இந்திய விமானங்களுக்கு 10 நாள்கள் தடை அய்க்கிய அரபு நாடுகள் முடிவு

 புதுடில்லி, ஏப்.23  இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், வரும் ஞாயிறு முதல், அடுத்த 10 நாள்களுக்கு, இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது அமீரக அரசு.

இந்திய விமானங்களுக்கு, பிரிட்டனும், பிரான்ஸ் நாடும் தடை விதித்த சில நாள்களில், அமீரக அரசும் இந்த முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானங்களுக்கு, பிரான்ஸ் நாடு 10 நாள்கள் தடை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் தனது இந்தியப் பயணத்தையே ரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரக நாட்டில், கிட்டத்தட்ட 10 மில்லியன் தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த அளவு கிட்டத்தட்ட ஒரு குடிமகனுக்கு ஒன்று என்ற அளவிலானது என்பதாகவும் அமீரக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தடுப்பூசி எடுத்துக்கெள்ளாதவர்களுக்கு, அவர்களின் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணமற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் கட்டாயம் அளிக்க காப்பீட்டு ஆணையம் வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.23  காப்பீடு வழங்குநர்கள், எந்த மருத்துவ மனை களுடன், பணமற்ற மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் ஏற்பாட்டை செய்திருக்கிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட மருத்துவ மனைகள், கரோனா உள்ளிட்ட அனைத்துவகை நோய்களுக்கும், ஒப்புக்கொண்டதைப் போலவே, பணமற்ற மருத்துவ சிகிச்சைகளை அளிப்பது கட்டாயம் என்று விளக்கமளித்துள்ளது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (அய்ஆர்டிஏஅய்).

ஏனெனில், சில மருத்துவமனைகள், கரோனா தொற்றுக்கு, பணமில்லாத சிகிச்சையளிக்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், எந்தெந்த மருத்துவமனைகள், காப்பீட்டு வழங் குநர்களுடன், எஸ்எல்ஏ எனப்படும் சேவை நிலை ஒப்பந்தத்தை கையொப்பமிட்டுள்ளனவோ, அந்த மருத்துவ மனைகள் கட்டாயமாக, கரோனா உள்ளிட்ட அனைத்துவகை நோய்களுக்கும், பணமற்ற சிகிச்சைகளை வழங்க வேண்டும்.

எனவே, பணமற்ற சிகிச்சை, தொடர்புடைய மருத்துவ மனையால் மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு புகார ளிக்கலாம் என்று அய்ஆர்டிஏஅய் விளக்கமளித்துள்ளது.

மகாராட்டிராவிற்கு முந்தைய அளவிலேயே ஆக்சிஜன் வழங்க வலியுறுத்தல்!

மும்பை, ஏப்.23 மகாராட்டிரா மாநிலத்திற்கு, முன்பு வழங்கப்பட்ட அளவிலேயே, மீண்டும் ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம் (நாக்பூர் அமர்வு) வலியுறுத்தியுள்ளது.

 மாநிலத்தில்  கரோனா தொற்று பரவல் மோசமடைந்துள்ளது. இதனால், அம்மாநிலத்தில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைத்தது மத்திய அரசு.

நாக்பூருக்கு, சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாய் பிளான்ட்டிலிருந்து வழங்கப்பட்ட 110 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் என்ற அளவிலிருந்து, 60 மெட்ரிக் டன்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மகாராட்டிரா மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.

இந்நிலையில்தான், நாக்பூர் அமர்வில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுனில் சுக்ரே மற்றும் எஸ்எம் மேடக் ஆகியோர், நாட்டின் கரோனா நோயாளிகளில் 40% பேரைக் கெண்டுள்ள மராட்டிய மாநிலத்திற்கு, எதற்காக ஆக்ஸிஜன் அளவைக் குறைக்க வேண்டும்? எனவே, உடடினயாக  மாநிலத்திற்கு பழைய அளவிலேயே ஆக்ஸிஜன் விநியோகத்தை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  

Comments