பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்பு மீண்டும் தொடங்கியது

சென்னை, ஏப்.9 கரோனா தொற்று காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.

சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 2 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடி மய்யங்களாக செயல்பட்டதால் மாணவர் களுக்கு வகுப்புகள் நடத்த முடியாத நிலை உருவானது.

இந்தநிலையில் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி 7.4.2021 அன்று நடைபெற்றது. கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக அனைத்து பள்ளிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

அரசு, மாநகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன. வகுப்பறைகள், கழிப்பறைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன.

இதையடுத்து நேற்று (8.4.2021) பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வழக்கம்போல் சைக்கிள்களிலும், பேருந்துகளிலும் சென்றனர்.

கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் முகக் கவசம் கட்டாயம் அணியவும், கிருமி நாசினி பயன்படுத்தவும் அறி வுறுத்தப்பட்டது. மாணவ-மாணவிகள் போதிய இடைவெளியுடன் அமர்ந்து வகுப்புகளில் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். கரோனா தொற்று மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் மாணவர்கள் வருகை குறைந்துள்ளது.

நேற்று 70 சதவீதம் பேர் மட்டுமே வகுப்புகளுக்கு வந்திருந்தனர். வருகிற 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் முகக் கவசம் அணிய வலியுறுத்தி வழக்கு

புதுடில்லி, ஏப்.9 தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் கட்டாயம் முகக் கவசம் அணிய உத்தரவிடக் கோரிய மனு மீது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட அய்ந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் சில மாநில மக்களவை இடைத்தேர்தல் மார்ச் 27 இல் துவங்கி இம்மாதம் 29 வரை நடக்கிறது. நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்னும் அய்ந்து கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் முகக் கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உத்தர பிரதேச முன்னாள் காவல்துறை இயக்குநர் விக்ரம் சிங், டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சாமானிய மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நேரம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தின் போது முக கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அவர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வலியுறுத்தி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க தாக்கீது அனுப்பியது.

Comments