ஆங்கில அகராதிக்கு ஒரு புதிய வார்த்தையைக் கொடுத்தவர் பெரியார்!

 சென்னை புத்தகக் காட்சி - நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, மார்ச் 6-- ஆங்கில அகராதிக்கு ஒரு புதிய வார்த்தையைக் கொடுத்தவர் பெரியார்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நூல் வெளியீட்டு விழா

'டெக்கான் கிரானிக்கலில்' பணியாற்றும் பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட  "Periyar E.V. Ramasamy A Man Ahead of His Time" எனும் 253 பக்கங்களில் 20 தலைப்புகளில் உருவான நூல் 'எமரால்டு' பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் வெளியீட்டு விழா சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சி அரங்கில் 28.2.2021 அன்று பிற்பகல் 3.45 மணியளவில் நடைபெற்றது.

விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று உரை யாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி  வருமாறு:

இதோ அம்பேத்கர் சொல்கிறார்!

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லு கிறபொழுது ஒன்றைச் சொல்லுகிறார்:

அடிமைகளை படிக்க விடக்கூடாது அல்லது சமமாக வரக்கூடாது என்றுகூட கருதிய சமுதாயங்கள், உலகின் வேறு நாட்டில்கூட ஒவ்வொரு காலகட்டத்தில் வரலாற்றில் இருந்திருக்கின்றன. ஆனால், இங்கே என்ன வேறுபாடு என்றால், மீறிப் படித்தால், நாக்கை அறுக்க வேண்டும்; காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்; கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருந்ததே - இதுபோன்ற ஒரு காட்டுமிராண்டி சமுதாயமும், மதமும் வேறு எங்கும் கிடையாது என்பதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதியிருக்கிறார்.

அதை மாற்றுவதுதான் பெரியாரின் போர் முறை. பெரியார் ஒரு ஆயுதம்; பெரியார் ஒரு ஏவுகணை போன்றவர். அது எப்படி தாக்கும் என்று சொன்னால், மூல பலம் எங்கே இருக்கிறதோ அதை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை. எதிரே இருப்பதை மட்டுமல்ல!

ஆகவே, அதனை அழகாகச் செய்து - மனிதத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான் பெரியார் பாடுபட்டார். விளைவு, வெற்றியை அவருடைய வாழ் நாளிலேயே பார்த்தார்.

அண்ணா பேசுகிறார்!

அண்ணா அவர்கள் அதைத்தான் சொன்னார், ‘‘நான் உலக வரலாற்றைப் படித்திருக்கிறேன். எந்தத் தலைவரும், அவருடைய வாழ்நாளில், அவருடைய கொள்கைகளை அப்படியே நடைமுறைப்படுத்திய தைப் பார்த்ததில்லை. தங்கள் காலத்தில் கண்டு களித் ததில்லை.  நீங்கள் சுயமரியாதைத் திருமணத்தைத் தொடங்கினீர்கள். அது சட்டமாகக் கூடிய நிலையை நீங்களே பார்த்து அனுபவித்திருக்கிறீர்கள்'' என்று சொன்னார்!

பெரியார் என்ன செய்தார் என்றால், வேறு எதையும் சொல்லவேண்டாம் - இங்கே புத்தகக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 கோடிக்கு மேலே புத்த கங்கள்  விற்பனையாகின்றன. ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற புத்தகக் கண்காட்சியை வைத் திருந்தால், இவ்வளவு கூட்டம் இருக்குமா? இருக்க முடியுமா? அப்பொழுது படித்தவர்களே அதிகமாக இல்லையே! அனைவரும் படிக்கக் கூடாது என்று தடுத்து தானே வைத்திருந்தார்கள்!

மிகப்பெரும்பாலான மக்கள் யார்? ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள். சரி பகுதி மக்கள் யார்? யாராக இருந்தாலும், ஜாதி முக்கியமல்ல - பெண்கள்.

பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்துதான்

பெரியார் விடுதலை கொடுத்தார்!

எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்காதே - குறிப்பாக பெண்களுக்கு அறிவைக் கொடுக்காதே - பெண்களைப் படிக்க வைக்காதே - அடுப்பூது வதுதான் அவர்களுடைய வேலை என்று சொல்லி, படிக்காத இருந்த பெண்களை - மேல்ஜாதி பெண் களாக இருந்தாலும், உயர்ஜாதி என்று சொல்லுகின்ற பார்ப்பன சமுதாயத்தில் பிறந்த பெண்களாக இருந் தாலும்,  எங்களுடைய பார்வையில் மனிதர்கள்; மற்ற வர்களுடைய தத்துவம் அவர்களும் சூத்திரர்கள்தான் ("நமோ சூத்திரர்கள்") என்பதுதான்  மனுதர்ம சுலோகம்.

எனவே, பெரியார் அவர்களுக்கும் சேர்த்து விடு தலை கொடுத்தார். ஏனென்றால், அவர்களை மனிதர் களாகப் பார்த்தாரே தவிர, அவர்களை வேறு வகை யில் பிரித்துப் பார்க்கவில்லை.

படித்தவர்களின் சதவிகிதம் 70 சதவிகிதமாக உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்ன?

அந்த மனிதத்தினுடைய பரவலாக இன்றைக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுடைய எண்ணிக்கை இந்த நாட்டில் 70 சதவிகிதத்திற்கும் மேல். ஏழு சதவிகிதமாக இருந்த நாட்டில், புத்தகக் காட்சியைத் தொடங்கியிருந்தால், 10 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையாகி இருக்காது;  படித்தவர் களின் சதவிகிதம் 70 சதவிகிதமாக உயர்ந்ததோடு மட்டுமல்ல, எதையும் படித்து, அறிந்து ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையிருக்கின்ற காரணத்தினால்தான், இந்த அரங்கத்தில் பல தரப் பட்ட கருத்துள்ளவர்களும் வந்திருக்கின்றீர்கள். எல் லோரும் எங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்லமாட்டோம். அந்த உணர்வை உருவாவதற்கு யார் மூலகாரணம் என் றால், பெரியார் என்ற மாபெரும் அறிவியல் ஞானி யினுடைய  எழுத்துதான் காரணம்.

எல்லோரும் படியுங்கள் என்று சொன்னார்; சிந்தியுங்கள் என்று சொன்னார்; நம்பாதீர்கள் என்று சொன்னார்.  அதுதான் காலத்தை முன்னோக்கிச் சென்றார்கள்.

ஒரு சில உதாரணங்களைச் சொல்லுகிறேன்.

‘‘How he is A Man Ahead of His Time?"

காலத்திற்கு முன்னோடியாக தந்தை பெரியார் அவர்கள் எப்படி இருந்தார்  என்பதற்கு உதாரணமாக, பல செய்திகளை இந்த நூலில் அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் பாபு ஜெயக்குமார் அவர்கள்.

120 ஆண்டுகளுக்கு முன்பு...

எண்ணிப் பாருங்கள் தோழர்களே, 120 ஆண்டு களுக்கு முன்பாக - நம்மில் பலர் பிறக்காத காலத்தில், நம்முடைய அப்பாவும், தாத்தாவும் பிறக்காத காலத் தில் என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில் அவருடைய வீட்டில் ஒரு சம்பவம் - தந்தை பெரியாரின் தங்கை மகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தக் காலத்தில் அதுதானே நடைமுறை. ஏழு, எட்டு வய திற்குள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய் தாகவேண் டும். அதுதான் காஞ்சி சங்கராச்சாரியாருடைய கட்டளை.

பெண்கள் பூப்பெய்துவதற்கு முன்னாலேகூட திருமணம் நடந்தாகவேண்டும். அதுதானே உங்கள் சனாதனம் - அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். மரப்பாச்சி பொம்மையை வைத்து திருமணம் செய்து வைப்பதுபோன்று, சிறிய பெண் குழந்தையும், சிறிய ஆண் பையனும் விளையாடிக் கொண்டிருந்தவர்களை அழைத்து அவர்களுக்குக் குழந்தைத் திருமணங்களை செய்து வைத்தார்கள்.

இயக்குநர் ஞானராஜசேகரனின்

‘‘பெரியார்'' திரைப்படம்!

மிக அருமையாகச் சித்தரித்திருப்பார் நம்முடைய ஞானராஜசேகரன் - ‘பெரியார்' திரைப்படத்தில் பார்த் தீர்களேயானால் - அந்தக் காட்சி வரும்.

அந்தக் காலத்தில் காலரா நோய் வந்தால், மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும். குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அந்த சிறிய பைய னாக இருந்த மணமகன் காலரா நோயினால் உயிரி ழந்துவிட்டான். மணமகளோ சிறிய பெண் குழந்தை - மாமாவான பெரியாரின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுகின்ற காட்சியை  தத்ரூபமாக எடுத்திருப்பார்.

''பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற நூலில் அப்படியே அந்தக் காட்சியை வர்ணித்திருப்பார்.

பெரியாரின் காலைப் பிடித்து அழுகின்ற அந்தப் பெண், ‘‘மாமா நான் திருமணம் கேட்டேனா?" என்று அழுகின்ற நேரத்தில், "அந்தப் பெண் குழந்தையைத் தூக்கி நிறுத்தி, மீண்டும் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும்" என்ற உறுதியோடு அந்தப் பெண்ணை தூக்கி நிறுத்தினேன் என்ற வார்த்தையைப் பெரியார் கூறுவார்; அதை அப்படியேபெரியார்' திரைப்படத்தில் எடுத்துக் காட்டினார் இயக்குநர் ஞானராசசேகரன் அவர்கள்.

இன்றைக்கு  என்ன நிலை?

மேற்கண்ட நிகழ்வு நடந்தது 1908 இல்!

இன்றைய இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திரு மணங்களை செய்கிறார்கள்; கலப்புத் திருமணங்களை செய்கிறார்கள். ஆனால், விதவைத் திருமணமா? என்று கேட்கிறார்கள்!

பெரியார் செய்த புரட்சி!

ஆனால், இவன் "விதவன்" ஆனால், உடனே திருமணம் செய்துகொள்கிறான்.

விதவன்' என்கிற ஒரு சொல்லே கிடையாது. கைம்பெண் என்றுதான் அதற்குப் பெயர். கைம் ஆண் என்ற சொல் கிடையாது.  ஏனென்றால், கைம் ஆண் இல்லை; ஆகவே, கைம் ஆண் என்ற வார்த்தை இல்லை. ஏன் - ஏன்?

பெரியார்தான் கேட்டார், ‘‘நீ மறுமணம் செய்து கொள்ளும்பொழுது, கணவனை இழந்த பெண்ணும் மறுமணம் செய்துகொள்ளவேண்டாமா? எதற்காக பால் வேற்றுமை'' என்று கேட்டார் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் செய்த புரட்சி என்ன என்பதை நினைத் துப் பார்க்கவேண்டும்.

பெரியார் இன்னும் உங்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்; வாழும் தத்துவமாக!

1908 ஆம் ஆண்டு - 113 ஆண்டுகளுக்கு முன்பு.

அன்றைக்குப் பெரியார் செய்த  புரட்சி -

பெரியாரின் தத்துவத்தை நீங்கள் என்ன செய் தாலும், தத்துவத்தை ஒழிக்க முடியாது; விரட்ட முடியாது; என்னதான் சாயம் பூசினாலும், காயப்படப் போகிறவர்கள் நீங்களே தவிர - பெரியார் சாயப்படப் போகிறவர் அல்ல.  பெரியார் இன்னும் உங்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்; வாழும் தத்துவமாக!

ஒன்றே ஒன்றை சொல்கிறேன்.

யாரையும் நாம் கொச்சைப்படுத்தியதில்லை. எல்லா சகோதரிகளும், எல்லா பெண்களும் நமக்கு  மானமுள்ள மனிதராகத்தான் இருக்கவேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தினுடைய கொள்கை - தந்தை பெரியாருடைய கொள்கை.

பெரியார் என்ன செய்தார் என்றால், எல்லோருக் கும் செய்ததைவிட, அக்கிரகாரத்துப் பெண்களுக்கு இன்னும் அதிகமான அளவிற்குப் பெரியார் பாது காப்பாக இருந்தார்.

அதைச் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்; அது என்னவென்றால், தயவு செய்து உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் - அதற்குப் பரிசும் கொடுக்கிறேன் - தமிழ்நாட்டில் "மொட்டைப் பாப்பாத்தி" என்று சொல்லக்கூடிய வெள்ளைச் சீலை கட்டி,  தலையை மொட்டையடித்து, விதவையான வர்கள் இப்போது எங்கேயாவது இருக்கிறார்களா? பார்க்க முடிகிறதா?

காலத்தைத் தாண்டி வாழ்ந்த பெரியார்!

சினிமா சூட்டிங்கில் வேண்டுமானால் அது போன்று பார்க்க முடியுமே தவிர, சமூகத்தில் இன் றைக்கு எங்கும் கிடையாது. காரணம், அவர்கள்தான் முதலில் மாற்றப்பட்டவர்களாக இருக்கிறார்கள்; புது வாழ்க்கையைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றால், காரணம் யார்?

காரணம், மனுதர்மம் அல்ல நண்பர்களே - ஈரோட்டுப் பெரியார் - காலத்தைத் தாண்டி வாழ்ந்த பெரியார்.

ஏன் அந்தப் பெண்ணுக்கு மறுவாழ்வு தரக்கூடாது என்று கேட்டார்கள். எல்லா மதங்களிலும் விதவைகள் இருக்கிறார்கள்; ஆனால், உன்னுடைய மதத்தில் மட்டும்தானே விதவைக் கோலம் இருக்கிறது என்று சொன்னார்கள்.

மனிதத்திற்கு விரோதமானது எது?

"என்னைப் பிறப்பித்து, என்னை வளர்த்து ஆளாக்கிய தாய் - என்னுடைய தந்தை இல்லை என் பதற்காக - தானே கஷ்டப்பட்டு என்னை வளர்த்த தாய்- நான் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், என் தாய் முன்னால் வரக்கூடாது என்று சொல்கிறாயே" - இதைவிட மனிதத்திற்கு விரோதமானது எது?

அந்தத் தாயை நீ பார்க்கக் கூடாது; அந்தத் தாய் பார்த்தால் கெட்ட சகுனம் என்று சொல்லி, அந்தத் தாயை அவமானப்படுத்துகின்றாயே, அந்தத் தாயினு டைய கண்களில்  இருந்து பொலபொலவென்று கண்ணீர் வடிகிறதே - அந்தக் காட்சியை மாற்றியவர் யார்?

தந்தை பெரியார் என்ற  அந்த சமுதாயப் புரட்சி யாளர் அல்லவா! இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம் நண்பர்களே!

அவர் காலத்தைத் தாண்டியவர்!

பிராமினோகிரசி'  (Brahminocracy)என்ற வார்த்தையை நான் ஏற்கெனவே சொன்னேன். சேரன்மாதேவி குருகுலம் - காந்தியாரிடம் சென்று சமாதானம் சொல்கிறார்கள்.

பார்ப்பன சமையற்காரர்களை வைத்துக் கொள் ளலாம் என்று சொன்னார். வரதராசுலு நாயுடுவும், பெரியாரும், திரு.வி..வும் ஒப்புக்கொள்ளவில்லை.

காங்கிரசில் இருக்கும்பொழுது 1924 இல் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் தந்தை பெரியார்.

இந்து' நாளிதழின் நூற்றாண்டு மலரில்...

ஜாதி முறையை ஒழித்தாகவேண்டும்; அதுவும் பிரிட்டிஷ்காரர்கள் இருக்கின்றபொழுதே ஒழித்தாக வேண்டும். இதைஇந்து' நாளிதழின் நூற்றாண்டு மலரில் இருப்பதை நான் சொல்லுகிறேன். யாருக் காவது சந்தேகம் இருந்தால், 336 ஆம் பக்கத்தை எடுத்துப் பார்க்கட்டும்; அதிலிருக்கும் வார்த்தைகள் இவை.

"If the caste question is not settled before the Britishers leave this country, then there will be Brahminocracy."


ஆங்கில அகராதிக்கு ஒரு புதிய வார்த்தையைக் கொடுத்தார் தந்தை பெரியார்!

Brahminocracy  என்ற வார்த்தையைப் பெரியார் பயன்படுத்தி இருக்கிறார். ஆங்கில அகராதிக்கு ஒரு புதிய வார்த்தையைக் கொடுத்த பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.

 அதுதான்  Brahminocracy என்பதாகும்.

A Government of the Brahmins; for the Brahmins; by the Brahmins


இதுதான் அதற்கு அர்த்தம்.

இது அரசியல் மேடையல்ல; ஒரு புத்தக வெளி யீட்டு விழா - ஆகையால், எனக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் நின்று கொண்டு நான் சொல்கிறேன்.

அமெரிக்காவிலிருந்து செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய விண்கலத்தை அனுப்பிய குழுவில் இந் தியாவிலிருந்து சென்ற ஒரு பெண்ணின் பங்களிப்பும் இருக்கிறது. அந்தப் பெண்தான் அதனை சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லும்பொழுது அறி வியல் மனப்பான்மை - இதை பெரியார் சொன்னார் - இனிவரும் உலகத்தில்.

அந்த ‘‘இனிவரும் உலகத்தில்'' எல்லோரும் காணொலி காட்சியின் மூலமாகப் பேசிக் கொள் வார்கள். இதை எப்பொழுது சொன்னார், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக.

அவர் சொல்லும்பொழுது அதுபோன்று நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால், இப்பொழுது ஜூம் வந்தாகிவிட்டது. கரோனா வந்த பிறகு, நாம் மட்டுமல்ல, எல்லோரும் ஜூம் - காணொலிமூல மாகத்தான் கூட்டங்களை நடத்துகிறார்கள். பகவான் கூட இப்பொழுது ஜூம் காணொலி மூலமாகத்தான் வரக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார் என்றால், விஞ்ஞானம்  அதற்கும் பயன்படுகிறது.

பெரியாருடைய தொலைநோக்கு -

‘‘Ahead of His Time" என்று சொல்லக்கூடிய அந்தக் காட்சி இருக்கிறதே, அது மிகவும் முக்கியமான அளவிற்குப் பயன்பட்டு இருக்கிறது.

இவ்வளவு பெரிய மாற்றம் நம் நாட்டில் வந்திருக் கிறது; ஏன் நாங்கள் தோள்மீது துண்டு போட்டிருக் கிறோம்? இங்கே அய்யா சொன்னார், எழுச்சித் தமிழர் சொன்னார் - நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால்,  தோள்மீது துண்டு போட முடியுமா? முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்ட முடியுமா? இன்றைக்கு நான் பட்டதாரியாக, எழுச்சித் தமிழர் பட்டதாரியாக, மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள் எல்லாம் பட்டதாரிகளாக, அய்..எஸ். அதிகாரிகளாக இருக்கிறோமே இந்த சமுதாய மாற்றத்தை எளிதில் பார்த்திருக்க முடியுமா?

வருஷா வருஷம்தான் சரசுவதிக்கு பூஜை கொண்டாடுகிறோம் - கல்விக்குக் கடவுள் சரசுவதி என்று உயர்த்தி வைத்திருக்கிறோம். கல்விக்குக் கடவுள் இருக்கும் நாட்டில், பெரியார் காலத்திற்கு முன்பு எவ்வளவு பேர் நம்முடைய நாட்டில் படித்திருந் தார்கள்? கையெழுத்துப் போடத் தெரியாதே!

அந்தக் காலத்தில் புத்தகம்கூட பெரிய எழுத்தில் அச்சடித்தால்தான் விற்கும்; சிறிய எழுத்தில் அச்சடித் தால் விற்காது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில், இன் றைக்கு இவ்வளவு பெரிய மாறுதல் வந்திருக்கிறது என்றால், என்ன காரணம்?

பாட்டி சரசுவதிக்குக் கையெழுத்துப் போடத் தெரியாது; பேத்தி சரசுவதி டாக்டர் சரசுவதியாக, பொறியாளர் சரசுவதியாக, வழக்குரைஞர் சரசுவதி யாக, நீதிபதி சரசுவதியாக இருக்கிறார்.

பெரியார் மண் என்பதற்கு அடையாளம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்று செல்லும் நிலையில், ‘‘சென்னை உயர்நீதிமன்றத்தைப் பார்த்துப் பூரிப்படைகிறேன். காரணம், இந்த ஒரு மாநிலத்தில் இருக்கின்ற உயர்நீதி மன்றத் தில்தான் 13 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பெண் நீதிபதிகளைக் கணக் கெடுத்தால், மொத்தம் 23. அதில் 13 பெண் நீதிபதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கிறார்களே, அந்தப் பெருமை தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்தி லாவது உண்டா?'' என்றார்.

அதற்கு என்ன காரணம்?

அதுதான் நண்பர்களே, ‘பெரியார் மண்' என்று எப்படி சொல்கிறீர்களே என்று கேட்டீர்களே, இதுதான் பெரியார் மண் என்பதற்கு அடையாளம்!

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும்தான். அதுவும் ஒரு பெண் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்தது. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அரசியல் ரீதியாக - அது முக்கியமல்ல.

திராவிடர் கழகம் உண்மையைச் சொல்லத் தயங்காது என்கிற காரணத்தினால்தான், ‘‘சமூகநீதி காத்த வீராங்கனை'' என்று பட்டம் கொடுத்து அந்தப் பெண்ணை உயர்த்தினோம். ஜாதி முக்கியமல்ல நண்பர்களே - சாதனை முக்கியம் - சரித்திரம் அது.

69 சதவிகித இட ஒதுக்கீட்டை

நாங்கள் வாங்கிக் கொடுத்த பிறகுதான்...

இன்றைக்கு நாங்கள்வித்தை' காட்டுகிறோம் - தேர்தலுக்கு என்று சொல்லக்கூடியவர்கள் கூட, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் வாங்கிக் கொடுத்த பிறகுதான், அதிலே கொஞ்சம் கிள்ளி, கிள்ளி 10 சதவிகிதம் கொடுக்கலாமா? 7 சதவிகிதம் கொடுக்கலாமா? 6 சதவிகிதம் கொடுக்கலாமா? என்கிறார்கள். நாங்கள் கட்டி வைத்த சோற்றை, நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பங்கிட்டுத் தானே கொடுக்கிறீர்கள். சோறு வடித்தவர்தானே மிக முக்கியம். அந்த சோறு வடிக்கக் காரணமானவர்தான் இந்த நூலின் கதா நாயகர் - அறிவு  ஆசான் தந்தை பெரியார்.

அதுதான் "Ahead of His Time"     என்பதற்கு  அடையாளம். எனவே நண்பர்களே, நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வளவும் செய்த பெரியாருடைய சாதனையினுடைய உச்சம் - அவரே ஓர் ஆயுதம் என்று சொன்னார்கள். ஆனால், அவர் ஆயுதத்தைத் தாங்கியதே கிடையாது.

மனிதர்களைப் பற்றி கவலைப்படுவதைவிட,

பசு மாட்டுக்குப் பாதுகாப்பு அதிகம்!

பெரியார் ஒரு போராயுதம் என்றாலும், ஒரு துளி ரத்தம் சிந்தியதில்லை. வடநாட்டில், பசு மாட்டை காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில், இன்றைக்கு மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களைப் பற்றி கவலைப்படுவதைவிட, பசு மாட்டுக்குப் பாதுகாப்பு அதிகம் அங்கே.

ஆனால், நண்பர்களே, இங்கே என்ன சூழ்நிலை என்று சொன்னால், மனிதர்களுக்கும் பாதுகாப்பு உண்டு - எல்லோருக்கும் பாதுகாப்பு உண்டு. காரணம், அறிவு! அறிவு!! அறிவு!!!

1990-களில் இந்தியா முழுவதும் மதக் கலவரம் நடந்த நேரத்தில், ஒரே ஒரு பூமிதான் அமைதிப் பூங்காவாக இருந்தது - அது தமிழ்நாடு என்றால், இங்கே ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல் இருந்ததற்கு என்ன காரணம்?

மதவெறிக்கு இடமில்லை. ஜாதி வெறிக்கு இடமில்லை

மனிதநேயத்திற்கு மட்டுமே இடமுண்டு

என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை உருவாக்கிய இயக்கம் இந்த இயக்கம்.

திராவிடம் வெல்லும் - அறிவு வெல்லும் -

அனைவருக்கும் சமத்துவம் வரும்!

நாளைக்கும் ‘‘திராவிடம் வெல்லும்!'' என்று நாங்கள் சொல்கிறோம் என்று சொன்னால், அங்கே அறிவு வெல்லும் என்று அதற்குப் பொருள். உணர்ச்சிகளுக்கு அங்கே இடம் கிடையாது. அறிவு வெல்லும் - அனைவருக்கும் சமத்துவம் வரும்.

எனவே, பெரியார் என்ற போராயுதம் - அந்தப் போராயுதத்தி னுடைய தனித்தன்மை யாரையும் கொல்லாது! எல்லோரையும் வாழ வைக்கும்!

திராவிடம் வெல்லும்! பெரியார் வெல்வார்!! பெரியார் காலத்தைத் தாண்டி வாழ்வார்!

இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள், வெளியிட்டவருக்கும், எழுதியவருக்கும்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments