உலகில் 10இல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு மருத்துவ கருத்தரங்கில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

உலகில் 10இல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு மருத்துவ கருத்தரங்கில் தகவல்

அபுதாபி, ஏப். 7 உலகில் 10இல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வருகிறது என்று அபுதாபியில் நடந்த மருத்துவக் கருத்தரங்கில் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மய்யத்தின் மூலம் காணொலி காட்சி வழியாக மருத்துவக் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் பேசிய அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மய்யத்தின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் அலி அல் ஒபைத்லி கூறியதாவது:-

உலகில் 10 பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வருகிறது. மேலும் 10 நோயாளிகளில் 9 பேர் தங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதையே தெரியாமல் இருக்கின்றனர். இதனால் தற்போது சிறுநீரக பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் காலக்கட்டத்திலும் எல்லைகளை தாண்டி இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

12.5 சதவீதமாக இருக்கும்

நியூயார்க், ஏப். 7- அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிதியம் (அய்.எம்.எப்.), வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை பொறுத்த வரை, இந்த ஆண்டு 12.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளது. ஆனால், சீனாவின் பொருளாதார வளர்ச்சியே இந்த ஆண்டில் 8.6 சதவீதம்தான் இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. எனவே, இந்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி, சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு, இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், சீனப் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகவும் இருக்கும் என்று இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment