ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி இலவசம் -தெலங்கானா அரசு அறிவிப்பு

அய்தராபாத், ஏப்.9 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி இலவசம் வழங்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதல் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் இன்னும் நீடித்து வருகிறது. கரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கரோனா 2ஆவது அலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது

இந்நிலையில் கரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்களும், பணியாளர் களும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்க முதல் அமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை  தொடங்கியது

சென்னை, ஏப்.9 சென்னையில் 12 ஆயிரம் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது. இதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும் கரோனாபரவல் சென்னையில் அதிகரித்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சென்னையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி, பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிய புதிய நடவடிக்கைகளில் களம் இறங்கியது. அதன்படி ஊரக உள்ளாட்சித்துறையின் உதவியோடு, தன்னார்வலர்களை பணியில் அமர்த்தி கரோனாதடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது.

காய்ச்சல் பரிசோதனை

ஒருவருக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டால் அந்த தெரு அல்லது பகுதி, கட்டுப்பாட்டு பகுதியாக கொண்டு வரப்பட்டு, வீடு வீடாக தினமும் சென்று தன்னார்வலர்கள் அங்குள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் கரோனாஅறிகுறி உள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கரோனாபாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னையில் கரோனாபாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ளனவா? என பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கியது.

12 ஆயிரம் களப்பணியாளர்கள்

அந்த வகையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அந்த பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாமுக்கு அழைத்து சென்று கரோனா பரிசோதனை செய்யயப்படும்.

இந்த கரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கரோனாசிகிச்சை மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக 4 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி

புதுச்சேரி,ஏப்.9- கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டணத்தில் 10 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள், உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதை மக்களிடையே ஊக்கப்படுத்தும் வகையில் புதுச்சேரி விடுதிகள், உணவகங்கள் சங்கத்தின் அறிவிப்புக்கு பெருமளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments