அபாயகரமாக பரவும் பாதிப்பு, உயிரிழப்பு: தமிழகத்தில் 13,776 பேருக்கு கரோனா தொற்று

சென்னை, ஏப்.24 தமிழகத்தில் அபாயகரமான வகையில் கரோனா பரவி வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் நிகழ்கிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 13,776 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 432 ஆண்கள், 5 ஆயிரத்து 344 பெண்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 776 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 514 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,733 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 3,842 பேரும், செங்கல்பட்டில் 985 பேரும், கோவையில் 889 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 54 பேரும், அரியலூரில் 46 பேரும், பெரம்பலூரில் 10 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

78 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 456 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 34 ஆயிரத்து 324 ஆண்களும், 4 லட்சத்து 16 ஆயிரத்து 625 பெண்களும், 3ஆம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 38 ஆயிரத்து 99 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 46 ஆயிரத்து 469 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 34 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் என 78 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments