரு லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப் பட்டது.

ஆனால் இப்போது தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர் வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கரோனா பரவலின் 2 ஆவது அலை எழுச்சி பெற காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித் துள்ளனர்.

டாக்டர் கிரிதரா ஆர்.பாபு (தொற்றுநோய்த் துறை தலைவர், இந்திய பொது சுகாதார நிறுவனம்):-

கரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணங்கள் உண்டு. புதிய வகை கரோனா பரவலை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட நிச்சயமாக தொற்று பரவல் அதிகரிப்பில் அவற்றுக்கு பங்கு உண்டு. அவற்றில் சில நோய் எதிர்ப்பு தன்மைக்கு தப்பிப்பவை யாகவும், முந்தைய வைரஸ்களை விட வேகமாக பரவுபவையாகவும் உள்ளன. பிரே சில் வகை கரோனாவை பொதுவாக நோய் எதிர்ப்புச்சக்தி கண்டறிவதில்லை. இதே போன்று தென்ஆப்பிரிக்க வகையில், துணைக் குழுக்களும் உள்ளன. அதுவும் ஆன்டிபாடிகளால் கண்டறியப்படுவதில்லை.

இந்தியாவில் தடுப்பூசி போடுவது, எந்த அளவுக்கு வேகமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்த அளவுக்கு இப்போதைய வேகம் இல்லை. ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது திருப்திகரமாக இல்லை.

பாதிப்பு ஏற்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி குறைந்தபின்னர் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது விரிவாக ஆராயப்படவில்லை. இதன் விளைவாக நிறைய எண்ணிக்கையிலான வர்கள் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

சுற்றுச்சூழல் காரணங்களும், சமூக நடத் தையும் கரோனா பரவலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுக்கூட்டங்கள், திருமணம் போன்ற விழாக்களில் பங்கேற்கிறபோது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பாகிறது.

டாக்டர் என்.கே.அரோரா (தொற்று நோயியல் நிபுணர்):-

4 அல்லது 5 காரணிகள் ஒரே நேரத்தில் சேர்ந்து செயல்படுவதால் தொற்று பரவல் அதிகரிக்கிறது. வைரஸ் பரவல் அலைபோல வருவது இயல்பான ஒன்றுதான். கரோனா பரவல் பற்றிய பயம், முதல் 6 மாதங்களில் இருந்த அளவுக்கு இப்போது இல்லை. குறைந்து விட்டது. பொருளாதாரம் எல்லா வற்றையும் திறந்து விட்டது. மக்கள் வெளியே வருகிறார்கள். ஆனால் கரோனா கால நடத்தைகளில் கவனக்குறைவு உள்ளது. கூட்டம் கூடுவது அதிகரித்து இருக்கிறது. இது லேசான நோய் என்ற எண்ணமும் வந்து விட்டது. முகக் கவசம் அணிவது மிகவும் குறைந்து விட்டது. புதிய வகை கரோனாவும் பரவல் அதிகரிக்க ஒரு காரணம்தான்.

பேராசிரியர் ஜெயபிரகாஷ் முலியில் (வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி முன் னாள் முதல்வர்):-

கரோனா பற்றிய கவலை மக்களிடம் குறைந்துள்ளது. முதலில் மக்கள் பயந்தனர். ஆனால் இப்போது அதே மக்களிடம் பயம் குறைந்து இருக்கிறது. புதிய வகை கரோனா வால் தாக்குதல் விகிதம் அதிகரிக்கக்கூடும்.

முந்தைய பாதிப்பால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை புதிய வகை கரோனா பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கான ஆதாரம் தற்போது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Comments