அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

 சென்னை,ஏப்.13- தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அடுத்த 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் 12.4.2021 அன்று நடைபெற்ற ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய முதலமைச்சர், இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கரோனா தொற்று மார்ச் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அய்..எஸ் அதிகாரிகள் தலைமையில் கண் காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமை யாக கடைப்பிடிக்குமாறும், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், பொதுமக்களும் தங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தொழிற்சாலைகள், உணவுக் கூடங்கள், மார்க்கெட் போன்ற பகுதியிலுள்ள நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வருமாறு கேட்டுக் கொண்ட முதலமைச்சர், திரையரங்கு, சந்தை மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வந்த நிலையில், அதனை 400ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 90 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு குறையாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

கரோனா தொற்று அதிகரிக்க உருமாறிய கரோனாவும், விதிகளை பின்பற்றாததுமே காரணம் எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி

புதுடில்லி, ஏப்.13 கரோனா விதிமுறைகளை பின்பற்றாததும், உருமாறிய கரோனாவும்தான் இந்தியாவில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்று எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு, 1 லட்சத்து 69 ஆயிரத்தை தொட்ட நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா நேற்று (12.4.2021) பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த பிப்ரவரி மாதம், கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. உடனே மக்கள் மெத்தனமாகி விட்டனர். கரோனா செயலிழந்து விட்டதாக நினைத்து, விதிமுறைகளை பின்பற்ற தவறினர்.

நோயை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். வெளியே போய் பார்த்தால், சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என எல்லாவற்றிலும் கூட்டமாக உள்ளது. இவைதான் நோயை பெரிய அளவில் பரப்பும் காரணிகள். முன்பெல்லாம், ஒருவருக்கு கரோனா வந்தால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு தொற்றை பரப்பி விடுவார்.

ஆனால், இப்போது ஒரு கரோனா நோயாளி ஏராளமானோருக்கு நோயை பரப்பி விடுகிறார். அந்த அளவுக்கு கரோனா பரவல் விகிதம் வேகமாக உள்ளது. இதற்கு எளிதாகவும், அதிகமாகவும் பரவக்கூடிய மரபணு உருமாறிய கரோனாக்கள்தான் காரணம்.

ஒட்டுமொத்த மனித இனமே கடினமான தருணத்தில் உள்ளது. முக்கியமான வேலை இன்றி வெளியே செல்லாதீர்கள். கூட்டம் சேரக்கூடாது. கரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுங்கள். அலட்சியமாக செயல்பட்டால், இதுவரை கிடைத்த பலன்களையும் இழக்க நேரிடும். நிலைமை கை மீறி சென்று விடும்.

நிலைமையை சரிசெய்யாவிட்டால், கரோனா பரவல் விகிதம், நாட்டின் சுகாதார வசதிகள் மீது பெரும் கறையை உண்டாக்கி விடும். பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அது கரோனா வருவதை தடுக்காது. இருப்பினும், கரோனா வந்தால், நோய் தீவிரம் அடைவதை தடுப்பதுடன், இறப்பு விகிதத்தை குறைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments