"PERIYAR E.V.RAMASAMY A Man Ahead of his time" தந்தை பெரியார் குறித்த ஆங்கில புத்தகத்தின் ஆய்வு - காணொலிக்கூட்டம்

தந்தை பெரியாரின் தத்துவக்காற்று சுழன்று, சுழன்று அடிக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல ,தந்தை பெரியாரின் கொள்கைகள் இருபால் இளைஞர்கள் மத்தியில் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது.மொழி கடந்து, இனம் கடந்து, நாடு கடந்து மனிதமே தனது இலக்காகக் கொண்டு பாயும் தந்தை பெரியாரின் கருத்துகளை ஆங்கில மொழி வாயிலாக இன்னும் வீச்சாக உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்பது திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் எண்ணமும், கருத்தும், உழைப்பும் ஆகும். அந்த வகையில் அவரின் எண்ணத்தை ஈடு செய்யும் வகையில் பத்திரிக்கையாளர்  பாபு ஜெயக்குமார் அவர்களால் எழுதப்பட்ட"PERIYAR E.V.RAMASAMY A Man Ahead of his time"என்னும் ஆங்கில நூல் வெளி வந்திருக்கிறது.

அண்மையில் சென்னை புத்தகக் கண்காட் சியில் வெளியிடப்பட்ட அந்த  "PERIYAR E.V.RAMASAMY A Man Ahead of his time"எனும்  புத்தகத்தின் ஆய்வுக்கூட்டம் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக 7.3.2021 ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நேரம் காலை 10 மணி (இந்திய நேரம் இரவு 8.30 மணி)க்கு இணைய வழியாக காணொலி நிகழ்வாக நடைபெற்றது.

நிகழ்வினை ஒருங்கிணைத்த பெரியார் பன் னாட்டு மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் தனது அறிமுக உரையில்,

அறிமுக உரை:

மருத்துவர் சோம.இளங்கோவன்

"தந்தை பெரியார் அவர்களின் கருத்தால் ஈர்க்கப்பட்டு, பெரியாரை உலகெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் துடிப்பிலே பலர் பணியாற்றி வருகின்றார்கள். இதிலே மிக முக்கியத் தேவை ஆங்கிலத்தில் புத்தகங்கள் வேண்டுமென்பது. சில புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அது உலக அளவிலே போய்ச் சேரவில்லை. போய்ச் சேர வேண்டும். அதற்குப் பலரும் பாடுபட்டுக் கொண்டு வருகிறார்கள்.சிலர் எழுதிய புத்தகங்கள் இளைய தலைமுறைக்கு பிடித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் இருந்து பாலா ஜெயராமன் என்ற ஒரு பொறியாளர் பெரியாரைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியிருந்தார். அது இளைய தலைமுறைக்கு பிடித்திருந்தது.

பெரியாரைப் பற்றி சொல்பவர்கள் எல்லாம்... எதிரிகள், அவர் கடவுள் மறுப்பாளர், பார்ப்பன வெறுப் பாளர் என்பதையே சொல்லிச் சொல்லி  அதையே பல காலமாக பரப்பி வந்துள்ளனர்.தந்தை பெரியாரின் பன்முகத் தன்மை, மனித நேயம், அனைவரும் சமம், பெண்ணுரிமை பற்றிய கருத்துகளைப் பரப்ப வேண்டியிருக்கிறது. பல இடங்களிலே அவர் என்ன சொல்லியிருக்கிறார்,சொன்னதையே ஏன் மாற்றிச் சொன்னார் என்பதையெல்லாம் பலர் விவாதப் பொருள் ஆக்கியுள்ளனர். இதற்கெல்லாம் திராவிடர் கழகத்திலிருந்து தோழர்கள் பதில்  எழுதியிருக்கிறார்கள். மற்றவர்களும் எழுதியிருக் கிறார்கள். ஆனால் பாபு ஜெயக்குமார் அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையிலே பல செய்திகளைச் சேகரித்து அதை நமக்காக ஒரு வெள்ளித்தட்டிலே தந்திருக்கிறார். இந்த நூலைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இது இன்னும் பல கோணங்களிலே செல்ல வேண்டியிருக்கிறது. தந்தை பெரியாரை ஒவ்வொரு கோணத்திலும் பார்த்து அதற்கே தனித்தனி நூல்களாக எழுதலாம்.அய்யா புலவர் ,இராமநாதன் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி எழுதியது எல்லாம், இன் றைய இளைஞர்கள் படிக்கக்கூடிய வகையில் ஆங்கிலத்தில் கொண்டு வர வேண்டும். திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவர் எழுதியதையும் மற்றவர்கள் எழுதியதையும் தொகுத்து பல நூல்களாக, மனித நேயப்பார்வையிலே பெரியார், களஞ்சியங்களிலே வந்தது,பிறந்த நாள் மலரில் வெளிவந்தது எல்லாவற்றையும் இணைத்து பல நூல்களாகக் கொடுத்திருக்கின்றார்கள். அவற்றை யெல்லாம் தொகுத்து ஒரே புத்தகமாகக் கொடுக்க முடியுமா என்றால், அவ்வளவு பெரிய சாதனையை எப்படிக் கொடுக்க முடியும்?.

துடிப்புடன் செயலாற்றும்

அமெரிக்க இளம் தலைமுறையினர்!

திருவள்ளுவர் 1330 திருக்குறளில் அத்தனை யையும் கொடுத்துவிட்டார். ஆனால் தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் பேசியதை யும், எழுதியதையும் கொடுப்பதற்கு நமக்கு பல திருக்குறள்கள் தேவைப்படுகின்றன.அதனைத் தொகுத்து, இளைய தலைமுறை படிக்குமாறு  ஆங்கிலத்திலே தந்தை பெரியாரைப் பற்றி நூல் எழுதி,அரும்பணி செய்துள்ள பாபு ஜெயக்குமார் அவர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். சென்னை கிறித்துவக்கல்லூரியில் படித்தவர் பல நிறுவனங்களிலே பணி புரிந்த அவர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். அவரைப் பற்றிப் பேசவும், அவரது நூலைப் பற்றிப்பேசவும் சுபாஷினி அவர்களும், பிரின்சு அவர்களும் வந்திருக் கிறார்கள். இன்றைக்கு இளைய தலைமுறை, இங்கு அமெரிக்காவிலே துடிப்புடன் பணி செய்து வருகிறது என்பதைக் காட்ட பலர் உள்ளனர். அதிலே ஒருவர் பாலா நியூசெர்சி. என்ற பாலமுருகன் கணேசன் அவர்கள். திணை அமைப்பு மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் என்று இங்கு அரும்பணி செய்து வருகின்றார்.அவரை வரவேற்புரை ஆற்ற அழைக்கிறேன் " என்று உரையாற்றினார்.

வரவேற்புரை: நியூசெர்சி பாலா

நிகழ்வுக்கு வந்திருக்கும் நூல் ஆசிரியரையும், புத்தக அறிமுகம், புத்தக ஆய்வு செய்ய இருக் கும் பேச்சாளர்களையும் மற்றும் பெரியார் பன் னாட்டு அமைப்பைச் சார்ந்தவர்களையும், நிகழ் விலே பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருக்கும் அனைவரையும் வரவேற்று நியூசெர்சியில் இருக்கும் பாலா அவர்கள் புரட்சிக் கவிஞரின் பாடலோடு தொடங்குவோம் எனப் புரட்சிக்கவிஞர் கவிதையோடு ஆரம்பித்து, இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு  இணையாக இருக்கும் தந்தை பெரியாரின் 'இனிவரும் உலகம்' கருத்துகளைக் கூறி வரவேற்புரையாற்றினார்.தந்தை பெரியாரின் கருத்துகளை உலகமயமாக்கவேண்டும் என்பது அயலகத் தமிழர்களின் தொடர்ச்சியான கோரிக்கை. திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர்ச்சியாக அதற்கு முயற்சி எடுத்து,பல பல்கலைக் கழகங்கள், பேராசிரியர்கள் இன்று அதனைச் செய்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்தப் புத்தகம் அதில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வந்திருக்கும் ஓர் அரிய முயற்சி.இந்த நிகழ்ச்சியை இங்கு நடத்தும் மருத்துவர் அய்யா டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கு நன்றி கூறவேண்டும் என்று குறிப்பிட்டு சிறப்பாக அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தனி மனித சாதனையாளர் பெரியார்

"தனி மனிதர், நான் என்ன செய்ய முடியும் என்பது தான் பலரது கேள்வி. அதற்கு முதல் எடுத்துக்காட்டு தந்தை பெரியார் அவர்கள். "என்னோடு யார் வந்தாலும், வராவிட்டாலும் நான் பேசிக்கொண்டே இருப்பேன், எழுதிக்கொண்டே இருப்பேன், நடத்திக் கொண்டே இருப்பேன்" என்றார்கள். அதே மாதிரி சுபாஷினி அவர்கள் தனியாகத் தொடங்கி, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, எவ்வளவோ எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி,இன்று உலகு எங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மூலம் என்னென்ன பணிகளைச் செய்து வருகின்றார் என்று கணக்கு கூடப் போட முடியவில்லை. அவ்வளவு பணிகளைச் செய்கின்றார். இப்போது சென்னையில் வந்து கலக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு நாள் புத்தகக்கண்காட்சி,கல்லூரி என்று தொடர்ந்து உரையாற்றி,இயங்கிக்கொண்டிருக்கிறார். இன்றைய அவரது பொது நிகழ்ச்சி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.அவரது பணியைப் பாராட்டி, அவரை அன்புடன் பேச அழைக்கிறேன்" என்று மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடக்கத்தில் குறிப்பிட்டார்கள்.

புத்தக அறிமுகம் : டாக்டர் சுபாஷினி

டாக்டர் சுபாஷினி அவர்கள் தனது உரையில் "பெரியார் பன்னாட்டு மய்யம் நடத்தும் இந்தப் புத்தக ஆய்வு விழாவில் கலந்து கொள்வதை நான் மிகப்பெருமையாகக் கருதுகிறேன்.இந்த வாய்ப்புக்கு முதலில் ஒளிவண்ணனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.ஒரு பதிப்பாளராக இந்த நூலை ஒளிவண்ணன் மிக நன்றாகப் பதிப்பு செய்துள்ளார். புத்தகச்சந்தையில் ஒரு வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தார். நல்ல அறிஞர்களை அழைத்து இந்த நூலை இன்றைக்கு பேசும்பொருளாக அண்ணன் சோம.இளங்கோவன் ஆக்கியிருக்கிறார்கள். நன்றி. அருமையான நூல் வாசிப்பு அனுபவம் கொடுத்த பாபு ஜெயக்குமார் அவர்களுக்கும் நன்றி.

பல மொழியில் பெரியார் பற்றிய நூல்கள்

தந்தை பெரியார் பற்றிய வாழ்க்கை வரலாறு நூல்கள் நிறைய இருக்கின்றன.அவருடைய கருத் துகளை விளக்கும் நூல்கள் இருக்கின்றன.அந்த வகையில் இந்த நூல் மிக முக்கியமானது. வேற்று மொழியில்,ஆங்கிலத்தில் இந்த நூல் வந்திருக்கிறது.ஜெர்மன் மொழியில் டாக்டர் ஸ்மென் எழுதிய தந்தை பெரியார் பற்றிய நூல் இருக்கிறது.ஜெர்மன் பல்கலைக்கழகத்தில்,தந்தை பெரியார் பற்றிய நூல்களை ஜெர்மன் மொழியில் இன்னும் நிறைய கொண்டு வருவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் பல மொழிகளில் தந்தை பெரியார் பற்றிய நூல்கள் வரவேண்டும் என்று நாம் விரும்பும் இந்தக் காலகட்டத்தில் இந்த நூல் ஆங்கிலத்தில் அருமையாக வந்திருக்கிறது.

ஆவணப்படுத்துதல் அவசியமானது

இந்த நூலில் 20 அத்தியாயங்கள் உள்ளன.பிறப்பிலிருந்து இறப்புவரை எனக் காலக்கிரமப்படி தந்தை பெரியாரின்  வரலாறைச் சொல்லும் நூலாக இது அமைக்கப்படவில்லை. அவருடைய தனித்துவத்தை எடுத்துக் கொண்டு, அதனை விளக் குவதாக ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கிறது. அத்தியாயங்களின் தலைப்புகளே சிறப்பாக இருக் கிறது. இந்த நூல் ஆசிரியரின் ஆங்கிலம் மிகச் சிறப்பாக உள்ளது.அந்த எழுத்து நடை மிக நன்றாக உள்ளது. ஒரு உலகத்தரத்தில்  அமைந்த நூலாக இந்த நூல் உள்ளது. இதில் பல்வேறு செய்திகள், என்னைப் பொறுத்தவரையில் புதிது புதிதாக உள்ளது. தந்தை பெரியாரின் அய்ரோப்பிய, மலே சிய பயணம் பற்றிய செய்திகள் இதில் உள்ளது. ஆவணப்படுத்துதல் மிக முக்கியம். சரியான தகவலை முறையாகப் பயன்படுத்துவதற்கு ஆவ ணப்படுத்துதல் இன்றைய தேவை. பெரியார் தன்னுடைய மலேசிய, அய்ரோப்பிய பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆச்சரியமாக இருக் கிறது. அவர் 'குடியரசு' பத்திரிகையில் எழுதிய எழுத்துகள்தான் இன்றும் நமக்கு மீண்டும் மீண்டும் வாசிக்க ஆவணங்களாக இருக்கின்றன. அவருடைய பயண டைரியே ஒரு ஆவணமாகப் பயன்படுகிறது. மக்களுடைய சிந்தனையில் ,அந்தக் காலகட்டத்தில் எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் எப்படி பெரியார்  மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதை இந்த நூலின்  அத்தியாயங்கள் விவரிக்கின்றன. இன்றைக்கும் அந்தக் கருத்து எப்படிப்பொருந்துகிறது என்பதையும் அவை குறிப்பிடுகின்றன.

தொகுப்பு: வா.நேரு

(தொடரும்)

பார்ப்பனர்களை எதிர்ப்பது எதனால்?

கடந்த 20ஆண்டுகளில் மீண்டும் தமிழ் சமூகம் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் ஈடுபடுவதை நாம் காண முடிகிறது.இந்தச் சூழல் அறிவார்ந்த சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல. மீண்டும் மீண்டும் பெரியார் கருத்துகள் வலியுறுத்தப்படவேண்டிய ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். அதனை ஒரு அகாடமி தரத்தோடு இந்த நூல் ஆசிரியர் வழங்கியிருக்கின்றார். ஆதாரத்தோடு வழங்கியிருக்கிறார். இதற்கு உதாரணமாக "பிராமணிய எதிர்ப்பு ஏன்?" என்னும் இந்த அத்தியாயத்தை எடுத்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு அந்தஅத்தியாயத்தை விளக்கினார்.நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. ஒரு நூலை வாசிப்பது என்பது நூலை வாசித்துவிட்டு, நூலகத்தில் வைப்பதற்காக அல்ல, ,மாறாக அது  சொல்லும் கருத்துகளை சமூகத்தோடு ஒப்பிட்டு,செய்ய வேண்டிய வேலைகள் பற்றி யோசிக்க வைப்பதே ஒரு நல்ல நூலாகும். இன்றைய காலகட்டத்தில் இந்த நூலிற்கு மிக அதிகமான வேலை இருக்கிறது. இந்த நூல் மிகச்சிறந்த ஆவணம். இந்த நூலின் ஆசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் எனது வாழ்த்துகள்.அனைவரும் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்என்று உரையாற்றினார்.

பெரியாரைப் பேசாத பெண்களே இல்லை

அவரது உரை முடிந்தவுடன் "தந்தை பெரியாருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது பெண்கள் தலைமை தாங்கி நடத்துவதும், பேசுவதும்தான். அந்த பெண்ணுரிமையின் எடுத்துக்காட்டாக, அவரின் கனவை நிறைவேற்றும் வகையில் சுபாஷினி செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி. இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள பெண்கள் எல்லாம் தந்தை பெரியாரின் கருத்துகளை மிக அருமையாக பேசுகிறார்கள். அது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மலேசியாவில் நிறையப்பெண்கள் பேசுகிறார்கள்.பெரியாரைப் பேசாத பெண்களே இல்லை என்றுஇன்று உருவாகிக்கொண்டு இருக்கிறது.அதைப் போல மற்ற நாடுகளிலும்பெண்கள் பெரியாரைப் பேசுகிறார்கள்.அவர்களை எல்லாம் ஒன்றிணைத்து,பெரியார் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டே இருப்பார் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்று மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டு, திராவிடர் கழக மாணவர் கழக அமைப்பாளர் தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார்  அவர்களை உரையாற்ற அழைத்தார்.

.பிரின்சுஎன்னாரெசு பெரியார்

இன்றைய காலம் இளைய தலைமுறை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பெரியாரைப் பேச வேண்டிய தேவை இருக்கும் காலம்.ஏதோ ஒரு வகையில் தந்தை பெரியாரை பேசிக்கொண்டே இருக்கும் தலைமுறைக்கு ,இன்னும் கொஞ்சம் ஆதாரத்தோடு பேசுங்கள் என்று வாய்ப்பினை வழங்கியிருக்கக்கூடிய ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்யும் வாய்ப்பினை பெரியார் பன்னாட்டு அமைப்பு வழங்கியிருக்கிறது. .நன்றி.நமது பெரும்பாலான் திரைப்படங்களில் முதலில் ஹீரோ காட்டப்படுவார். ஆனால் ஆக்சன் ஹீரோ நடிக்கும் படங்களில் முதலில் பிரச்சினையைக்  காட்டுவார்கள். கெடுதல் செய்யும் வில்லன்களைப் பற்றியெல்லாம் காட்டிவிட்டு,அவர்களை காலி செய்யும் ஆக்சன் ஹீரோவைக் காட்டுவார்கள். அப்படித் தந்தை பெரியாருக்கு முன் தமிழ் நாடு  இருந்த நிலைமை,நாம் போற்றிய விசயங்களின் உண்மைத்தன்மை, அன்றைய காலகட்டம் எவ்வளவு மோசமான காலகட்டம் என்பதையெல்லாம் சோழர் காலம்,நாயக்கர் காலம் பற்றியெல்லாம்  விரிவாகச் சொல்லிவிட்டு பின்பு வில்லனை அறிமுகப்படுத்துவது போல இராஜாஜி அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு தந்தை பெரியாரை ஒரு ஆக்சன் ஹீரோவாக அறிமுகப்படுத்தும்  புத்தகமாக இந்தப் புத்தகம் இருக்கிறது. பெரியார் யார்?, வரலாற்றில் அவரது தேவை என்னவாக இருந்தது, அதனைத் தந்தை பெரியார் எப்படி நிறைவு செய்தார், வரலாற்றைத் தாண்டியும், அவரது காலத்தைத் தாண்டியும் தந்தை பெரியார் எப்படி சிந்தித்தார்,செயல்பட்டார்  என்பதனை விளக்குவதாக இந்தப்புத்தகம் இருக்கிறது.திரைப்படத்தில் இறுதிக் காட்சி போல, இந்திய நாடாளுமன்றத்தில் ,தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது எழுப்பிய முழுக்கமான 'தந்தை பெரியார் வாழ்க' என்னும் முழக்கத்தைக் காட்டுகிறார். தந்தை பெரியார் மறைந்து 46 ஆண்டுகள் ஆனபிறகும் எதிர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதை  இந்த நூல் சொல்கிறது.

மக்கள் அரசாக இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

மொத்தம் 20 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தன்மையோடு இருக்கிறது. தந்தை பெரியார் 'குடிஅரசு' பத்திரிக்கையை எப்படித் தன்னம்பிக்கையோடு ஆரம்பித்தார் என்னும் வரலாறு இருக்கிறது. 'குடிஅரசு' என்று சொல்கின்றபோது ஜனநாயகம் என்பதையெல்லாம் தாண்டி மக்கள் அரசாக இருக்கவேண்டும். அப்படி மக்கள் அரசாக இல்லாவிட்டால் என்ன நடக்கும்? புரட்சி நடக்கும். தந்தை பெரியார் 'குடிஅரசு' பத்திரிக்கைக்குப் பின் ஆரம்பித்த பத்திரிக்கையின் பெயர் புரட்சி.புரட்சியின் விளைவாக பகுத்தறிவு ஏற்படும். பின்பு உண்மையான மக்கள் விடுதலை ஏற்படும். தந்தை பெரியார் தொடர்ந்து நடத்திய பத்திரிக்கைகள் 'பகுத்தறிவு' மற்றும் 'விடுதலை' ஆகும்.

நாம்,பெரியாரைப் பற்றித் தெரிந்தவர்களே கூட இந்தப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும். நிறைய செய்திகளை, தரவுகளோடு, தேதி உட்பட குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்து, மேலோட்டமாக எதையும் சொல்லிவிடாமல், ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் இருக்கும் காரண,காரியங்களை விளக்கி,தலைப்பின் பொருளுக்கு ஏற்ப விளக்கியிருக்கிறார்.பெரியாரைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு மிக அருமையான புத்தகம். டாக்டர் சுபாஷினி அவர்கள் குறிப்பிட்டதைப் போல  உயரிய ஆங்கில நடை, எளிமையாகப் பெரியாரை புரிந்து கொள்ள உதவும் மொழி என இந்தப்புத்தகம் இருக்கிறது எனக்குறிப்பிட்டு ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்தப் புத்தகத்தின் சிறப்புகளைக் குறிப்பிட்டு இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பாபு ஜெயக்குமார் அவர்கள் ,தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை,தனக்கு சரியெனப்பட்டதை சொல்வதற்கு எந்தவித தயக்கமும் காட்டாதவர். அதற்கான இழப்பை ஏற்றுக்கொள்ளும் துணிவு மிக்கவர் .அவருடைய இந்த முயற்சி நிச்சயம் 100 விழுக்காடு வெற்றி பெற்றிருக்கிறது." என  உரையாற்றினார்.

திராவிடர் கழக மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களின் உரையைப் பாராட்டிய மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பிரின்ஸின்  பணிகளைப் பாராட்டி, "இவர்  பெரியார் வழிக்குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை, இவர் தாத்தா காலத்தில் இருந்து தந்தை பெரியாரோடு மிக நெருக்கமாகப் பழகியவர்கள்." என்று குறிப்பிட்டு அவரை இன்னும் உயர்வடைய சிறப்பாக வாழ்த்தினார்.

பாபு. ஜெயக்குமார்

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பாபு ஜெயக்குமார் அவர்கள் தனது உரையில் "நன்றி அனைவருக்கும். சுபாசினி,பிரின்ஸ் இருவரும் புத்தகம் பற்றி சொல்லி விட்டார்கள். புத்தகத்தைப் பற்றி நான் பேசப்போவதில்லை. நான் ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினேன் என்று பேச நினைக்கிறேன்.. அய்யா ஆசிரியர் இதனை எழுதச்சொன்னார். ஒப்புக் கொண்டேன் என்றாலும் இந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் தேவை என்று நானும் உணர்ந்தேன். நான் 30,35 வருடமாக சென்னையில் ஆங்கில பத்திரிகைத்துறையில் இருக்கிறேன்.இங்கிலீசு ஜார்னலிசம் என்பதே ஒரு வித்தியாசமான உலகம்.இது சரி,இது தப்பு என்று ஏற்கெனவே ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இடஒதுக்கீடு, பெரியார், தி.மு.. இவைபற்றியெல்லாம் ஏற்கெனவே ஒரு கருத்தை வைத்துக்கொண்டு அதனையே எழுதுகிறார்கள். இங்கிலீசு ஜார்னலிசத்தில் இதற்கு எதிராக எழுதுவதற்கு யாரும் வருவதில்லை .தமிழ் பேப்பரில் இப்படித்தான் எழுதுவார்கள், ஆங்கிலப் பத்திரிக்கையில் இப்படித்தான் எழுதுவார்கள் என்னும் கருத்து இருக்கிறது. இதற்கு எதிராகப்போனதுதான் என்னுடைய பணி. நிறைய இளைஞர்களுக்கு பெரியார் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

மாயையை உடைக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் புதிதாக தமிழ் தேசியம் என்ற ஒருகருத்து வந்திருக்கிறது. இதற்கு முன்னால் திராவிட இயக்கம்தான் தமிழ் தேசியத்தையே வளர்த்துவிட்டது. இன்றைக்கு தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் திராவிட இயக்கம் தவறானது என்று சொல்ல முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு, தமிழ் தேசியத்தைப் பற்றி முதலில் பேசியது பெரியார்தான் என்பது  தெரியாது. பெரியார் தமிழரே இல்லை என்று, அவர்கள் ஒரு மொழியில் பேசுகிறார்கள்.அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு இந்த நூல் உதவும் என்று கருதினேன். அவர்கள் சொன்னதுபோல, காலவரிசைப்படி பெரியாரை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றைய வாசிப்பு பற்றியும் எனக்குத் தெரியும். பெரிய புத்தகத்தைப் படிக்க மாட்டார்கள். ஆனால் தனித்தனியாக, தலைப்புகள் என்றால் படிப்பார்கள். உதாரணமாக நாளை பெண்கள் தினம். நீங்கள் பெரியாரின் பெண்ணுரிமை குறித்து பேசவேண்டுமென்றால், பெரியாரின் பெண்ணியம் என்னும் ஒரு தலைப்பை மட்டும் இந்தப் புத்தகத்தில் படித்தால் போதும். சமூக நீதி,இட ஒதுக்கீடு பெரியாரின் கருத்து என்னவென்று நீங்கள் பேசவேண்டும், எழுத வேண்டும் என்றால் இந்தப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் படித்தால் போதும். அதனால்தான், இந்த நூலில் இந்த 'ஸ்டைலை' நான் எடுத்துக்கொண்டேன்.மொத்தத்தில் தெரியப்படுத்துதல்தான் நோக்கம். ஆங்கில ஊடகங்களில், ஆங்கிலம் பேசும் மக்களிடம் இதனைக் கொண்டு செல்லவேண்டும் என நினைத்தேன். ஏற்கெனவே இருக்கும் மாயையை உடைக்கவேண்டும் என நினைத்தேன்.அவர்கள் ஏற்படுத்திய மாயையிலிருந்து எதிர்கால சந்ததியாவது விடுபடவேண்டும் என் நினைத்தேன்.பெரியாரை எடுத்துக்கொண்டால், எல்லாவற்றிலும் அவர் 'tலீமீ னீணீஸீ ணீலீமீணீபீ ஷீயீ லீவீs tவீனீமீ'. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அறிவியல் எப்படி இருக்கிறது என்றால் மிஷிஸிளில் ராக்கெட் தயாரித்து அதனை திருப்பதிக்கு அனுப்புகிறார்கள். பெரியார் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

நூற்றாண்டைக் கடந்த அறிவியல் சிந்தனை

அவர் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். முறையான படிப்பு அவருக்கு இல்லை என்றாலும் நூற்றாண்டைக் கடந்து அறிவியலைப் பற்றி சிந்தித்திருக்கிறார். அதனைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆங்கிலப்புத்தகமாக இருப்பதால் இது இண்டர் நேசனல் கம்யூனிட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தேன். எழுதினேன். இந்த நூலை இன்று இரண்டு பேர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.ஒருவர் டாக்டர் சுபாஷினி. தமிழுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்துகொண்டிருப்பவர். இன்னொருவர் பிரின்ஸ். இந்தப் புத்தகத்திற்காக தன்னுடைய பங்களிப்பாக நிறைய செய்திருக்கிறார். நன்றாக அச்சாகி வந்திருக்கிறது என்று சொன்னார்கள்.அதில் கூட பிரின்ஸின் பங்கு இருக்கிறது.அதைப்போல பதிப்பாளர் ஒளிவண்ணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சி. பெரியார் பன்னாட்டு மய்யத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இதனை கொண்டு செல்ல முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றி" என்று குறிப்பிட்டார்.

கோ.ஒளிவண்ணன்

பாபு ஜெயக்குமார் அவர்களோடு தனக்கு பல்லாண்டுகளாக இருக்கும் தொடர்பு, முல்லைப் பெரியார் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் தனித்துவமாக வந்த அவரது கட்டுரை, அதைப் பாராட்டியது, மகிழ்ச்சி அடையாமல்  நீங்கள் லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் எழுதுவீர்களா என்று அவர் கேட்டது, எழுதுவேன், யாராவது தப்பாக எழுதினால் நான் எழுதுவேன் என்று சொன்னது,”இதுதான் நம்மிடம் இருக்கும் குறை,உங்களை மாதிரி 100 பேர் பாராட்டி விட்டார்கள், ஆனால் 10 பேர் இந்தக் கட்டுரை எழுதியதற்காக என்னைத் திட்டி,இந்தியன் எக்ஸ்பிரஸ் லெட்டர் டூ தி எடிட்டரில் எழுதியிருக்கிறார்கள், இப்படி என்னை நேரடியாகப் பாராட்டி பிரயோசனம் இல்லை, உங்களைப் போன்றவரகள் லெட்டர்ஸ் டூ தி எடிட்டருக்கு எழுத வேண்டும், அப்போதுதான் எங்களைப் போன்றவர்கள் அங்கு நிலைக்க முடியும்என்று சொன்னார் என்று குறிப்பிட்ட கோ.ஒளிவண்ணன் அப்போதிருந்து நல்ல கட்டுரைகளுக்கு, விடுதலை என்றாலும் கூட பாராட்டி எழுதுவதை வழக்கமாக்க் கொண்டேன் எனக்குறிப்பிட்டு பல நினைவுகளை ,இந்தப் புத்தகம் வெளிவருவதில் பிரின்ஸ் அவர்களின் பங்களிப்பிற்கும், பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் பங்களிப்பிற்கும் நன்றி கூறி ,தமிழ் தெரியாத, உலகம் முழுவதும் இருக்கும் நெஞ்சங்களுக்கு  இந்தப் புத்தகத்தை கொண்டு சேர்ப்போம், குறுகிய காலத்தில் மிக நேர்த்தியாக இந்தப் புத்தக அறிமுகக் கூட்டத்தை நடத்திய பெரியார் பன்னாட்டு மய்ய அமைப்பிற்கும் அதன் தலைவர் அண்ணன் சோம.இளங்கோவன் அவ்ரகளுக்கும் நன்றி எனக்கூறி உற்சாகமாக பதிப்பு அனுபவங்களைப்  பகிர்ந்துகொண்டார்.

பெரியார் உலக வலம் வருவார்

நன்றி ஒளிவண்ணன் எனக்குறிப்பிட்ட மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தங்களின் இரு கரங்களாகப் பணியாற்றும் தங்கள் இணையர் நளினி அவர்களுக்கும், தங்கள் நிறுவனத்திற்கும் நன்றி எனக்குறிப்பிட்டார்.இந்த நிகழ்வைப் பற்றிய கருத்துகளை மதுரை வா.நேரு,நியூயார்க் பாலா சாமி நாதன்,சிகாகோ சோம.வேலாயுதம்,மும்பை இரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.அய்யா சோம.வேலாயுதம் அவர்கள் தாங்கள் படிப்பது மட்டுமல்லாது,இந்தப் புத்தகத்தை பள்ளி,கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு  அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிறைவாக ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மும்பையில் வழங்கப்பட்ட  நரேந்திர தபோல்கர் விருதுபற்றியும், அந்த அமைப்பாளர்கள் தன்னோடு ஆசிரியருக்கு விருது வழங்குவது பற்றி பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியையும், விருதில் அளிக்கப்பட்ட ரூ 1 இலட்சம் ரூபாயை ஆசிரியர் அவர்கள் திருப்பி அந்த அமைப்புக்கே அளித்ததையும், அமெரிக்காவில் 2019இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குவாழ்நாள் சாதனையாளர் - மனித நேய விருதுவழங்கப்பட்டதையும் குறிப்பிட்ட மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் ,அமெரிக்காவில் நூறு இளம் குழந்தைகள் பெரியார் பற்றி,தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பேசியதை பாபு ஜெயக்குமார் அவ்ரகளிடம் பகிர்ந்து கொண்டார். கலந்து கொண்ட அனைவருக்கும்,ஒத்துழைப்பு அளித்த நியூசெர்சி பாலா,மற்றும் தங்களை வெளிக்காட்டாமல் ஒத்துழைப்பு அளிக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பினைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களது உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றி. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முனைப்பால் இன்று பல பல்கலைக்கழகங்களில் தந்தை பெரியார் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன. அவையெல்லாம் விரைவில் வெளிவரும்.அப்போது இன்னும் வீச்சாக பெரியார் உலக வலம் வருவார் .அனைவருக்கும் நன்றி,நன்றி என்று கூறி நிகழ்வை மருத்துவர் சோம்.இளங்கோவன்  நிறைவு செய்து வைத்தார்.

Comments