மகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை

 பஞ்சாப் அரசு அறிவிப்பு

சண்டிகர், மார்ச். 10 பஞ்சாப் மாநிலத்தில் இனி அரசு பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணம் இல்லை என அம்மாநில  முதல்வர் அறிவித்துள்ளார்.

பன்னாட்டு மகளிர் தினம் உலகெங்கும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.   பல உலகத் தலைவர்கள் அதையொட்டி மகளி ருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல சமூக வலைத் தளங்களில் சாதனைப் பெண்கள் குறித்த பதிவு வெளியாகியது.

அவ்வகையில் இந்தியாவிலும் அனைத்து தலைவர்களும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த் துக்கள் தெரிவித்தனர்.  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெண் ஊழியர்கள் அனைவருக்கும் 8.3.2021 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தனது டிவிட்டரில், “சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.   பஞ்சாப் அரசு பெண்களின் பாதுகாப்புக்காக 8 புதிய திட்டங்கள் அமல் படுத்தப்பட உள் ளன.  மேலும் இனி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பேருந்து களிலும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது" என அறிவித்துள்ளார்.

 கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மும்பையில் ஊரடங்கு அமலாகும்

மும்பை, மார்ச் 10- கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மும்பையில் பகுதி நேர ஊரடங்கு அமலாகும் என்று அமைச்சர் அஸ்லம் சேக் கூறினார்.

மராட்டியத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில், தலைநகர் மும்பையிலும் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்த நிலையில் மும்பை நகரில் பகுதிநேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக மும்பை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அஸ்லம் சேக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- மும்பையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக முதல்அமைச்சர் உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்தார். கரோனாவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக முகக்கவசம் அணியாதவர்கள், திருமணங்கள், கேளிக்கை விடுதிகளில் அதிக பேர் கூடினால் அபராதம் விதிக்கப்படும். கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதுடன், தடுப்பூசியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு மய்யங்களில் தனிமைப்படுத்துதல் அதிகரிக்கப்படும். இதிலும் பாதிப்பு கட்டுக்கு வராமல் தொடர்ந்து அதிகரித்தால் இறுதியாக பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 மத்திய அரசின் நிதி மேலாண்மை குறித்த கணக்குத் தணிக்கை அறிக்கை 75 விழுக்காடு குறைவு

புதுடில்லி, மார்ச் 10 மத்திய கணக்கு தணிக்கையாளரின் மத்திய அரசு நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகள்

75 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அரசைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக உள்ளது.  இந்த அமைப்பு மத்திய அரசின் நிதி நிலை, செயல்பாடு மற்றும் ஒப்பீடுகள் குறித்து அறிக்கைகள் அளித்து வருகிறது.   இந்த அமைப்பு அரசு தலையிட முடியாத சுயாட்சி அமைப்பாகும்.   இந்த அமைப்பின் ஆய்வறிக்கைகள் அரசின் பல விவரங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. குறிப்பாக  நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு உள்ளிட்டவற்றை வெளிக் கொணர்ந்தது மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக் கைகள் ஆகும்.  ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் கிடைக்கப்பட்ட விவரங்களின் படி இந்த அமைப்பின் பாதுகாப்புத்துறை அறிக்கைகள் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகளும் குறைவாகத் தாக்கல் செய்யப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.  கடந்த 2015 ஆம் வருடம் மத்திய அரசின் நிதி மேலாண்மை குறித்து மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் 55 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.  ஆனால் அது 2020 ஆம் வருடம் 14 ஆகக் குறைந்துள்ளது.   அதாவது இது 75 சதவீதம் குறைவு எனத் தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் மூலம் கிடைத்த விவரங்கள் தெரிவிக்கின்றன.

 ரயில்வேயில் அனைத்து விசாரணைகள், புகார்களுக்கும் ஒரே தொலைபேசி எண் ‘139’

புதுடில்லி, மார்ச் 10- ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ரயில்வே பயணிகள் பயணத்தின்போது தங்கள் குறை களை தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல தொலைபேசி எண்களில் பேசவேண்டியுள்ள அசவுகரியத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து தொலைபேசி உதவி எண்களும் ‘139’ என்ற ஒற்றை எண்ணில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உடனுக்குடன் குறைகளை தீர்த்துக்கொள்ள முடியும், தேவையான தகவலைப் பெற இயலும்.

பயணத்தின்போது, பயணிகள் தங்கள் அனைத்து தேவைகளுக்கும் இந்த எண்ணை நினைவில் வைத்திருப் பதும், பயன்படுத்துவதும் எளிது.

இந்த 139 தொலைபேசி சேவை, 12 மொழிகளில் கிடைக்கும். இதில் ரயில் பயணிகள், அய்.வி.ஆர்.எஸ். எனப் படும் பதிவு செய்யப்பட்ட குரல்வழி சேவையை பயன் படுத்தலாம். அல்லது நட்சத்திரக்குறியை (ஆஸ்டெரிஸ்க்) அழுத்துவதன் மூலம், ரயில்வே கால் சென்டர் அலுவலரை நேரடியாக தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.

இந்த தொலைபேசி உதவி எண்ணை அழைக்க ஸ்மார்ட்போன்தான் வேண்டும் என்பதில்லை, அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம்.

139 தொலைபேசி உதவி எண்ணில், எந்தெந்த சேவைக்கு எந்தெந்த எண்களை அழுத்த வேண்டும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விவரம் வருமாறு:-

1. பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்கு இந்த எண்ணை அழுத்தினால், கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பு கிடைக்கும்.

2. விசாரணைகள், பி.என்.ஆர். நிலை, ரயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, விழிப்பு அலாரம், உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவை.

3. பொது புகார்கள்.

4. லஞ்சம் தொடர்பான புகார்கள்.

5. பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகள்.

6. அய்.ஆர்.சி.டி.சி.யால் இயக்கப்படும் ரயில்கள் தொடர்பான விசாரணைகள்.

8. அளித்த புகாரின் நிலை குறித்து அறிய.

கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேச.

இந்த ஒருங்கிணைந்த தொலைபேசி உதவி எண்ணை பிரபலப்படுத்த, ‘ஒரே ரயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ என்ற சமூக ஊடக பிரச்சாரத்தையும் ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.

 

Comments