பள்ளிக்கூடப் பிரச்சினையில் ஜாதியா?

காஞ்சிபுரம் மாவட்டம் - வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊர் கோவிந்தவாடி.

1961ஆம் ஆண்டில் கல்வி வள்ளல் காமராசர். அவர்களின் முயற்சியால் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட கல்வி நிலையம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

அரசுப் பள்ளி மேனிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது (2009). தேவையான கட்டடங்கள் ஆய்வுக் கூடங்கள், சமையலறைகள், போதிய கழிப்பறைகள் கட்டப்படுவ தற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

என்ன காரணமாம்?

குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அந்தப் பள்ளிக்கூடம் இருக்கக் கூடாதாம். இதற்கு ஆளும் கட்சிப் பிரமுகரும் உடந்தையாம் - வேறு இடத்தைத் தேர்ந்தெடுத்து கட்டடம் கட்டத் தொடங்கிய நிலையில், ஏற்கெனவே இருக்கும் இடத்தினை மேனிலைப் பள்ளியை மாற்றக் கூடாது என்று நியாயமான வற்புறுத்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை எதிர்த்து ஒரு சாரரர் நீதிமன்றம் சென்றுள்ள னர். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து மாவட்ட ஆட்சியருக்குச் சில பரிந்துரைகளையும் நீதிமன்றம் செய்துள்ளது.

பொறியாளர்கள், கல்வி அதிகாரிகள் குழுவைக் கொண்டு பள்ளி உள்ள இடத்தையும், அங்குள்ள கட்டட வசதிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பாலும் படிக்க வாய்ப்புள்ள பள்ளி என்பதால், தங்களை உயர் ஜாதியினர் என்று கருதிக் கொண்டு இருப்பவர்கள் எதிர்ப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.

பார்ப்பனர்களைத் தவிர மீதி அத்தனைப் பேரும் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப் பட்டவர் களாகவும்தான் இந்து மதப்படி ஆக்கப் பட்டுள்ளார்கள். சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும்தான் இருந்து வருகிறோம்.

இதில் மட்டத்தில் உசத்தி என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் போக்காகும்.

ஒரு நூற்றாண்டுக் காலம் சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் பாடுபட்டு, இந்தியா விலேயே ஓர் உன்னதமான உயர்ந்த சமத்துவக் கோட்பாடு உடைய பூமியாகத் தமிழ் மண் பக்குவப்படுத்தப்பட்டுள்ளது.

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்வதை வெட்கப்படும்படிச் செய்திருக்கிறோம். இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்தப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடைபெற்று இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களும் ஆண்டாண்டுக்காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட வர்கள்தான்.

நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி உள்ளிட்டு, தொடர்ந்து திராவிடர் இயக்க ஆட்சி யால் கல்வி வளத்தில் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. இன்னும் இதில் எட்ட வேண்டிய தொலைவு இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில் நமக்குள்ளேயே ஜாதியில் உயர்வு - தாழ்வு என்ற கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளை அணுகுவது அறிவுடைமையாகாது.

தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியராக இருந்தால் அந்த மாவட்டத்தில் வாழக் கூடாது என்று நினைக்க முடியுமா? தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக இருந்தால் அந்த வகுப்பில் படிக்க மாட்டேன் என்று கூற முடியுமா?

அதுபோன்றதே தான், குறிப்பிட்ட பிரிவினர் அதிகமாக வாழும் பகுதியில் இன்னொரு பிரிவினர் அதிகம் படிக்கும் பள்ளி இயங்கக் கூடாது என்பது பச்சையான பிற்போக்குத் தனமாகும்.

தென் மாவட்டங்களில் ஜாதிவாரியாக பல வண்ணங் களில் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டும் கலாச்சாரம் தலை தூக்கியபோது, அதனைக் கண்டித்து கல்வித் துறைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் எழுதப்பட்ட நிலையில் அது தடுக்கப்பட்டது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கல்வி வளர்ச்சியில் ஜாதிக் கண்ணோட்ட மூக்கை நுழைக்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம். அதை அனுமதிக்கவே கூடாது - கூடாது!

Comments