எங்களுக்கு உயிர் முக்கியமல்ல - தமிழ்நாடு காப்பாற்றப்படவேண்டும்!

வாக்கு இயந்திரத்தில் உதயசூரியன் சின்னத்தில் விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும் - நாட்டில் விளக்கு எரியும்!

ஒரு பெரிய இருட்டுப் போகும் - விடியல் கிடைக்கும்மறவாதீர் உதயசூரியன் - வெற்றி நிச்சயம்!

எடப்பாடி தொகுதி தேர்தல் பரப்புரையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரை

எடப்பாடி, மார்ச் 29  வாக்குப் பதிவு இயந்திரத்தில் உதயசூரியன் சின்னத்தை நிதானமாகப் பார்த்து, கை விரலை பொத்தானின்மீது அழுத்துங்கள் - உடனே கைவிரலை எடுத்துவிடாதீர்கள் - அழுத்திக் கொண்டே இருங்கள்! விளக்கு எரியும் - வெளிச்சம் தெரியும்! அங்கே விளக்கெரிந்தால் - அங்கே மட்டும் விளக்கு எரியாது - உங்கள் வீட்டில் விளக்கு எரியும் - நாட்டில் விளக்கு எரியும் - ஒரு பெரிய இருட்டுப் போகும்  - விடியல் கிடைக்கும்! மறவாதீர், உதயசூரியன் - வெற்றி நிச்சயம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

எடப்பாடி தொகுதியில் தேர்தல் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து தமிழகமெங்கும் தேர்தல் பரப்புரையில்  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த 25.3.2021 அன்று மாலை எடப்பாடி தொகுதியில்       வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக, நமது ஒப்பற்ற தளபதி ஸ்டாலின் அவர்களால் நிறுத்தப்பட்டுள்ள அருமை சகோதரர் சம்பத்குமார் அவர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பரப்புரை நிகழ்ச்சிக்காக இங்கே வருகை தந்து, நீண்ட இடைவெளிக்குப் பின் எடப்பாடி பெருமக்களை சந்திக்கக் கூடிய அரிய வாய்ப்பினை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், திராவிடர் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். அதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய இயக்கத்தில், பெரியார் அறக்கட்ட ளையின் தலைவர் 99 வயதை நெருங்கிக் கொண்டி ருக்கின்ற அய்யா பொத்தனூர் சண்முகம் இங்கே அமர்ந்திருக்கிறார். இளைஞர்களும் இருக்கிறார்கள்.

இந்தத் தொகுதிக்கு ஒரு அற்புதமான இளைஞரை,  ஆற்றல்மிகுந்த ஒரு இளைஞரான சம்பத்குமார் அவர்களை, சிறப்பாக இந்தியா முழுவதும் தெரியக்கூடிய ஒரு வேட்பாளராக - வெற்றி வேட்பாளராக ஆகக் கூடியவரை தளபதி அவர்கள் அடையாளம் கண்டிருக் கிறார்கள். ஆகவே, அவருடைய வெற்றியை உறுதி செய்யக்கூடிய அற்புதமான தளகர்த்தரான மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அன்பு சகோதரர் செல்வகணபதி அவர்களே, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கணேசன் அவர்களே, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் நாகராஜன் அவர்களே, தி.மு.. நகர செயலாளர் பாஷா அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் பொறுப்பாளர் மகமது ரயீஷ் அவர்களே, ஆதித்தமிழர் பேரவையின் ராதாகிருஷ்ணன் அவர்களே, திராவிடர் தமிழர் கட்சியின் செல்வமுருகன் அவர்களே, திராவிடர் கழகத்தின் அனைத்து முக்கிய பொறுப்பாளர்களே, நண்பர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு..ஸ்டாலின் அவர்கள்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்!

நான் தமிழ்நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஒவ்வொரு இடத்திலும் மக்களுடைய உறுதி, மக்களுடைய வரவேற்பு - மாற்றம் வேண்டும், வேண்டும் என்ற தாகத்தோடு மக்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒரு சூழல் - இவை அத்தனையையும் பார்க்கும்பொழுது ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறோம் - மே 2 ஆம் தேதிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு - கோட்டைக்குப் போகப் போகிறவர் நம்முடைய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள்தான் - அவர்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

அருமையான ஒரு சொற்றொடரை சகோதரர் செல்வகணபதி அவர்கள் பயன்படுத்தினார். கொத்தடி மைகளின் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகிறோம் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

எங்களுக்கு உயிர் முக்கியமல்லதமிழ்நாடு காப்பாற்றப்படவேண்டும்

என்னைப் பார்த்து இங்கே நண்பர்களும், ஈரோட்டில் .வெ.கி..இளங்கோவன் அவர்களும் மிகவும் வருத்தப்பட்டு. ‘‘88 வயதிலும் இப்படி சுற்றுப்பயணம் செய்கிறீர்களே'' என்று கேட்டார்கள்.

எங்களுக்கு உயிர் முக்கியமல்ல - தமிழ்நாடு காப்பாற்றப்படவேண்டும். இந்தத் தேர்தல் ஒரு விசித்திரமான தேர்தல். அது என்னவென்றால், ஒன்று, ஓர் அச்சத்தோடு நாம் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கே பார்த்தீர்களேயானால், மேடையில் அமர்ந்திருப்போரும், எதிரே அமர்ந்திருக் கின்றவர்களும் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் இருக்கிறோம். யாரும் முகக்கவசத்தை கைகளில் வைத்துக்கொண்டிருக்காதீர்கள் - முகத்தில் அணிந்து கொள்ளுங்கள்.

அறிவியல் கண்டுபிடித்த தடுப்பூசியின்மூலம்தான் கரோனா தொற்று தடுக்கப்படும்!

கண்ணுக்குத் தெரியாத கிருமி மறுபடியும் உள்ளே வருகிறது. மோடி, எடப்பாடியார் எல்லாம் சேர்ந்து முன்பு என்ன சொன்னார்கள், ‘‘கை தட்டுங்கள் கரோனா போய்விடும்'' என்றார், ‘‘விளக்கேற்றுங்கள் போய்விடும்'' என்றார், ‘‘மேலே இருந்து பூ போட்டால் போய்விடும்'' என்றார். ஆனால், அதுபோன்று செய்தால் எல்லாம் கரோனாத் தொற்று போகாது; அறிவியல் கண்டுபிடித்த தடுப்பூசியின்மூலம்தான் தடுக்கப்படும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு எல்லோரும் தடுப்பூசி போடக்கூடிய கட்டத்தில் இருக்கிறோம்.

அதேபோன்றுதான், கண்ணுக்குத் தெரியாத கிருமி- விஷக்கிருமியான - மதவெறி, ஜாதி வெறி, பண வெறி, பதவி வெறி போன்ற கிருமிகள் எல்லாம் சேர்ந்து, வடக்கே இருந்து கண்ணுக்குத் தெரியாத கிருமியாக - .தி.மு.. என்ற உடலில் புகுந்து, தமிழ்நாட்டில் காலூன்றலாம் என்று நினைக்கின்றன - அதற்கு ஒரே தடுப்பூசிதான் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி வெற்றி என்பதாகும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்பதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்; அதனால்தால், எல்லோரும் முகக்கவசம் அணியவேண்டும். அந்த முகக்கவசம்தான், இந்தத் தொகுதியின் வேட்பாளர் சம்பத்குமார் அவர்களுடைய வெற்றியாகும்.

