மெட்ரோ ரயில்களில் முகக்கவசமின்றி பயணித்தால் ரூ.200 அபராதம்

 சென்னை, ஏப்.12 மெட்ரோ ரயில்களில் 11.4.2021 முதல்  முகக்கவசம் இல்லாமல் பயணித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கரோனா தொற்றில் இருந்து விடுபட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து 10.4.2021 முதல் அமல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முகக்கவசம் இல்லாமல் பொதுஇடங்களில் வருவோரிடம் ரூ.200 அபராதம் விதித்துக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகள் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படு கின்றனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் இல்லாமல் பயணித்தாலோ அல்லது முகக்கவசம் முறையாக அணியாமல் இருந்தாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், 11.4.2021 முதல் இந்த நடைமுறையை செயல்படுத்தி உள்ளதாகவும், இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்புக் குழு அமைத்து, கண்காணிப்பதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டம்

அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஏப்.12 மும்பை, பஞ்சாப், அரியானா, பீகார் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள, பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீரட்டைச் சேர்ந்த விஷால் பாதக் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மும்பை, பஞ்சாப், அரியானா, பீகார் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள, பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணையின்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற கோரிய மனு தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், மராட்டியம், பஞ்சாப், குஜராத், அரியானா மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, 9.4.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற கோரிய மனு தொடர்பாக பீகார் மாநிலம் மட்டுமே பதில் அளித்துள்ளது.

மத்திய அரசும், மராட்டியம், பஞ்சாப், குஜராத், அரியானா மாநில அரசுகளும் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Comments