தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு: 22 பேர் உயிரிழப்பு

சென்னை, ஏப். 12- தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று (11.4.2021) புதிதாக 87 ஆயிரத்து 767 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 992 ஆண்கள், 2 ஆயிரத்து 626 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 618 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 976 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 124 பேரும், செங்கல்பட்டில் 631 பேரும், கோவையில் 617 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 20 பேரும், பெரம்பலூரில் 4 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 603 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 33 ஆயிரத்து 434 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 63 ஆயிரத்து 478 ஆண்களும், 3 லட்சத்து 69 ஆயிரத்து 920 பெண்களும், 3ஆம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 33 ஆயிரத்து 889 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 29 ஆயிரத்து 569 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 14 பேரும் என 22 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 12 பேரும், திருவள்ளூரில் இருவரும், செங்கல்பட்டு, மதுரை, பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 908 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,314 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 606 பேரும், செங்கல்பட்டில் 307 பேரும், கோவையில் 248 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 41 ஆயிரத்து 955 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments