ஆசிரியருக்குக் கடிதம்

தடம் மாறா தலைவர் கொள்கை மாறா தொண்டர்கள்

நேற்று (6.3.2021) மாலை 6 மணிக்கு தமிழகத்திலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து பரபரப்புச் செய்திகள் (பிளாஸ் நியூஸ்) வெளியிட்டு தமிழக மக்களை பரபரப்பாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரே ஒரே ஒரு தலைவர் மட்டும் பகுத்தறிவுக் கொள்கை, மதச்சார்பற்ற கொள்கை, மதவெறி மாய்க்கும் கொள்கைகளுக்காக, தன் நேரத்தைச் செலவிட்டு தன் தொண்டர்களையும், நல்வழிப்படுத்திய நிகழ்வு நடைபெற்றது. அத்தலைவர் தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அத்தொண்டர்கள்தான் திராவிடர் கழகத் தொண்டர்கள்.

மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மராட்டிய வீரர் தபோல்கர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் பங்கெடுத்து பகுத்தறிவு உரையாற்றியதோடு - அவர்களால் வழங்கப்பட்ட விருதையும் ஏற்றுக்கொண்டு தன் கடமையை தந்தை பெரியார் வழி தவறாமல் நிறைவேற்றினார். அரசியல் வாணவேடிக்கை நடைபெறும் நேரத்திலும் - அய்யாவின் வழியை தன் தொண்டர்களுக்கு போதித்துக் கொண்டிருந்த காட்சி, இந்த கருஞ்சட்டைப் படையை எந்தக் கொம்பனாலும் திசை திருப்ப முடியாது என்பதை பறை சாற்றியது. ஆசிரியரின் தலைமை எந்தளவு கொள்கை வீரியம் மிக்கது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்

சிதம்பரம் மாவட்டத் தலைவர்

Comments