உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்-ஏப்ரல் 23 : புத்தகர் பெரியாரைப் புரிந்துகொள்வோம்!

கி.வீரமணி

ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக நாள்!

நல்ல புத்தகங்கள் அறிவு நீர்வீழ்ச்சிகளாகும். அறியாமை இருளில் சிக்கியுள்ள மனித குலத்தை அறிவு வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்று மனிதர்களின் சிறப்பு அம்சமான ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைச் சாணை தீட்டி முனை மழுங்காமல், எப்போதும் கூர்மையுடன் வைத்திருக்க உதவும் சாணை தீட்டும் அருமையான கருவிகளாகும்.

எழுத்துகளைக் கண்டு அறிவதற்கு முன்பு இப்படி ஒரு வசதி இல்லை.

கருத்துகளை வாய்மொழி மூலம் கூறித்தான் அக்கால அறிஞர்களும், மதம் பரப்பிகளும் தமது பிரச்சாரங்களைச் சீடர்கள் மூலம் செய்தனர்!

இதனால் குருவின் மொழிகளும் அறிவுரைகளும்கூட விடப்பட்டவைகளாகவும், மாற்றப்பட்டவைகளாகவும், திரித்துச் சொல்லப்பட்டவைகளாகவும் ஆகிய ஆபத்து உருவாகி, அவர்களது அறிவுரைகள், அனுபவ விளக்கங் கள் எல்லாம் இதைக் கொண்டு சென்று பரப்பினார்கள். விருப்பு, வெறுப்பு,  நினைவாற்றல் இன்மை, மக்களிடம் இவற்றை எடுத்துச் சென்றால் ஏற்பார்களோ என்ற பயம் கலந்த தயக்கம் - அதன் காரணமாக பின்வாங்கிய நிலையும் உண்டு.  இதனால் புத்தரின் பகுத்தறிவு நெறிகூட தன் துவக்க அடையாளத்தை இழந்தது. பல பிரிவுகள் உருவாகி, கடவுள் இல்லை  என்று புத்தர் சொன்ன அந்த மார்க் கத்திலேயே அவரே கடவுளாக்கப்பட்டு, மகாவிஷ்ணுவின் 9ஆவது அவதாரமாகவும் ஆக்கப்பட்ட நிலைகூட ஏற்பட்டது!

ஆனால் அச்சு இயந்திரத்தை ஜெர்மெனியில் கூட்டன் பர்க் என்பவர் கண்டுபிடித்தபின், அச்சுக்கலை மூலம் புத்தகங்கள் வாய்மொழி மற்றும் ஓலைச் சுவடிகள் கட்டத் தைத் தாண்டி, அச்சு மூலம் பல நூறு படிவங்கள் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின.

பாதுகாத்து பல தலைமுறைகளுக்கு அவற்றை அளிக்கும் தொழில் நுட்பம் மூலம் பல கட்ட வளர்ச்சிகளை அடைந்து விட்டது.

தற்போதைய நவீன உலகில் மின்னஞ்சல்போலவே மின் புத்தகங்கள் E-Books  கூட இப்போது ஏராளம் வந்து விட்டன! எழுத்துப் புரட்சி, இணையப்புரட்சி என்றெல்லாம் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டுள்ளதே!

மக்களிடையே கல்வி அறிவைப் பரப்ப அரும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, Revolt, உண்மை போன்ற ஏடுகளை துவக்கி நடத்தினார். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே 1925-லேயே - அதாவது இன்றைக்கு 96 ஆண்டு களுக்கு முன்பிலிருந்து அவர் வார ஏட்டினைத் துவக்கி கருத்துப் புரட்சி, அறிவுப் புரட்சியைச்  செய்தார்.

அவரையும் காமராசர் போன்ற  தலைவர்களையும் படிக்காதவர்கள் என்ற பட்டியலில் வைத்துக் குறிப்பிடு கிறார்கள்.

கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்கவில்லை என்ப தாலே அவர்களைப் படிக்காதவர்கள் என்று கூறி, படிப்பு என்பதற்கு குறுகிய ஒரு பொருளைத் தருவதுதான் இந்நாட்டவர் வழக்கம்.

தந்தை பெரியார் அவர்கள் படித்த நூல்களும், சுயசிந் தனை - ஆராய்ச்சி இவற்றை அவர்கள் பயன்படுத்தியதும் பலரும் அறியாத அதிசயங்கள்!

தந்தை பெரியார் அவர்கள் பன்திறன் ஆற்றல் - பலரும் அறியாதவைகளாகும்.

அவர் எழுத்தாளர்; கருத்தாளர்; பேச்சாளர்; சுயசிந்த னைப் பட்டறையின் வார்ப்புகளை வரலாற்றினை உரு வாக்கிய பத்திரிகையாளர்; அச்சு எழுத்து - கோர்ப்பு - கம்போசிங்குகளை பற்றிய கடல் அனுபவம் உள்ளவர். எத் தனை எம் (m) என்று கூறுவது Galley Proof - என்ற மெய்ப்பை அவர் அறிக்கையில் அவரே 95 வயது வரை திருத்தும் பணியைச் சிறிதும் சோம்பல் இன்றிச் செய்தவர்; அச்சுக்கோக்கும் பகுதி மேலாளரை (Foreman) அழைத்து - இதில் ஓவர் Over எழுத்து எழுதியுள்ள திருத்தங்களைச் சரி பார்த்து போட்டு, பிறகு என்னிடம் காட்டுங்கள் என்று கூறுவார்கள். எத்தனை பாயிண்ட் எழுத்துகளை - தலைப்புக்குப் போட வேண்டும்? கூறுவார் அய்யா அவர்கள்!

பதிப்பகங்கள் நடத்தி - மலிவு விலையில் மக்களுக்குச் சேர்ப்பதை தனது வாழ்நாள் தொண்டாகச் செய்து வந்தவர் அந்த வைக்கம் வீரர்! எந்தப் புத்தகத்தை தந்தை பெரியாரிடம் கொடுத்தாலும் அதனை வாங்கியவுடன் கடைசிப் பக்கத்தைத்தான் முதலில் பார்ப்பார். முன்பக்கம் திருப்புவார் - விலை எவ்வளவு போடப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து, எத்தனை பாரம் (புத்தக அளவு 16 பக்கம்) என்று மனக் கணக்குப் போட்டுப் பார்த்து, விலையை ஒப்பிட்டுப் பார்த்து, என்ன இவ்வளவு விலையா? இதென்ன கொள்ளையாக உள்ளதே என்று கூறி வேதனைப்படுவார்கள்!

புத்தகத்தின் பைண்டு பற்றிக் கூடக் கவலையுடன் பார்ப்பார். பின் (Pin) அடிப்பது பிடிக்காது; நூல் போட்டு தைத்து, பாரங்களை (Forms) இணைக்கக் கூறுவார்கள் - இப்படி நூல் வெளியீட்டில் பரந்த அனுபவம் மிக்க பதிப்பாளராக இருப்பார்.

தான் பேசிய கூட்டங்களில் முதலில் கொள்கைப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி, அதில் அன்று தள்ளுபடி சலுகை விலை உண்டு என்று அறிவிப்பார்கள்;  வியாபாரத் திற்கு அல்ல ; மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்! பேசுவதற்கு முன்பு இயக்க வெளியீடுகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி, அதில் அடங்கியுள்ள கருத்துக்களையும், தகவல்களையும் விரிவாக  எடுத்துக்கூறி, அதன் பிறகே தன் சொற்பொழிவைத் தொடங்குவார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் புத்தகங்களை வாங்கவும், படிக்கவுமான ஆர்வத்தை வளரச் செய்தார் அய்யா!

கூட்டம் முடிந்து வேனில் ஏறியவுடன் முதற்கேள்வி, எவ்வளவு புத்தகம் விற்றது? என்று கேட்பார்கள்; (அது வருவாய்க்கல்ல) சொன்னவுடன், பதில் பரவாயில்லையே நமது புத்தகங்கள் எவ்வளவு பேர்களிடம் சென்றுள்ளது! என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள்!

அது மட்டுமா? அவர்களே ஏராளமான நூல்களைப் படித்தவர்; மற்றவர்களையும் படிக்க வைக்க ஊக்கப் படுத்திய உலகத் தலைவர் ஆயிற்றே! தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் - பல்வகைப்பட்ட நூல்களை.

பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல்வகைப் புராண நூல்கள் - வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள் - பாகவதம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் - இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு - அடிக்கோடிட்டு, அதனைப் பற்றிய ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும், சீரிய விமர்சனங் களாகவும்கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைகளைக் கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிட முடியாத சுயசிந்தனை மலர் களான தோட்டம் ஆகும்!

1930-களிலும் அதற்கு முன்னரும் அவர்தம் பகுத்தறிவு நூற்பதிப்பு கழகத்திலும் சரி, குடிஅரசுப் பதிப்பகத்திலும் சரி, தான் எழுதிய ஒப்பற்ற சுயசிந்தனை நூல்களான பெண் ஏன் அடிமை ஆனாள்? பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம் உரைத் தொகுப்பு நூலான தத்துவ விளக்கம் - இராமாயண பாத்திரங்கள் - இராமாயண குறிப்பு கள், கடவுள், மதம் பற்றிய பல்வேறு ஆய்வுகள் ஒருபுறம். இன்னொருபுறம் வெளிநாட்டுச் சிந்தனையாளர்களான அமெரிக்க இங்கர்சால், கருத்துரைத் தொகுப்புகள், பெர்ட்ரண்ட் ரசல், லெனின் கருத்துகள், லெனினும் மதமும், பெர்னாட்ஷாவின் உபதேசம், இன்னும் பலப்பல; அக்காலத்தில் அந்த ஆங்கில நூல்களை அனுமதி பெற்று தமிழில் மொழி பெயர்த்து மலிவு விலைக்கு, நாலணா, எட்டணா (அதாவது கால் ரூபாய், அரை ரூபாய்) விலையில் வெளியிட்டுப் பரப்பினார்கள் என்பது எவராலும் நினைக்க முடியாதது அல்லவா?

தந்தை பெரியார் அவர்கள் எந்தச் செயலையும் அதன் வேர்மூலம் என்னவென்றே ஆய்வு செய்து மற்றவர்க ளோடு விவாதம் செய்வார்கள்.

சுயசிந்தனையாளரும், சீரிய ஆய்வாளருமான அவர் களின் கைவல்யம் (உண்மைப் பெயர் பொன்னுசாமி) அவர்களை குடிஅரசு தனது படை வீர எழுத்துத் தளபதிகளில் முக்கியமாக வைத்திருந்தாரே!

சிந்தனைச் சிற்பி  .சிங்காரவேலரின் பொதுவுடைமைச் சித்தாந்தங்கள், அறிவியல் மனப்பான்மையைப் பரப்புதல், மூடநம்பிக்கைகளைச் சாடுதல் பற்றிய கட்டுரைகளைப் பதிப்பித்ததோடு, அவற்றைச் சிறு வெளியீடுகளாக வெளியிட்டுப் பரப்பி, புத்தகங்களை அறிவாயுதங்களாக ஆக்கி மகிழ்ந்த பகுத்தறிவுப் பாசறை பதிப்பாளர் புத்தகராக திகழ்ந்தார்களே!

இந்த வெளிச்சத்தை மறைத்துத் தான் இன்னும் பெரியார் அவர்களை சிலர் குறுகிய சிமிழுக்குள் அடைத்து மகிழ்கின்றனர்! இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

எனவே புத்தகர் பெரியார்பற்றி இன்னமும் எவ்வளவோ எழுதலாம் என்றாலும் இத்துடன் இப்போது முடிக்கிறோம்.

Comments