18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி மத்தியப் பிரதேச முதல்வரின் வெற்று அறிவிப்பு

 போபால்,ஏப். 23  மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலை பரவி வருகிறது. நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தடுப்பூசி இலவசமாக போடப்படுவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப் படும். கரோனா பரவல் சங்கிலியை அனைவரும் ஒன்றிணைந்து தகர்க்க வேண்டும். அதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

  மோடி தொலைக்காட்சியில் வந்து பேசிய மறுநாள் மத்தியப் பிரதேச முதல்வரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது, நாடு முழுவதும் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது, முதல் தடுப்பூசி போட்டு இரண்டாம் தடுப்பூசிக்கு இடையில் நீண்ட நாள் இடைவெளி இருக்கும் பட்சத்தில் முதல் தடுப்பூசியின் பலன் இல்லாமல் போய்விடும் என்று மருத்துவ அறிக்கை உள்ள நிலையில் நாட்டின் மருந்துத்தட்டுப்பாடு எல்லையைக் கடந்துவிட்டது, இந்த நிலையில் மோடியின் 15 லட்ச ரூபாய் அறிவிப்பு போல் மத்தியப் பிரதேச முதல்வர் அனைவருக்கும் தடுப்பூசி என்று வெற்று அறிக்கை விடுகிறார். பீகார் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் என்று கூறிய மத்திய அரசு இப்போது விலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க  பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்,ஏப்.23  மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்தினை  இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா 2ஆவது அலையானது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி, கரோனா தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

அதன்படி,கோவிஷீல்டு தடுப்பூசி விலையானது தற்போது விற்கப்படும் விலையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந் நிலையில் மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்தினை  இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: கரோனா தடுப்பூசி மொத்த உற்பத்தியில் 50% உற்பத்தியை மத்திய அரசுக்கும், 50% உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குமாறும் விதிக்கப் பட்டுள்ள புதிய விதியை நீக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசிகள் முழுவதையும் மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பெருகி வரும் மரணங்கள் 

ராஜ்கோட்,ஏப். 23 குஜராத் மாநிலத்தில் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில செய்தித் தாள்களில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் இரண்டாம் அலை கரோனா தொற்றால் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.   குறிப்பாக  இந்த கால கட்டத்தில் கரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.  இதில் பெரும்பாலானவை கரோனா மரணம் எனக் குறிப்பிடப்படுவதில்லை.

குஜராத் மாநிலத்தில் தினசரி மரண எண்ணிக்கை 120க்கும் மேல் காணப்படுகின்றன.   ஆயினும்  இதை விட அதிகமான கரோனா மரணங்கள் மாநிலத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   கரொனாவுடன் இணை நோய் இருந்து மரணம் அடைவோருக்கு இணை நோயால் மரணம் என சான்றிதழ் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற செய்தித் தாளான சந்தேஷ் செய்தித்தாளின் ராஜ் கோட் பதிப்பில் மொத்தமுள்ள 20 பக்ககங்களில் 6.5 பக்கங்களில் முழுவதுமாக இரங்கல் விளம்பரங்களே இடம் பெற்றுள்ளன.  

இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவற்றில் தொலைப்பேசி மூலம் மட்டும் தொடர்பு கொள்ளவும் என்னும் வாசகங்கள் இடம் பெற்று தற்போதைய நிலையை நினைவு படுத்துகிறது.

Comments