அரிமா நோக்கு - லவுகீகப் பார்ப்பனர்

சு.அறிவுக்கரசு

வைதீகப் பார்ப்பனரை நம்பினாலும் லவுகீகப் பர்ப்பனரை நம்பக்கூடாது என்றார் பெரியார். அறுபது ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒருத்தர் கேட்டார், லவுகீகப் பார்ப்பனர் என்றால் யார் என்று! நான் சொன்னேன், வைதீகப் பார்ப்பனர் சங்கராச்சாரி, லவுகீகப் பார்ப்பனர் இராஜகோபாலாச்சாரி என்று. எந்த விஷயத்திலும் சங்கராச்சாரி எப்படி நடந்து கொள்வார் என ஊகிக்க முடியும். இராஜகோபாலாச்சாரி எப்படி என்பதை யாரும் துல்லியமாகக் கூற முடியாது. பெரியார் வீட்டு நெய்தோசையைத் தின்று, அதன் பெருமையைப் பேசினார், எழுதினார். சமபந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவார். வைசிய மாப்பிள்ளைக்கு தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பார். ஜாதித்தொழில் செய்ய வேண்டும், பாதி நேரம் படித்தால் போதும் என்று குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தார். இப்படி தாறுமாறாகப் பேசி செயல்படுவது லவுகீகப் பார்ப்பனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பும் கூட இப்படிச் செயல்பட்டவர்கள் தான் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்.

1892இல் மெட்ராஸ் ஹிந்து சமூக சீர்திருத்த சங்கம் என ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. கீழ்க்கண்டவை அதன் குறிக்கோள்கள்: பெண் கல்வி, திருமண சீர்திருத்தம், குடும்ப வாழ்வுச் சீரமைப்பு, படிப்படியாக ஜாதிகளை இணைத்தல் ஆகியவை. உறுப்பினர்களாக இருக்க வேண்டுமானால் ஜாதி பார்க்கக்கூடாது, 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்குத் திருமணம் செய்யக்கூடாது, வயதுக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும், பொதுவாக அனைவருடனும் அமர்ந்து உண்ண வேண்டும், மறுமணம் செய்தோர், கடல் கடந்து சென்று திரும்பியோர் ஆகியோருடன் ஒன்றாக உண்ண வேண்டும் (பார்ப்பனர் சமையல்). இந்த விதிகளைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் அனுதாபிகளாக இருக்கலாமாம். வைப்பாட்டி வைத்து இருத்தல், வழிதவறிய பெண்கள் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருத்தல் பரவாயில்லையாம். இப்படிப்பட்ட தாராளங்கள் இருந்தும் சங்கம் நீடிக்கவில்லை. 36 உறுப்பினர்களும், 25 அனுதாபிகளும் மட்டுமே சேர்ந்தனர். இரண்டு ஆண்டுகளில் 10 கூட்டங்கள் நடந்தன. 11 உறுப்பினர்களும் 5 அனுதாபிகளும் மட்டுமே கலந்துகொண்டு பார்ப்பனர் தயாரித்ததை உண்டனர். சீர்திருத்த சங்கம் அவ்வளவுதான். கடை விரித்தும் கொள்வாரில்லை. கடையைக் கட்டிவிட்டார்கள்.

இதே மாதிரியான சங்கம்தான் காஸ்மாபாலிடன் கிளப். இதிலும் லவுகீகப் பார்ப்பனர்கள் நுழைந்து கொண்டனர். 1898இல் இல் ஒரு நிகழ்ச்சி. சென்னையில் சர்.சங்கரன் நாயர் புகழ்பெற்ற வழக்குரைஞர். அவரைப் பாராட்டி, விருந்தளிக்க அவருடைய நண்பர்கள் திட்டமிட்டனர். காஸ்மாபாலிடன் கிளப்பில் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ள அனுமதி கேட்டனர். அதன் உறுப்பினராக இருந்த அட்வகேட் ஜெனரல் வேம்பத்தூர் பாஷ்யம் அய்யங்கார் எதிர்ப்பு தெரிவித்தார். அரசுப் பதவிகளில் இருப்போர் உறுப்பினராகவுள்ள மன்றத்தில், காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவருக்குப் பாராட்டு விழா நடத்தக் கூடாது என்றார். எதிர்ப்பை மீறி விழாவுக்கு அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளப்பின் தலைவர் நீதிபதி சுப்பிரமணிய அய்யர் தம் பதவியை ராஜினாமா செய்தார்.

1887இல் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு இதே காஸ்மாபாலிடன் கிளப் சார்பாகப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இதே நீதிபதி சுப்பிரமணிய அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பாராட்டி விருந்து நடத்தப்பட்டதும் இதே கிளப்பில் தான். தற்காலிக அட்வகேட் ஜெனரலாக பாஷ்யம் அய்யங்கார் நியமிக்கப்பட்டதற்குப் பாராட்டு விழாவும் இங்கே தான் நடந்தது. எனினும் ஏன் இப்போது மட்டும் எதிர்ப்பு, ராஜினாமா?

சங்கரன் நாயர் பார்ப்பனர் அல்லவே!

 பார்ப்பனர்களை எதிர்த்தவர் ஆயிற்றே!

 உங்கள் பாராட்டு விழாவே வேண்டாம் என்று சங்கரன் நாயர் மறுதலித்த பிறகே சுப்பிரமணிய அய்யர் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றார்.

ஒய்..எம்.சி.. எனும் கிறிஸ்துவ அமைப்புக்கு போட்டியாக ஒய்.எம். ஹி.. என்ற அமைப்பை ஹிந்துக்கள் உண்டாக்கினர். கறி தின்னும் பார்ப்பனர்கள் ஒய்.எம்.சி.. வந்து ஆட்டுக்கறித் துண்டும், கட்லெட்டும் சாப்பிட்டுவிட்டு, அதன் செரிமானத்திற்காக பிராந்தி குடிக்கும் பழக்கம் வைத்திருந்தனர். ஆனால், ஒய்.எம்.ஹி.. வில் டீ, காஃபி குடிப்பதற்குப் பார்ப்பனர்களுக்குத் தனியிடம், பார்ப்பனரல்லாதாருக்கு தனியிடம் வைத்திருந்தனர். அதைவிடக் கொடுமையாக, “ஜாதி ஹிந்துக்களுக்கு மட்டுமே சிற்றுண்டி விற்கப்படும்என்ற பலகை வைக்கப்பட்டது. (“மைனாரிட்டிகள் - சென்னை ராஜ்யத்தில்என்ற தலைப்பிலான நூல் - சரஸ்வதி எழுதியது. பக். 97).

இந்த ஜாதித் திமிரை எதிர்த்து பாரிஸ்டர் லோபோ, பாரிஸ்டர் கரியப்பா ஆகிய இருவரும் மதுரை ரிக்ரியேஷன் கிளப்பை விட்டு 1907இல் விலகி விட்டனர். மதுரை காஸ்மாபாவிடன் கிளப் எனும் புதிய மன்றத்தை உருவாக்கினர். அங்கே இன, மத, ஜாதிப் பாகுபாடுகள் எதுவும் கிடையாது.

பாரத மாதாவின் புத்திரர்கள் என்று கூறி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885இல் உருவாக்கப்பட்டது. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்னையிலிருந்து போனவர்களில் பார்ப்பனர்களே மிகுதி. அய்ந்து நாள்கள் கப்பலில் பயணம். பார்ப்பனச் சமையல்காரரின் சமையல். பார்ப்பனர்களுக்கு அவரவர் அறைகளில் பரிமாறப்பட்டது. பார்ப்பனர் தின்பதை பிறர் பார்த்தால்திருஷ்டி தோஷம்ஏற்படுமாம். ஆகவே இந்த ஏற்பாடு. இதன்னியில், பார்ப்பனர் அடித்த கூத்துக்களைஇன்டியன் சோஷியல் ரிஃபார்மர்ஏட்டில் இணை ஆசிரியர் கே.சுப்பாராவ் எழுதியுள்ளவாறு கீழே. (REVIVED MEMORIES - Page 140).

சாஸ்திரங்களுக்கு விளக்கம் கூறும் ரகுநாத ராவ், அய்ந்து நாட்களிலும் ஒரு பருக்கைக் கூடச் சமைத்த உணவை வாயில் போடவில்லை. காஃபி டிகாக்ஷனை வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தார். இரண்டு டப்பாக்களில் நிலக்கடலை, உலர் பழங்கள் இருந்தன. பால் மட்டும் வாங்கிக்கொள்வார். ஸ்நானம் முடிந்து, சுலோகம் முனுமுனுத்து அவற்றை மட்டுமே உண்பார். பார்ப்பனச் சமையல்காரர் சமைத்ததைக்கூட உண்ணமாட்டார்

இன்னொரு வைணவப் பார்ப்பனர் அய்ந்து நாளும் தாம் எடுத்து வந்திருந்த புளியோதரையை மட்டுமே தின்று வந்தார்.

கடலில் பயணம் செய்வது சாஸ்திரவிரோதம். அதை செய்பவர்கள் தீட்டு, திருஷ்டி தோஷம் என்று பார்த்துப் பட்டினி கிடப்பது நல்ல நகைச்சுவை தான். விசிஷ்டாத் வைதிகனும், மாத்வர்களும் வைகுண்டத்தில் சிறப்புப் பிரிவில் அடைப்பட்டிருப்பார்களோ? போய் பார்த்துச் சொல்வார் எவரும் இல்லையே!

பம்பாய் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து போன வைணவப் பார்ப்பனர்கள் கொடுத்த தொல்லை சொல்லி மாளாதாம். தத்தம் சமையல்காரனைக் கொண்டு, தனித்தனி அடுப்பு மூட்டித் தனித்தனியே சமைத்துக் கொள்ள இடம் கேட்டு... மைதானத்தில் இடமே போதவில்லையாம்!

1917இல் மாநாட்டில் சைவம், அசைவம் என இரண்டு சமையல் மட்டுமே எனக் கூறப்பட்டது. என்றாலும் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது மதராஸிகளால் நடத்தப்படும் ஓட்டல்கள் பட்டியல் கேட்டார் சி.எஸ்.நரசிம்மாச்சாரி. திரு. வி.. அவர்கள் எழுதியுள்ளார், அவரது நண்பர்கள் பண்டித அசலாம்பிகை, வெங்கந்தூர் கணபதி சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி ஆகியோர் இவர் முன்பு சாப்பிட மாட்டார்களாம். திருஷ்டி தோஷம்! இத்தனைக்கும் திரு. வி.. மரக்கறி உண்ணும் முதலியார் ஜாதி! யாராக இருந்தால் என்ன? பார்ப்பனர் கணக்குப்படி சூத்திரன் தானே!

இத்தகைய காங்கிரஸின் சார்பில் தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் 15 பேர்களில் 13 பேர் பார்ப்பனர்கள். இவர்களின் யோக்யதைகளைத்தான் பார்த்தோம். இவர்கள்தான் (அன்றைய) 40 கோடி மக்களுக்கு உரிமையும் விடுதலையும் கேட்டவர்களாம்!

ஆதலால்தான் நீதிக்கட்சியின்திராவிடன்ஏடு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்று எழுதாமல், அகில இந்திய அக்ரஹாரம் கமிட்டி என்றே எழுதியது. இதனால்தான் காங்கிரஸ் தலைவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுதென் இந்தியப் பார்ப்பனர் வெள்ளையரை விட அகம்பாவம் பிடித்தவர்கள்என்றார். சக மனிதனை, சக இந்தியனை, ஜாதியின் பெயரால் இழிவு செய்பவன் எப்படி நேர்மையாளனாக இருக்க முடியும்?

இந்தக் கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லையே! இன்றளவும் அந்தக் கேள்வி எழுந்து கொண்டேதான் உள்ளது! “வெறுக்கக் கற்றவனே வெற்றி பெறுவான்என்றார் பெரியார்.

Comments