10ஆம் வகுப்பு மதிப்பெண்: விரைவில் விதிமுறை வெளியீடு

சென்னை, ஏப்.9 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் நிர்ணயித்தல் குறித்து, ஒரு வாரத்தில், வழிகாட்டல் விதிகள் அறிவிக்கப்பட உள்ளன.

கரோனா பிரச்சினையால், ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளை ரத்து செய்து, முதல்வர் உத்தரவிட்டார். இதன் காரணமாக, 10ஆம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வே எழுதாமல், ‘ஆல் பாஸ்செய்யப்பட்டனர்.இந்த மாணவர்கள், பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக்கில் சேர்வதற்கு, மதிப்பெண் பட்டியல் தேவைப்படு கிறது.

ஆனால், அரசு தரப்பில் தேர்வு நடத்தாததால், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை. அதேநேரம், பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் தருமாறு, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதன் காரணமாக, மதிப்பெண் நிர்ணயித்து சான்றிதழ் வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, விரைவில் வெளியிட, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.

தேர்வே நடத்தாமல், எந்த அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயிப்பது, மாணவர்களின் கற்றல் திறனை கணக்கில் எடுக்கலாமா அல்லது ஒன்பதாம் வகுப்பில், மூன்று பருவ தேர்வுகளின் மதிப்பெண்ணை சராசரியாக குறிப்பிடலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசிக் கின்றனர்.

இது குறித்து, விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments