கும்பமேளா : இரண்டே நாட்களில் அரித்வாரில் 1000 பேருக்கு மேல் கரோனா

அரித்துவார், ஏப். 14- லட்சக்கணக்கான மக்கள் கும்ப மேளா விழாவுக்காக ஹரித்வார் வந்துள்ள நிலையில் சுமார் 1000 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரித்வார் நகரம் ஆன்மீக நகரங்களில் ஒன்றாகும். கங்கை நதி இமயமலையில் இருந்து சமவெளியில் முதல் முதலாக இறங்கும் இந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா விழா நடைபெறுகிறது. அவ்வகையில் தற்போது கும்ப மேளா விழா நடந்து வருகிறது.

தற்போது நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்துள்ளதால் இங்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு  விழா நடந்து வருகிறது.  லட்சக் கணக்கானோர் கூடும் இடத்தில் கட்டுப் பாட்டு விதிகளைப் பின்பற்றுவது கடினம் என்பதால் கரோனா பரவல் அதிகரிக்கும் எனப் பலரும் எச்சரிக்கை விடுத்தனர்.  ஆனால் அரசு அதைக் கருத்தில் கொள்ளாமல் விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

நேற்று முன் நாள் என்பதால் கங்கையில் குளிக்க லட்சக் கணக்கானோர் அரித்வாருக்கு வந்துள்ளனர்.   இவர்களில் பலர் கரோனா கட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ளவில்லை.  அரித்வாரில் பல இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமலும் சமுதாய இடைவெளியைப் பின்பற்றாமலும் உள்ளனர்.

இதனால் உத்தராகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1925 பேர் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் அரித்வார் நகரில் கடந்த திங்கள் கிழமை அன்று 408 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  நேற்று 594 பேருக்கு கரோனா உறுதி ஆகி உள்ளது.   கரோனா குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் நகர் முழுவதும் உள்ள போதும் விதிமீறல்கள் மிகவும் தொடர்ந்து நடந்து வருவதே உண்மை நிலை ஆகும்.

கரோனா பாதிப்பின் உண்மை விவரங்களை மறைக்கும் மத்திய பிரதேச பாஜக அரசு!

போபால், ஏப். 14-  மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், அதனால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த ஞாயிறன்று மட்டும், மாநில தலைநகர் போபாலில் 17 பேர், கரோனா தொற்றால் மரணித்ததாக செய்திகள் தெரிவித்த நிலையில், வெறும் 2 பேர் மட்டுமே இறந்ததாக மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கையும் 547 என்பதாக காட்டப்பட்டது.

போபால் நகரிலுள்ள மயான பொறுப்பாளர்களின் கணக்கீட்டின் படி, கரோனா மரண எண்ணிக்கைகளை மாநில அரசு குறைத்துக் காட்டுவது தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், மாநில அரசின் சுகாதாரத் துறையிலிருந்தே, தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத சிலர் கூறுவது என்னவெனில், “பிற மாநிலங்கள், கோவிட்-19 இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில், தங்கள் மாநிலம் அத்தகைய பாதிப் புக்கு ஆளாகவில்லை என்பதாக காட்டிக்கொள்ளவே, அரசின் தரப்பில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணித்தோர் எண்ணிக்கையையும் குறைத்து காட்டுகின்றனர்.

ஆனால், பொதுமக்களுக்கு உண்மை தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவர்களிடம் சிறந்த முறையிலான கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்என்றனர்.

Comments