டில்லி கங்காராம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 நோயாளிகள் சாவு

புதுடில்லி, ஏப்.24 டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 நோயாளிகள் மரணத்தை தழுவி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைநகர் டில்லி கரோனாவின் பிடியில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பல மருத்துவமனைகளில் தீவிரமான பாதிப்பில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் நெருக்கடி தொடர்கிறது.இந்த நிலையில் டில்லி ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள சர் கங்காராம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலையில் இருந்து வந்த 25 கரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களின் இறப்புக்கு காரணம் குறைந்த அழுத்த ஆக்சிஜன்தான் என ஒரு தகவல் கூறுகிறது.இது அவர்களது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெருக்கடியில் 60 நோயாளிகள்...

இதையொட்டி அந்த மருத்தவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கையில் உள்ள ஆக்சிஜன் இருப்பு அடுத்த 2 மணி நேரத்துக்குத்தான் தாங்கும். வென்டிலேட்டர்களும், பைபாப் கருவிகளும் (சுவாச கருவி) திறம்பட செயல்பட வில்லை. மோசமான நிலையில் உள்ள இன்னும் 60 கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் நெருக்கடி ஏற்படக்கூடும். மிகப்பெரும் நெருக்கடிக்கு வாய்ப்பு உள்ளது.

தீவிர சிகிச்சைப்பிரிவிலும், அவசர சிகிச்சைப்பிரிவிலும் மேனுவல் வென்டிலேசன்முறையை பின்பற்றுகிறார்கள் என குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சதேந்திர கட்டோச் கூறுகையில்,  குறைந்த ஆக்சிஜன் செறிவு, சிக்கலான நோயாளிகளின் இறப்புக்கு காரணமாகி இருக்கலாம். மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உயர் அழுத்த, நிலையான ஆக்சிஜன் வினியோகம் தேவை என குறிப்பிட்டார்.

Comments