20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை,ஏப்.17- தமிழகத்தில் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்றின் 2ஆம் அலை உருவாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைவிட தொற்று கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் உச்சபட்சமாக 6,993 பேர் வரை மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது பரவி வரும் கரோனா தொற்றின் 2ஆம் அலை மிகத் தீவிரமாக உள்ளது.

அதன்படி கடந்த 2 நாள்களாக தினமும் கிட்டத்தட்ட 8 ஆயிரம்பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. வரும் நாட்களில் தொற்று மேலும்அதிகரிக்கலாம் என்பதால், தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள், 1,900 மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மய்யங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி, கடந்த ஜன.16 முதல் தற்போது வரை 1.39 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏப்.14ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 54.85 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வந்துள்ளன. இதில்42 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதால், தொழிற் சாலைகள், அய்டி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் தடுப்பூசி முகாம்களை நடத்த சுகாதாரத் துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கோரிக்கைகள் அடிப்படையிலும், தகுதியானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ள தமிழக அரசு, கோவிஷீல்டு 15 லட்சம், கோவேக்சின் 5 லட்சம் என 20 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது.

தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்   

புதுடில்லி, ஏப்.17 வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நுகாவோர் விவகார செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்க ஆபரணங் களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல் படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கெனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பி.அய்.எஸ் ஏற்கெனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.அய்.எஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. எனவே, நடப்பாண்டு ஜூன் 1ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப் பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாய மாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments