தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் திட்டமா?

தமிழகத்துக்கு செல்லும் நீரைப் பயன்படுத்தி மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட முடிவு

கருநாடக பட்ஜெட்டில் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு, மார்ச் 12  காவிரியில் தமிழகத்துக்கு செல்லும் நீரை பயன்படுத்தி மேகேதாட்டுவில் புதிய அணைகட்டப்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கருநாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் தமிழக எல்லைக்கு அருகில் உள்ள மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட மாநில அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. இதற்கான திட்ட வரைவு அறிக்கை மத்திய நீர்வளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மத்திய அரசு மேகேதாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கருநாடகா, அந்த திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (8.3.2021) முதல்வர் எடியூரப்பா, கருநாடக மாநிலத்தின் 2021 - 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்செய்து உரையாற்றினார். அப்போது எடியூரப்பா கூறியதாவது:

பெங்களூரு மாநகரில் அதிகரித்துள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அர்க்காவதி - காவிரி திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் மேகேதாட்டு அருகே ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்டப்படும். இந்தகூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்பெங்களூரு மாநகருக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும். மேலும், ராம்நகர், கோலார் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கும் பயன்படுத்தப் படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மேகேதாட்டுவில் அணை கட்டும் பணி தொடங்கும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கழிவு நீர் சிக்கல்

பெங்களூருவில் கழிவுநீர் குறித்து முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ''பெங்களூருவில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து கோலார், சிக்கபள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரப்பப்படும். கே.சி.வேலி திட்டம் பெங்களூருவில் இருந்து கோலார்,சிக்கபள்ளாப்பூர் மாவட்டங் களுக்கும் விரிவாக்கம் செய்யப் பட்டு, 300 ஏரிகளில் நீர் நிரப் பப்படும். இதன் மூலம் அந்த மாவட்டங்களில் பாசன வசதி கிடைக்கும். பெங்களூருவில் சுத்திகரிக்கப்படும் கழிவு நீரின் அளவை 248 மில்லியன் லிட்டர் ஆக உயர்த்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது'' என்றார். எடியூரப்பாவின் இந்த அறிவிப்பால் தமிழகத்துக்கு கிடைக்கும் காவிரி மற்றும் தென்பெண்ணை நீரின் அளவு மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Comments