முகக்கவசம் அணியாதவர்கள் மீது தீவிர நடவடிக்கை; ரூ.17 லட்சம் அபராதம்

சென்னை, ஏப்.18 கரோனா தொற்றின் 2ஆவது அலையில் இருந்து தன்னையும், பிறரையும் பாதுகாக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிக முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது.

எனினும் சிலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாகக் சாலையில் வலம் வருகிறார்கள். இந்தநிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று காவல்துறை யினரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முகக்கவசம் அணியாதவர்களை மடக்கி பிடித்து வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்தவகையில் காவல்துறையினர் சார்பில் கடந்த 8ஆம் தேதி முதல் 16.4.2021 வரையில் சென்னையில் முகக் கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரத்து 901 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.17 லட்சத்து 80 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 95 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில்

5ஆம் கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா, ஏப்.18 மேற்கு வங்காளத்தில் நேற்று (17.4.2021) நடந்த 5ஆம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அங்கு தேர்தல் களம் தொடக்கம் முதலே அதிர்ந்து வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங் கிரஸ்-இடதுசாரிகள் என மும்முனை போட்டியால் போட்டிக்களம் அனல் பறக் கிறது.

தலைவர்களின் போட்டி பிரசாரம், வெறுப்பு பேச்சுகள், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் என மேற்கு வங்காள தேர்தல் களம் நாள்தோறும் தலைப்புச் செய்திகளை கொடுத்து வரு கிறது. அத்துடன் மாநிலத்தில் அவ்வப்போது நடந்து வரும் அரசியல் வன்முறையும் பேசுபொருளாகி வருகிறது.

இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அங்கு 4 கட்ட வாக்குப்பதிவுகள் ஏற் கெனவே முடிந்து விட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

வடக்கு 24 பர்கானாக்கள், பர்பா பர்தமான், நாடியா, ஜல்பாய்குரி, டார்ஜீலிங், கலிம்போங் ஆகிய 6 மாவட் டங்களை சேர்ந்த 45 தொகுதி களில் இந்த வாக்குப்பதிவு நடந்தது.

15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் பல இடங்களில் வாக்குப்பதிவுக்கு முன்னரே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது.

இதனால் அனைத்து தொகுதிகளிலும் காலையி லேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. மக்கள் வெயில் மற்றும் கரோனா அச்சுறுத்தல் போன்ற தடைகளையும் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிச் சென்றனர்.

அதேநேரம் முககவசம் அணியாமலும், சமூக இடை வெளியை பின்பற்றாமலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டளித்ததை காண முடிந்தது. இது கரோனா அச்சத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது.

மாநிலத்தில் கடந்த 10ஆம் தேதி நடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இது மேற்கு வங்காளத்தையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் நேற்றைய 5ஆம் கட்ட வாக்குப்பதிவு அது போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் எதுவும் நிகழாமல் பெரும் பாலும் அமைதியாக நடந்தது. அங்கு 78.36 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.  மாநிலத்தில் 6ஆவது கட்ட வாக்குப்பதிவு வருகிற 22ஆம் தேதி நடைபெறுகிறது.

Comments