புதிய சரித்திரத்தை, புதிய திருப்பத்தை,

புதிய மாற்றத்தை உருவாக்க இருக்கிறது

ஆர்.எஸ்.எஸ்., பா... போன்ற கிருமிகளையும், இவற்றின் கொத்தடிமையாக இருக்கக்கூடிய .தி.மு.. வையும் தடுப்பதற்காக முகக்கவசம் முக்கியம் - எடப்பாடி தொகுதி என்றால், சம்பத்குமார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது. இந்தியாவே உற்றுப்பார்க்கக் கூடிய நிலையில் இருக்கிறது. இங்கே இருக்கின்ற வாக்காளர்களாகிய உங்களுடைய வாக் களிப்பு என்பது புதிய சரித்திரத்தை, புதிய திருப்பத்தை, புதிய மாற்றத்தை உருவாக்க இருக்கிறது.

முகக்கவசம் அணிந்தால் மட்டும் போதாது - தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்; தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், முகக்கவசம் அணிய வேண்டும் - சோப்புப் போட்டு அடிக்கடி கைகழுவ வேண்டும் என்பது பாதுகாப்பானது. நாம் கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுகிறோம் அல்லவா - அந்த பாதுகாப்பான சோப்புதான் கூட்டணி. அதையும் மீறி சில நேரங்களில் கிருமிகள் கைகளில் தொற்றினால், கிருமி நாசினியைக் கொண்டு அந்தக் கிருமிகளைக் கொன்று விடுகிறோம். அந்த கிருமி நாசினிதான் திராவிடர் கழகம்.

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டீர்களேயானால், அதுவே போதும். அதை மறந்தால், நமக்கு ஆபத்தாகி விடும்.

கடந்த நான்காண்டுகளில் மோசத்திலும் மிகவும் மோசம்!

இரண்டாவது, இதற்கு முன்பு எத்தனையோ தேர் தல்கள் நடைபெற்று இருக்கிறது; ஆனால், இப்பொழுது நடைபெறும் தேர்தலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், முன்பு நடைபெற்ற தேர்தல்கள் எல்லாம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் வாக்காளர்களிடம் சென்று, வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், இந்தத் தேர்தல்தான், வாக்காளர்கள், வேட் பாளர்களைத் தேடக்கூடிய அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால், அவ்வளவுக் கொடுங்கோன்மை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் மோசத்திலும் மிகவும் மோசம்.

‘‘ஸ்டாலின்தான் வராருவிடியல் தரப் போறாரு!''

தமிழ்நாட்டில், சின்னப் பிள்ளைகள் முதற்கொண்டு அதிகமாக உச்சரிக்கும் ஒரு சொற்றொடர் என்ன வென்றால்,

‘‘ஸ்டாலின்தான் வராரு,

விடியல் தரப் போறாரு'' என்பதுதான்.

கொத்தடிமைகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட் டெடுக்கவேண்டும். அதுதான் இந்தத் தேர்தல் முடிவில் இருக்கக்கூடிய மிக முக்கிய ஒரு கட்டமாகும்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டை மட்டும் தளபதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, வெற்றி பெறக்கூடிய கூட்டணி மீட்டெடுக்கப்  போவ தில்லை. அதைவிட முக்கியமான இன்னொரு வேலை யும் அதில் இணைந்திருக்கிறது.

அது என்னவென்றால், இந்தக் கொத்தடிமை .தி.மு.. இருக்கிறதே  - டில்லிக்கு அடமானமாக வைத்திருக்கிறார்கள், அண்ணா பெயரில் உள்ள கட்சியை! அதையும் மீட்டெடுக்கக் கூடிய பொறுப் பைத்தான் தளபதி ஸ்டாலின் அவர்கள்,  .தி.மு..வுக்குத் தோல்வியைக் கொடுத்து, நமக்கு வெற்றியைக் கொடுப்பதன்மூலமாக உங்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கிறார்.

சில நேரங்களில் அடமானம் வைக்கப்பட்ட பொருளை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு ஆகிவிடும். அதுபோன்று ஆகாமல் செய்யப் போவதும் இந்தக் கூட்டணிதான். காரணம் என்னவென்றால், அண்ணா பெயரில் கட்சி வைத்திருக்கிறார்கள் அதனால்தான்.

தி.மு.. தேர்தல் அறிக்கை 2021 - இந்தியாவினுடைய கதாநாயகன்!

இதோ என் கைகளில் இருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை - இதுதான் இந்தியாவினுடைய கதாநாயகன் இப்பொழுது.

எல்லா மாநிலங்களும் இதைப் பார்த்து அர சியல் பாடம் கற்றுக்கொள்ளக்கூடிய ஆவண மாகும்.

தி.மு..வின் தேர்தல் அறிக்கைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. சொன்னதைச் செய்வார்கள் - செய்வதையே சொல்வார்கள் என்பதை மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இரண்டு கூட்டணி இருக்கிறது. ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில், தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி.

கொள்கைக் கூட்டணிலட்சியக் கூட்டணி!

இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணி - இந்தக் கூட்டணி லட்சியக் கூட்டணி. இந்தக் கூட்டணி தேர் தலுக்காக உருவான கூட்டணி அல்ல; இது கொள்கைக் காக - போராட்டக் களங்கள் கண்டு, லட்சியத்திற்காக உருவான கூட்டணி.

எப்பொழுது இந்தக் கூட்டணி உருவானது தெரியுமா? கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. தேர்தல் களங்களுக்காக அல்ல - போராட்டக் களங்களில் இருந்து உருவானது. கொள்கை ரீதியாக உருவானது.

கொள்கை ரீதியானது என்பதற்கு என்ன அடை யாளம் என்றால், இங்கே அனைத்துக் கட்சிக் கூட்டணித் தலைவர்களும் இருக்கிறார்கள் - தொலைக்காட்சிகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - கூட்டணியின் தலைவர் தலைமையில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடுபற்றி அனைத்துக் கட்சியினரோடும் கலந்தாலோசித்து, இவ்வளவு இடங்கள்தான் கொடுக்க முடியும் என்று சொன்னார்.

ஏனென்றால், எதிர்த்துப் போராடுவதற்குப் பலமான ஆயுதம் வேண்டும் இப்பொழுது. அந்த ஆயுதம் கூர்மையான ஆயுதமாகவும், பலமான ஆயுதமாகவும், விலை போகாத ஆயுதமாகவும் இருக்கவேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானதாகும்.

எங்களுக்கு இடங்கள் முக்கியமல்ல - லட்சியங்கள்தான் முக்கியம்!

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொகுதிப் பங்கீடு முடிந்து, அறிவாலயத்திலிருந்து வெளியே வரும்பொழுது தொலைக்காட்சி நண்பர்கள் அவர்களிடம் கேட்டார்கள், ‘‘நீங்கள் அத்தனை இடம் கேட்டீர்கள்; இத்தனை இடம்தான் கொடுத்திருக்கிறார்களே'' என்று.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியாக இருந் தாலும், .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ அவர் களானாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் அவர்களானாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் அவர்களானாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் அவர்களானாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பெருமைக்குரிய அருமை பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களானாலும், மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஜவாஹிருல்லா அவர்களானாலும், இன்னும் மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களானாலும் ஒரே வார்த்தைதான் சொன்னார்கள்.

அது என்னவென்றால், ஆமாம், நிறைய இடங்கள் கேட்டோம். ஆனால், எங்களுக்கு இடங்கள் முக்கிய மல்ல - லட்சியங்கள்தான் முக்கியம். அந்த அடிப் படையில், இடங்களுக்காக நாங்கள் இல்லை - பா...வை இந்தத் தமிழ் மண்ணிலே காலூன்ற விடமாட்டோம். இது பெரியார் மண் - இது சமூகநீதி மண் - இது திராவிட மண் - இந்த மண்ணிலே வேறு வகையான கிருமிகள் காலூன்றக் கூடாது என்பதை எடுத்துச் சொன்னார்கள்.

இந்தக் கூட்டணியில் இப்படி!

கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள் அவர்கள்!

ஆனால், அந்தக் கூட்டணியில், .பி.எஸ். - .பி.எஸ். எல்லா எஸ்சுகளும் என்ன சொல்கிறார்கள் என்றால், கூச்சமேயில்லாமல் - கொள்கைக்கும், எங்கள் கூட் டணிக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள். உலகத்திலேயே இப்படி சொன்னவர்கள் இவர்கள் மட்டும்தான் இருக்க முடியும்.

வெளிப்படையாக, வெட்கமில்லாமல் சொல்கி றார்கள்; பல விஷயங்களில் எல்லாம் கூச்சப்படுவதே கிடையாது. கூச்சப்படவேண்டிய சங்கதிகளுக்கே கூச்சப்படுவதில்லை. அதற்குமேல் நான் சொல்ல விரும்பவில்லை.

இரண்டு கூட்டணியைப்பற்றி மட்டும் பேசுகின்றாரே, இன்னும் சிலர் தேர்தலில் போட்டி போடுகிறர்களே அவர்களைப்பற்றி சொல்லவில்லையே என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்.

தமிழகத்தில் இரண்டு கூட்டணிக்கு இடையே மட்டும்தான் போட்டி. மற்றவர்களையெல்லாம் பா... சாவி கொடுத்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் எல்லாம் ஒரே கம்பெனிக்கு, ஒரே முதலாளியின்கீழ் பணியாற்றும் பல்வேறு பிராண்டு சரக்குகள்.

ஆகவே, அவர்களைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை.

நம்முடைய பிள்ளைகளுடைய கல்வி - படித்த நம்முடைய பிள்ளைகளின் வேலை வாய்ப்பு - வீட்டில் இருக்கக்கூடிய இல்லத்தரசிகளின் உரிமைகள் - பெண்களுடைய உரிமைகள். அதேபோல, இந்த நாட்டில், வாழவேண்டிய, வாழ்வுரிமை பெறவேண்டிய மக்கள் - விவசாயிகள் யாருக்காவது வாய்ப்பு உண்டா?

தரக்குறைவாகவும், தாறுமாறாகவும் விமர்சனம் செய்கிறார் முதலமைச்சர்

நான் விவசாயிதான், நான் விவசாயிதான் என்று சொல்கிறாரே முதலமைச்சர் - இவர் யாரைத் தலைவராக பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அந்த மோடி - விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறதே, அந்த விவசாயிகளைச் சந்தித் திருப்பாரா?

வேளாண் சட்டங்களால் பாதிப்பில்லை என்று சொல்கிறாரே - நானும் விவசாயிதான், நானும் விவசாயிதான் என்று சொல்கிறாரே - அவர் விவசாயியாக இருக்கலாம் - அதை நான் மறுக்க விரும்பவில்லை.

நான் மண்வெட்டியைத் தூக்குகிறேன் - ஸ்டாலின் தூக்குவாரா? என்றெல்லாம், தனிப்பட்ட முறையில், நம்முடைய முதலமைச்சர், தளபதி ஸ்டாலினைப்பற்றி தரக்குறைவாகவும், தாறு மாறாகவும் விமர்சனம் செய்கிறார். அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. இன்னும் சில நாள்களில் தேர்தல் வரவிருக்கிறது. அதில் நிச்சயமாக படுதோல்வி அடையப் போகிறோம் என்று. அந்தத் தோல்வியினுடைய பயம்தான், அவரை இப்படியெல்லாம் உளறச் செய்கிறது.

வெற்றிப் பெறப் போகிறவர்களுக்குப் பொறுப்பு உண்டு

ஆகவே, வெற்றிப் பெறப் போகிறவர்களுக்குப் பொறுப்பு உண்டு - அவர்கள் நிதானமாகத்தான் பேசி யாகவேண்டும்.

மாநில அரசுகளைக் கேட்டு, மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியதா?

விவசாய சட்டங்கள் யாருடைய உரிமை?

அதிகாரத்தின்கீழே - இந்திய அரசமைப்புச் சட்டத் தைத் தெளிவாகப் படித்தவர்கள் - வழக்குரைஞர்கள் சொல்லவேண்டும்.

மாநிலப் பட்டியலில் உள்ளது - ஒத்திசைவு பட்டியல் என்றால்கூட மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து செய்யவேண்டும் அல்லவா?

நீட் தேர்வை திணிக்கிறார்கள் - அதை எதிர்த்து உங்களால் கேள்வி கேட்க முடியவில்லை.

பத்திரிகையில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், நாங்கள் பா...வுக்கு அடிமை, பா...வுக்கு அடிமை என்று சொல்கிறார்களே, அதை ஆதாரத்தோடு சொல்லவேண்டாமா? என்று கேட்கிறார்.

20 இடங்கள் வாங்கிய பா...வினர் ஆட்சியமைப்போம் என்கிறார்கள்!

234 இடங்களில், பா... 20 இடங்கள் வாங்கி யிருக்கிறார்கள். மீதி 214 இடங்கள் இருக்கிறது. 214 இடங்களில் நிற்பவர்கள் நாங்கள்தான் ஆட்சி அமைப் போம் என்பார்களா? அப்படியில்லாமல், அமித்ஷா கடந்த 3 ஆம் தேதி நாகர்கோவிலுக்கு வந்து பேசுகிறார், ‘‘தமிழ்நாட்டில் அடுத்து நாங்கள்தான் ஆட்சி செய்யப் போகிறோம்'' என்கிறார். எந்தத் தைரியத்தில் அப்படி பேசுகிறார்? அதற்கு என்ன காரணம்?

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத அவர்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். .தி.மு..வுக்கு யார் தலைவர் என்றால், மோடிதான். ஏனென்றால், இவர்களுடைய கட்சியை டில்லிக்கு அடமானம் வைத்துவிட்டார்கள்.

‘‘அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி'' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்கிறார்களே, அந்த அம்மா இருந்தபொழுது என்ன சொன்னார்கள் தெரியுமா? அந்த அம்மையாரோடு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; .தி.மு.. தோழர்களும் சேர்ந்து சிந்திக்க வேண்டும்; அவர்களும் சேர்ந்துதான் சம்பத்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட வேண்டும் - உங்களுடைய நலன் கருதி, நாட்டு நலன் கருதி.

உச்சக் கட்ட புளுகு!

2014 ஆம் ஆண்டு மோடி அவர்கள், வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி, இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம், 15 லட்சம் ரூபாயை ஒவ்வொருவருடைய  வங்கிக் கணக்கிலும் போடுவோம் என்று உச்சக் கட்டத்தில் புளுகிவிட்டு, ‘‘சப்கோ சாத், சப்கா விகாஸ்'' என்றார்.

வங்கியில் பணம் போடுவோம் என்று சொன்னார்கள் - இப்பொழுது வங்கியே கிடையாது.

இப்பொழுது இருக்கின்ற முதலமைச்சர், மத்திய அரசோடு இணக்கமாக போகவேண்டாமா? என்கிறார். ஒத்துப் போகவேண்டும் என்று சொல்கிறார்கள்.

நான் ஒன்றைச் சொல்கிறேன், ஒத்துப் போவது என்பது வேறு;  ஒத்து ஊதுவது என்பது வேறு. இரண் டிற்கும் வித்தியாசம் உண்டு.

‘‘உறவுக்குக் கைகொடுப்போம்உரிமைக்குக் குரல் கொடுப்போம்!''

ஒத்துப் போவது - இணக்கமாகப் போவது என்பதைப் பற்றி கலைஞர் சொல்லியிருக்கிறாரே அரசியல் பாடம் - அதனைத் தெளிவாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

‘‘உறவுக்குக் கைகொடுப்போம் -

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!'' என்றார்.

அதனை செய்வதற்கு தளபதி ஸ்டாலினை விட்டால், இன்றைக்குத் தி.மு.. கூட்டணியை விட்டால், வேறு நாதி கிடையாதே!  அதற்காகத்தானே, சம்பத் குமார் அவர்களுக்கு சட்டப்பேரவைக்குப் போகவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதமராக இருந்த மோடி, .தி.மு.. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவிடம், ‘‘நாம் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டார்.

பிரதமர் மோடியை வீட்டுக்கழைத்தார், முதல மைச்சராக இருந்த ஜெயலலிதா.

இலை போட்டு, 24 வகை காய்கறிக் கூட்டு வைத்து - அதை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்; கூட்டு அதோடு சரி - அதற்குப் பிறகு கூட்டு கிடையாது. பூட்டுதான்.

அதற்குப்  பிறகு அந்த அம்மையார் என்ன சொன் னார், ‘‘லேடியா? மோடியா?'' என்று கேட்டு தேர்தலை சந்தித்தார். ஆனால், இன்றைய .தி.மு..வினரின் நிலைமை இப்பொழுது என்ன?

அம்மா ஆட்சி என்று சொல்கிறீர்களே, அம்மா ஆட்சியா? சும்மா ஆட்சியா? இது மீண்டும் வர வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்குத் தார்மீக அடிப்படையில் உரிமை உண்டா?

தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத்தில்கூட பா... கூட்டணி வெற்றி பெற முடியாது

எனவேதான் நண்பர்களே, நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் - தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத் தில்கூட பா... கூட்டணி வெற்றி பெற முடியாது.

பா...வைப் பொறுத்தவரையில், அவர்கள் கட்சிகளோடு போட்டி போட்டதில்லை - நோட்டாவோடுதான் போட்டி.

ஆகவே, இப்பொழுது மறுபடியும் இவர்களுடைய தோளில் ஏறி சவாரி செய்கிறார்கள்.

தமிழ்நாடு மானம் உள்ள மாநிலம் -

தமிழ்நாடு உரிமை உள்ள மாநிலம் -

சமூகநீதியைக் காக்க -

மனித உரிமைகளைக் காக்க -

வாழும் உரிமைகளைக் காக்க -

ஏன் ஈழத் தமிழர்கள் உரிமை நேற்றுகூட காப்பாற்றப் படவில்லை - அப்படிப்பட்ட உரிமைகளைக் காப்பாற்ற-

உதயசூரியனில் விளக்கெரிந்தால்உங்கள் வீட்டில், நாட்டில் விளக்கு எரியும்!

அருள்கூர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள் - சம்பத்குமார் பெயர் எங்கே இருக்கிறது என்று பாருங்கள் - அதற்கு நேரே உதயசூரியன் சின்னம் இருக்கும் - அந்த உதயசூரியன் சின்னத்தை நிதானமாகப் பார்த்து, கை விரலை பொத்தானின்மீது அழுத்துங்கள் - உடனே கைவிரலை எடுத்துவிடாதீர்கள் - அழுத்திக் கொண்டே இருங்கள்!

விளக்கு எரியும் - வெளிச்சம் தெரியும்!

அங்கே விளக்கெரிந்தால் - அங்கே மட்டும் விளக்கு எரியாது - உங்கள் வீட்டில் விளக்கு எரியும் - நாட்டில் விளக்கு எரியும் - ஒரு பெரிய இருட்டு போகும்  - விடியல் கிடைக்கும்!

மறவாதீர், உதயசூரியன் - வெற்றி நிச்சயம்!

‘‘திராவிடம் வெல்லும்! நாளைய வரலாறு இதைச் சொல்லும்!''

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image