கரோனா தொற்றால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 1,555 ஆக உயர்வு

சென்னை, ஏப்.17  சென்னை மாநகரப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,555 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறி யதாவது:

ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெருக்களில் பழுப்பு நிற வில்லைகளை ஒட்ட வேண்டும். கரோனா தொற்றுபாதித்த பகுதி என்பதை குறிக்கும் வகையில் சிறிய பதாகைகள் அமைக்கப்பட வேண்டும்.

6 நபர்களுக்கு மேல் தொற்று பாதிப்பு உள்ள தெருக்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும். 10 நபர்களுக்கு மேல் பாதித்திருந்தால், ஒரு காவலர் உதவியுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்த தெருக்களில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 39,500 தெருக்கள் உள்ளன. அவற்றில் 3 அல்லது அதற்கு மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக 1,555 தெருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அங்கு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.

Comments