பா.ஜ.க.வின் அணுகுமுறை

பாரதீய ஜனதா கட்சி என்னும் உயர் ஜாதி பார்ப்பன ஜனதா கட்சியின் சித்தாந்தம் என்பது ஆர்.எஸ்.எஸின் மூலத்தைக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ். என்பதுதான் அதன் தாய் நிறுவனம்.

ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பதைத்தான் ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் தன் ஞான கங்கை (BUNCH OF THOUGHTS)  என்ற நூலில் திட்டவட்டமாகவே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

இப்பொழுது மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள  புதிய கல்விக் கொள்கை 2020 என்பதில் இதற்கான அடையாளங்களைக் காண முடிகிறது.

மூன்றாவது மொழியாக நீண்டகாலம் இருந்து வந்த ஜெர்மன் மொழியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை  வைத்ததையும் கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் 25,000 பேர்கள் கூடப் பேசாத (00.01%) சமஸ்கிருதத்துக்கு ரூ.700 கோடியைக் கொட்டி அழுகிறதே. இது பெரும்பான்மையான மக்களின் வரிப்பணம் அல்லவா?

ஜாதி - வருணாசிரமம் என்பதை வலியுறுத்தி கோல்வால்கர் அந்த நூலில் எழுதியுள்ளார். அது ஒரு சமூக ஆய்வு என்று சாதிக்கிறார். "பிராமணர்கள் தங்களின் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள், சத்திரியர்கள் எதிரிகளை ஒழிக்கக் கூடியவர்கள், வாணிபத்தில் ஈடுபடுவோர் வைசியர்கள் சமூகத்திற்கு வேலை செய்பவர்கள் சூத்திரர்கள்" என்கிறார்.

இவர் கூற்றுப்படி தான் இந்தச் சமூக அமைப்பு இருக்க வேண்டுமா? அறிவுத் திறமை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? மனிதனின் மிகச் சிறந்த சீலம் என்பது அவனின் பகுத்தறிவுதான்!  அது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும்தான் இருக்கிறதா, சொந்தமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு அவர்கள் நேர்மையாகப் பதில் சொல்ல மாட்டார்கள். ஆனாலும் அந்த வருணாசிரமத்தைக் கட்டிக் காப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

1952இல் ராஜாஜி சென்னை மாநில முதல் அமைச்சராக வந்த நேரத்தில் கூட, ஆறாயிரம் பள்ளிகளை இழுத்து மூடியும், அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று சட்டம் செய்யவில்லையா?

இப்பொழுதும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரால், 5 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தொழிற்கல்விக்குச் செல்ல வேண்டும் என்பதன் பின்னணி என்ன? கிராமப்பகுதிகளில் எந்தத் தொழிற்சாலைகள் இருக்கின்றன - அந்த மாணவர்கள் பயிற்சி பெறுவது எப்படி? இயல்பாக அப்பன் தொழிலுக்குத்தானே  செல்லுவார்கள்.

இந்தச் சூழ்ச்சிக்கு அண்ணா பெயரில் உள்ள ஒரு கட்சி  துணை போவது வெட்கக் கேடு அல்லவா!

சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால் மத்திய பா... ஆட்சி அதன் ஆணிவேரை  வெட்டும் வேலையை வேக வேகமாகச் செய்து கொண்டிருக்கிறது.

'நீட்' என்னும் கொடுவாள் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதன் விளைவு அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனியாகி விட்டது.

+2 முடித்து கல்லூரிகளுக்குச் செல்வதற்குக் கூட நுழைவுத் தேர்வாம். ஆக பெரும்பாலான முதல் தலை முறையாக கல்விக் கூடங்களில் காலடி வைப்பவர்களை, பள்ளிப் படிப்பைக் கடந்து கல்லூரிகளில் காலடியைப் பதிக்க விடாமல் காலை வெட்டும் கொலை பாதக வேலையில் இறங்கி விட்டனர். ஒவ்வொரு நாளிலும் சமூக நீதிக்கு எதிராக முடிவுகள் வந்து கொண்டுள்ளன.

சிறுபான்மை எண்ணிக்கையினர் சூழ்ச்சிவலை விரித்து, பெரும்பான்மையான வெகுமக்களை வீழ்த்தும் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு, நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பித்தாக வேண்டும். இந்த அடி அகில இந்தியாவிலும் எதிரொலிக்க வேண்டும்.

தமிழ் மண்தான் திராவிட பூமி - தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் - பாடம் சொல்லி கொடுக்கும் ஆசான்தான் இந்த மண்.

மதத்தைக் காட்டி, மக்களின் பக்தியையும் பயன்படுத்தி, ஏமாற்ற நினைக்கும் சக்திகளுக்கு தமிழ்நாடு கொடுக்க இருக்கும்  தண்டனைதான் - இந்திய துணைக் கண்டத் திற்கே விடியலை ஏற்படுத்தப் போகிறது. விழிப்புடன் கடமையாற்றுவீர்!

Comments