வேகமாக சைக்கிள் ஓட்டுதல்: 2 கின்னஸ் சாதனை படைத்த ராணுவ அதிகாரி

புதுடில்லி, ஏப்.10  இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவர் பாரத் பன்னு. சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமும், திறமையும் மிக்க இவர் சைக்கிள்  ஓட்டுவதில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இதில் கடந்த அக்டோபர் மாதத்தில் 2 கின்னஸ் சாதனைகளையும் படைத்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.

அந்தவகையில் லே முதல் மணாலி வரையிலான 472 கி.மீ. தொலைவை கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வெறும் 35 மணி 25 நிமிடங்களில் கடந்து உள்ளார். இதைத் தொடர்ந்து டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர பாதையை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். இந்த 5,942 கி.மீ. தொலைவை 14 நாட்கள் 23 மணி மற்றும் 52 நிமிடங்களில் பாரத் பன்னு தாண்டியுள்ளார். இந்தியா கேட் பகுதியில் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி அதே இடத்தில் முடித்துள்ளார்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் புதிய சாதனையாக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து உள்ளது.

இதற்கான சான்றிதழ்களையும் பாரத் பன்னுவுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு 2 கின்னஸ் சாதனை படைத்த ராணுவ அதிகாரி பாரத் பன்னுவை சக அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பாராட்டி யுள்ளனர்.

Comments